Published:Updated:

”இன்னைக்கும் லீவு சார்... தண்ணி லாரி வரல!” - சென்னை OMR-ன் பரிதாப நிலை

”இன்னைக்கும் லீவு சார்... தண்ணி லாரி வரல!” - சென்னை OMR-ன் பரிதாப நிலை
”இன்னைக்கும் லீவு சார்... தண்ணி லாரி வரல!” - சென்னை OMR-ன் பரிதாப நிலை

சென்னையின் மிகப்பெரிய நீராதாரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள். என்ன ஆனாலும் அவை தண்ணீர் தரும் என நீர் ஆராய்ச்சியாளர்கள் முன்பு சொல்லுவார்கள். அந்த இடத்திலிருந்து சில கி.மீ தூரமே இருக்கும் பகுதிகள்தான் இப்போது தண்ணீருக்காக அலைந்துகொண்டிருக்கின்றன.

ஐ.டி மக்கள் மீது ஒரு பிம்பம் உண்டு. “ஓ.எம்.ஆர்ல சம்பாதிக்கிறத ஈ.சி.ஆர்ல செலவு பண்றவங்கதான” என்று சொல்வார்கள். மற்ற பகுதி ஐ.டி.வாசிகள் எப்படியோ... OMR, ECR வாசிகள் தண்ணீராகச் செலவு செய்கிறார்கள் என்பதைவிட, தண்ணீருக்காக அதிகம் செலவு செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

கடந்த 10,15 ஆண்டுகளில் வளர்ச்சி கண்ட இந்தப் பகுதிகளில்தான் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம். ஆனால், பெரும்பாலான கேட்டட் கம்யூனிட்டிகளில் (gated community) போர்வெல் என்பதே கிடையாது. மெட்ரோ வாட்டரும் கிடையாது. தண்ணீருக்கான இவர்களின் ஒரே  மூலாதாரம், தண்ணீர் லாரிகள்தாம். திருப்போரூருக்கு அந்தப் பக்கமிருக்கும் கிராமங்களில் விவசாயிகளின் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, அந்த நிலத்தடி நீரைத்தான் OMR, ECR மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகளில் விநியோகம் செய்துவருகின்றன தனியார் நிறுவனங்கள். ஒரு ஃபோன் செய்தால் போதும், லாரி வந்துவிடும். 5 முதல் 10 லட்சம் வரை கடன் சொன்னாலும் தண்ணீர் தந்துவிடுவார்கள். காரணம், தண்ணீருக்காக வேறு ஒரு வழியை யாரும் கண்டுவிடக் கூடாது என்பதுதான். அந்த ஒற்றைத் தீர்வு உத்திதான் இப்போது பெரும் பிரச்னையாக மாறியிருக்கிறது.

நேற்று ஒரு செய்தி வெளியானது. “27-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்” என்ற அந்தச் செய்தி, ஒட்டுமொத்த OMR, ECRவாசிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே, தண்ணீர் லாரிகளின் விலை அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் 2-3 மணி நேரத்தில் வந்த லாரித் தண்ணீர், இப்போது ஒன்றிரண்டு நாள்கள் கழித்தே கிடைக்கிறது. இந்தச் சூழலில் வேலை நிறுத்தமா என அலறினார்கள். எக்ஸிட் போல் பற்றி அரசியல் ஆராய்ந்த அத்தனை வாட்ஸ் -அப் குரூப்பிலும் இப்போது இதுபற்றிய விவாதங்கள்தாம். பயந்துபோய் ஆளாளுக்கு லாரி கேட்க, அவர்களும் வழியற்றுப்போனார்கள். அப்படியே வந்தாலும், வீட்டிலிருக்கும் ஒரு வாட்டர் பாட்டில் விடாமல் எல்லாவற்றிலும் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வதால், பல நாள் தாங்கும் தண்ணீரின் அளவு சில மணி நேரத்திலே தீர்ந்துபோனது.

”இன்னைக்கும் லீவு சார்... தண்ணி லாரி வரல!” - சென்னை OMR-ன் பரிதாப நிலை

சோழிங்கநல்லூரிலிருக்கும் ஒரு கேட்டட் கம்யூனிட்டிவாசி முருகனிடம் இதுபற்றிக் கேட்டேன்.

“எங்க அப்பார்ட்மென்ட்ல மொத்தம் 1000 வீடு. 700 வீடுகள்ல ஆளுங்க வந்துட்டாங்க. 2500 பேர்கிட்ட இருக்கோம். ஒரு வருஷமாவே தண்ணி லாரிதான். இன்னும் எங்களோட மெயின்ட்டெனன்ஸ் வேலைகளை பில்டர்தான் பாக்குறாங்க. ஏன்னா, 2 வருஷத்துக்கான  பணத்தை முன்னாடியே எங்ககிட்ட வாங்கிட்டாங்க. தண்ணி லாரி வர வைக்கிறதெல்லாம் அவங்க வேலைதான். ஆனா, சரியா பேமென்ட் பண்ணாததால, அப்பப்ப லேட்டா வரும். இப்ப டிமாண்டு அதிகமா இருக்கிறதால சுத்தமா வரல. 2 நாளா ஆபீஸே போகல. வேற என்ன சோர்ஸ்னே தெரில. அக்ரிமென்ட்படி போர்வெல் போட்டிருக்கணும். ஆனா, தண்ணி உப்புன்ற காரணத்தால போடல. வீடு வாங்கினப்புறம் கேட்டா என்ன பதில் கிடைக்கப்போகுது? தண்ணி வரிகூட கட்டுறோம். ஆனா, மெட்ரோ வாட்டருக்கான கனெக்‌ஷன் கூட இல்ல. மெட்ரோல தண்ணி லாரி புக் பண்ணா 20 நாள் ஆகுது. இங்க வீடு வாங்கினது எங்க தப்புதான். ஆனா, அரசாங்கம்தான இதுக்குத் தீர்வு தரணும்” என்று கொந்தளித்தார்.

