Published:Updated:

காவல்துறை நடவடிக்கை மேல் திருப்தி இல்லையா? கைகொடுக்கிறது 'Police Feedback System'

காவல்நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களின் நிலைகுறித்து அறிந்துகொள்ளவும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லையென்றால் மேலதிகாரிகளிடம் முறையிடவும் புதிய சிஸ்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது சேலம் மாநர காவல்துறை.

காவல்துறை நடவடிக்கை மேல் திருப்தி இல்லையா? கைகொடுக்கிறது 'Police Feedback System'
காவல்துறை நடவடிக்கை மேல் திருப்தி இல்லையா? கைகொடுக்கிறது 'Police Feedback System'

மிழ்நாட்டிலேயே முதல்முறையாக சேலம் மாநகர காவல்துறை, `Police Feedback System' என்ற புதிய மென்பொருள் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் காவல்நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களின் நிலைகுறித்து அறிந்துகொள்ளவும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லையென்றால் மேலதிகாரிகளிடம் முறையிடவும் முடியும். சேலம் மாநகரத்தின் கீழ் உள்ள15 காவல் நிலையங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து கண்காணிக்க, தற்போது பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இது எந்தளவுக்கு பொதுமக்களுக்குப் பயனளிக்கும் என்பதுகுறித்து காவல்துறை அதிகாரியான கருணாநிதியிடம் பேசினோம்.

``வழக்கமாக ஒரு காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?"

``பொதுவாக எல்லா காவல் நிலையங்களிலும் புகார் அளிப்பவரின் விவரங்கள் எழுத்து வடிவில் குறிப்பெடுக்கப்பட்டு, பின்னர் காவல் அதிகாரியிடம் தரப்படும். அதன்பின்னர் புகாரின் தன்மைக்கேற்ப (FIR) பதிவுசெய்யப்பட்டு தரப்படும். இந்த நடைமுறையில் ஒரு சிறிய மாறுதலை மட்டும் செய்துள்ளோம். அதன்படி புகார் விவரங்கள் உடனே கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரியின் விவரங்களும் பதியப்படும். அந்த அனைத்துத் தகவல்களும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள சர்வரில் பதிவாகும். பின்னர் அந்தப் புகார் அளித்த மனுதாரர்களை, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் (Police Feedback System Officers) தொலைபேசியில் தொடர்புகொண்டு, காவலர்கள் மனுதாரரிடத்தில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள், புகார்களை ஏற்கிறார்களா, இல்லையா அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட புகாருக்கு நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்பதைப் பொதுமக்கள் வாயிலாகக் கேட்டறிந்து, அத்தகவல் நேரடியாக உயர்அதிகாரிகளுக்குச் சென்றடையும். இப்படித்தான் இந்த சிஸ்டம் செயல்படும்."

``இது பொதுமக்களுக்கு எந்தளவில் பயன்படும்?"

``காவல்நிலைய அதிகாரிகளின் நடவடிக்கைகளை உயர்அதிகாரிகளிடத்தில் தெரிவிக்க மக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் இது. புகார் அளிக்கவரும் எந்த ஒரு நபருக்கும் இது, ``தன் புகார் கொடுக்கப்பட்ட காவல்நிலையத்திலிருந்து காவல் ஆணையாளர் பார்வைக்குச் சென்றுவிட்டது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற நம்பிக்கையை உருவாக்கும்."

காவல்துறை நடவடிக்கை மேல் திருப்தி இல்லையா? கைகொடுக்கிறது 'Police Feedback System'

``புகார்மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், என்ன நடக்கும்?

``மென்பொருளில் Under process-ல் உள்ள புகார் மற்றும் தீர்க்கப்பட்ட புகார்களை அடையாளம் காணும் வசதி உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிக்கும்மேல் புகார்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், காவல் ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில் குறைதீர்ப்பு முகாம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இது புகார் அளிக்க புதிதாக ஏற்படுத்தப்பட்ட மென்பொருள் இல்லை. இது புகார் பெறும் அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பற்றி, காவல் ஆணையாளர் கண்காணிப்புக்கு கொண்டுசெல்ல உருவாக்கப்பட்ட மென்பொருள். எனவே இது புகார்களை முழுமையாகத் தீர்க்காவிட்டாலும்கூட, புகார்களின் மீதான நடவடிக்கைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்.

