Published:Updated:

டெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட்! - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்?

டெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட்! - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்?
டெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட்! - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்?

மெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

டெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட்! - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்?

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, கலிபோர்னியாவில் அமைந்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பு நிறுவனத்தைப் பார்வையிட்டார். டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், 2018- ம் ஆண்டு மார்ச் மாதத்தில்  'எங்களின் அடுத்த இலக்கு இந்தியா என்றும் ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்திய அரசின் நிபந்தனைகள் இந்தியாவில் கால் பதிக்கத் தடையாக இருக்கிறது' என்று ட்வீட் செய்திருந்தார். சுமார்  35,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்ட மாடல்-3 ரக கார்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டுமென்பது எலான் மஸ்க்கின் திட்டம்.  இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்லா நிறுவனத்தின் இந்தியாவைச் சேர்ந்த தலைமை நிதி அதிகாரி தீபக் அவுஜா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனம்  தொடங்குவது தொடர்பான பணிகளை இவர் கவனித்து வந்தார். தீபக் அவுஜாவின் விலகலும் இந்த நிறுவனத்தை இந்தியாவில் தொடங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட்! - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்?

இந்நிலையில் , சென்னையைச் சேர்ந்த அசோக் லேலாண்ட் நிறுவனம் டெஸ்லா நிறுவனத்துடன் கைகோக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வெங்கடேசன் நடராஜன் கூறுகையில், ''டெஸ்லா நிறுவனம் தரும் வாய்ப்பில் இணைய நாங்கள் விருப்பத்துடன் உள்ளோம். இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் பல நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும். புதிய டெக்னாலஜி அறிமுகமாகும்போது, அதை நாம் முயன்று பார்க்க வேண்டும். அதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மை விளைய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் ட்வீட்டுக்கு 10 மாதங்களுக்குப் பிறகு, அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியிடமிருந்து பதில் கிடைத்துள்ளது. ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலாண்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து தயாரிப்பு நிறுவனம். உலகளவில் 4வது பெரிய ட்ரக் தயாரிப்பு நிறுவனம். 

எப்போதுமே, புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கத் தயங்காத சீனா, ஷாங்காய் நகரத்தில் டெஸ்லா நிறுவனம் அமைக்க அனுமதி அளித்துவிட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் டெஸ்லா நிறுவனத்துக்கு அங்கு அடிக்கல்லும்  நாட்டப்பட்டுவிட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து மாதம்  50,000 எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யலாம். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகத் தற்போது, உலகில் எலக்ட்ரிக் கார்கள் அதிகம் தயாரிக்கப்படும் நகரம் ஷாங்காய்.

Vikatan