Published:Updated:

"கைப்பந்து ஆடத் தெரியாத ஆள் இல்லை!"

"கைப்பந்து ஆடத் தெரியாத ஆள் இல்லை!"

"கைப்பந்து ஆடத் தெரியாத ஆள் இல்லை!"

"கைப்பந்து ஆடத் தெரியாத ஆள் இல்லை!"

Published:Updated:
"கைப்பந்து ஆடத் தெரியாத ஆள் இல்லை!"

கானுயிர் புகைப்படக் கலையைப் பொழுதுபோக்குக்காக அல்லாமல் கானகப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்துபவர் ஜெயப்பிரகாஷ். ஆயிரக்கணக்கான இணைய தள வாசகர்களைத் தன் வலைப்பூ மூலம் இயற்கைப் பாதுகாவலர்களாக மாற்றியவர். செய்தியாளர், கல்லூரியில் இதழியல் துறை உதவிப் பேராசிரியர் எனப் பன்முகம்கொண்ட ஜெயப்பிரகாஷ், தன் சொந்த ஊரான கோவை மாவட்டம், தடாகம் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

"கைப்பந்து ஆடத் தெரியாத ஆள் இல்லை!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''மேல் இருந்து பார்க்கும்போது தடாகம் ஒரு பள்ளத்தாக்கு. சுற்றிலும் இயற்கையின் எழில் கொஞ்சும் மலையில் இருந்து வீசும்  தென்றல் தாலாட்ட... கவலை இல்லாமல் கண் உறங்கும் ஊர் இது. கிணற்றுப் பாசனத்தின் தயவில் கரும்பு, வாழை, பூக்கள் என்று விவசாயம் நடந்தது. இதில் தடாகம் தட்டுச் சோளம் புகழ்பெற்றது. எட்டு அடி உயரத்துக்கு வளர்ந்து நிற்கும் சோளத்தை அறுவடை செய்வதே திருவிழாபோல நடக்கும். ஊரில் இருந்து சிறுத்தை, யானை, செந்நாய் எல்லாம் கூப்பிடும் தொலைவில் போய்க்கொண்டு இருக்கும். ஆனால், கூப்பிடாமலே அவ்வப்போது எட்டியும் பார்க்கும். கன்றுக் குட்டியைக் காண வில்லை என்றால், சிறுத்தை வந்துபோனதாக அர்த்தம். ஆட்டுக் குட்டியைக் காணவில்லை என்றால், செந்நாய் வந்துபோனதாக அர்த்தம். கரும்புத் தோட்டத்தைக் காணவில்லை என்றால், யானைகள் விருந்துண்டு போனதாக அர்த்தம். ஆனால், இந்த வனப் பகுதிகளில் ஆசிரமம், ஆராய்ச்சி மையம், கேளிக்கை விடுதிகள் கட்டியதில் காடுகள் குறைந்துபோயின. இதனால், நிலத்தடி நீர் வற்றி ஒரு கட்டத்தில் விவசாயம் அழிந்துபோயிற்று. என் கண் முன்பே சோளக் காட்டுக்குத் தீ வைத்து எரித்து, செங்கல் சூளை ஆக்கினார்கள். ஆனால், ஓர் ஆச்சர்யம்... தடாகம் சோளத் தட்டு போலவே தடாகம் செங் கல்லும் பிரபலமானது. வளமான செம்மண், களிமண், மணல் இங்கே கிடைப்பதால் வலிமையான செங்கற்கள் கிடைத்தன. ஆனால், அதற்காகப் பள்ளம் தோண்டித் தோண்டி என் ஊர் பள்ளத்தாக்கில் இருந்து பாதாளத்துக்குச் சென்று கொண்டு இருக்கிறது.

"கைப்பந்து ஆடத் தெரியாத ஆள் இல்லை!"

தடாகத்தின் முக்கிய அடையாளம் கைப்பந்து. கைப்பந்து ஆடத் தெரியாத ஆள், ஊருக்குள் கிடையாது. பொழுது விடிந்தாலும் கைப்பந்துதான்... பொழுது அடைந்தாலும் கைப்பந்துதான். என் அப்பா ராயப்பன், தடாகம் கைப்பந்து குழுவின் கேப்டன். ஊருக்குள் மட்டும் விளையாடாமல் என் ஊரைச் சேர்ந்த ரவிராஜ், கனகராஜ் உள்ளிட்டோர் தேசிய அளவிலும் விளையாடினார்கள். அதனாலேயே அவர்களுக்கு அரசு வேலையும் கிடைத்தது. ஒரு கட்டத்தில் பெண்களும் கைப்பந்து விளையாட்டுக்கு வர, பெண்கள் அணியும் உருவானது.

கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள் கொம்பேறி ஆடுவார்கள். ஆலமரம், அரச மரம் எல்லாம் ஏறி கிளைக் கிளையாகத் தாவித் தப்பும் வீர விளையாட்டு இது. மழைக் காலம் வந்துவிட்டால் ஊரின் இருபுறமும் இருக்கும் தண்ணீர், பந்தல் ஓடையிலும் நஞ்சுண்டாபுரம் பள்ளத்திலும் வெள்ளமாகக் கரை புரண்டு ஓடும். ஊருக்கு நடுவே பொன்னி ஏரி பொங்கி ஊரே நிரம்பி வழியும். அப்போது எல்லாம் ஊருக்குள் அசுரத்தனமாக வளர்ந்து நின்ற புளிய மரங்களும், பலா மரங்களும் கொய்யா மரங்களும்தான் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தன.  

திருவிழா என்றால் அது மாரியம்மன் பண்டிகையும் கிருஷ்ண ஜெயந்தியும்தான். தீபாவளி எல்லாம் இரண்டாம்பட்சம். மாரியம்மன் பண்டிகைக்கு எங்கள் உறவினர்கள் எந்த ஊரில் இருந்தாலும் இங்கே வந்தாக வேண்டும். ஒரு வார காலம் பொங்கல்வைப்பது, கிடா வெட்டுவது, கோலப் போட்டி நடத்துவது, இசைக் கச்சேரி என ஊரே களைகட்டும். கிருஷ்ண ஜெயந்திக்கு வழுக்கு மர விளையாட்டுப் போட்டி நடக்கும்.

வாரத்தில் ஒரு நாள் வண்டி கட்டிக்கொண்டு ஆனைகட்டித் தாண்டி கேரளாவில் இருக்கும் கோட்டத் துறை சந்தைக்கு எங்கள் ஊர் ஆட்கள் செல்வார்கள். ஆடு, மாடு, கோழி தொடங்கி காய்கறி வரை கொடுக்கல் - வாங்கல் தூள் பறக்கும். இப்படி உழைப்பும், உணர்வுமாகக் கழிபவைதான் என் ஊர் நாட்கள்!''

"கைப்பந்து ஆடத் தெரியாத ஆள் இல்லை!"

சந்திப்பு: எஸ்.ஷக்தி,
படங்கள்: தி.விஜய்