``கடந்த சில மாதங்களில் மென்பொருள் ஏற்படுத்திய தாக்கம் என்ன?"

``மென்பொருள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதையடுத்து மாநகரத்தில் உள்ள 15 காவல் நிலையங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 80-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது வரை 6300-க்கும் மேற்பட்ட புகார்களைப்பெற்று அவற்றிற்குத் தீர்வு கண்டுள்ளோம். மேலும் நாள்தோறும் காவல் நிலையத்திற்கு எத்தனை புகார்கள் வந்துள்ளன, அதில் எத்தனை புகார்களை டிஸ்போஸ் செய்துள்ளனர், எத்தனை புகார்கள் நிலுவையில் உள்ளன என்பதை நேரடியாக தினமும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கக்கூடிய வகையில் உள்ளது. அதோடு மட்டுமன்றி புகார்களை டிஸ்போஸ் செய்த, ஒரு மாதத்திற்குப் பின்னர் மீண்டும் மனுதாரரை அணுகி விசாரணை மற்றும் நடவடிக்கைகளில் திருப்தியா, திருப்தி இல்லையா எனக் கேட்டறிந்து, திருப்தி இல்லையெனில் மாநகர காவல் ஆணையாளரின் மேற்பார்வையில் குறைதீர்ப்பு முகாம் மூலம் மனுதாரர் மற்றும் விசாரணை செய்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இது சேலம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது." என்றார்.

காவல்துறை நடவடிக்கை மேல் திருப்தி இல்லையா? கைகொடுக்கிறது 'Police Feedback System'

இது மட்டுமன்றி, ஒரு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளை மூன்றாகப் பிரித்து, மூன்று whatsapp குழுக்களை உருவாக்கி அதில் ஒரு தெருவிற்கு ஐந்து நபர் அல்லது ஆறு நபர் வீதம் 250 நபர்களை இணைத்து அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஏதாவது ஒரு பிரச்னை என்றால், அதைக் குழுவில் பதிவிடும்போது அக்குழுவில் இருக்கும் காவலர்கள் (ரோந்துப் பணியில் இருப்பவர்) அடுத்த 5 நிமிடங்களில் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை எடுப்பார்கள். தற்போது 9000-க்கும் மேற்பட்ட நபர்கள் குழுவில் இணைந்துள்ளனர். எஞ்சியுள்ள நபர்களையும் விரைவில் இணைக்க முயற்சி செய்துவருகிறோம். இந்த Police Feedback System மென்பொருளை சேலம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த கணினி பொறியியல் பிரிவு மாணவர்களான ஜெயராமன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் சேர்ந்து தயாரித்துள்ளனர். இந்தச் சேவையை உருவாக்கிக் கொடுத்த மாணவர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கர் IPS, அண்மையில் பாராட்டுச் சான்று வழங்கி கௌரவித்தார். 

இதுகுறித்து அந்த மாணவர்களிடம் பேசினோம், ``இந்த சேவை முயற்சி வெற்றி அடைந்ததற்கு முழுக் காரணமும் கமிஷனர்தான். இப்படி ஒரு மென்பொருள் செய்யவேண்டும் என எங்கள் கல்லூரியின் (அரசு பொறியியல் கல்லூரி) முதல்வர் மற்றும் கணினிப் பொறியியல் துறை HOD-யைக் கேட்டுள்ளார். அதையடுத்து ஏற்கெனவே நாங்கள் இருவரும் பல்வேறு இணையதளங்களை உருவாக்கியிருந்ததால் கல்லூரியில் எங்களைத் தேர்ந்தெடுத்தனர். பின்னர் என்ன செய்யவேண்டும் என கமிஷனர் அழைத்துத் தெளிவாக விளக்கியதால், அடுத்த ஒருவாரத்தில் இதை உருவாக்கி முடித்தோம். சோதனை முறையில் இது தற்போதுவரையில் 6300 புகார்களுக்கு தீர்வுகண்டுள்ளதால் சேலம் மக்கள் மத்தியில் மிகுந்தவரவேற்பைப் பெற்றிருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டைத் தெரிவித்துவருகின்றனர். இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி" என்றனர்.

Vikatan