அனைத்து மக்களுக்கும் சுத்தமான தண்ணீர் தரவேண்டியது அரசின் கடமை. அதற்கு வழி செய்யாமல், நகரத்தை விரிவாக்கம் செய்துகொண்டேபோவது முட்டாள்தனம்தான். OMR சாலையின் நீளம், மத்திய கைலாஷிலிருந்து கேளம்பாக்கம் வரை மட்டுமே 23 கி.மீ.  3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் 12 லட்சம் பேர் இந்தப் பகுதியில் வசிக்கிறார்கள். அதுபோக, பல லட்சம் பேர் வேலைக்காக இங்கு வந்து செல்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இங்கிருக்கும் நிலத்தடி நீர் உப்பாக இருப்பதால், அதைப் பயன்படுத்தவே முடியாது. அதனால், 3 கோடி லிட்டர் தண்ணீரில் 90 சதவிகிதம் லாரி தண்ணீர்தான். 

”தண்ணீர் எடுக்க தங்கள் நிலங்களை விவசாயிகள் கொடுப்பது எப்போதுமே அந்தப் பகுதியில் பிரச்னைதான். இப்போது, சென்னை முழுக்கவே தண்ணீர்ப் பிரச்னை அதிகரித்திருப்பதால், அங்கே தண்ணீர் எடுக்க எதிர்ப்பு வலுத்திருக்கிறது. சென்ற வாரம், காவலர்கள் அந்தப் பகுதியில் முறையற்ற தண்ணீர்க் கிணறுகளை மூடியிருக்கிறார்கள். அதனால் லாரி ஓட்டுநர்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. அரசிடம் அதுபற்றி பேசத்தான் இப்போது வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். அரசு உடனே இதைப்பற்றி பேசி சரி செய்ய வேண்டும்” என்கிறார், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த அபிஷேக்.

”இன்னைக்கும் லீவு சார்... தண்ணி லாரி வரல!” - சென்னை OMR-ன் பரிதாப நிலை

ஈ.சி.ஆரிலிருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், இந்தப் பகுதி மக்களுக்கு என்றுதான் தொடங்கும்போது சொன்னார்கள். ஆனால், ஒரு சொட்டு நீர்கூட இவர்களுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. OMR -க்கு என அப்படியொரு பிரத்யேக பிளான்ட்டு தேவை என்பது இவர்களின் நீண்டகால கோரிக்கை. அடுத்த சில நாள்களில் பிரச்னை சரியாகவில்லையென்றால், சாலைக்கு வந்து போராடுவதுதான் ஒரே வழி என்கிறார்கள், OMRவாசிகள்.

ஐ.டி நிறுவனங்கள், உணவு விடுதிகள், வீடுகள் மட்டுமல்ல கட்டுமானத்துறையும் இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மந்தமான நிலையிலிருந்த ரியல் எஸ்டேட், இப்போதுதான் கொஞ்சம் வளர்ந்தது. அதற்குள் தண்ணீர்ப் பிரச்னை அவர்களுக்குத் தலைவலி ஆகியிருக்கிறது. இந்தப் பகுதியில் கட்டப்படும் புதிய வீடுகளின் விற்பனையை இது பாதிக்கும் என்பது ஒரு பிரச்னை. அவற்றைக் கட்டி முடிக்கவே தண்ணீர் இல்லையென்பது இன்னொரு பிரச்னை.

இது கோடை விடுமுறைக்காலம். பலர் வெளியூர்களுக்குப் போயிருக்கிறார்கள். அவர்களெல்லாம் திரும்பினால், தண்ணீர்த் தேவை இன்னும் அதிகரிக்கும். அதை சென்னை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது தெரியவில்லை. சில அப்பார்ட்மென்ட்டில் பொறுப்புடன் தண்ணீரைச் சேமிக்க மழைநீர் வடிகால் அமைத்திருக்கிறார்கள். மறுசுழற்சி செய்கிறார்கள். சிக்கனமாகத் தண்ணீரைச் செலவு செய்ய பல வழிகளைக் கையாள்கிறார்கள். அவற்றை அனைவரும் பின்பற்றுவது அவசியம். அரசும் சில அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறது. 

சென்னையின் மிகப்பெரிய நீராதாரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள். என்ன ஆனாலும் அவை தண்ணீர் தரும் என நீர் ஆராய்ச்சியாளர்கள் முன்பு சொல்லுவார்கள். அந்த இடத்திலிருந்து சில கி.மீ தூரமே இருக்கும் பகுதிகள்தான் இப்போது தண்ணீருக்காக அலைந்துகொண்டிருக்கின்றன. 

வந்தாரை வாழவைத்த சென்னையை யார் வாழ வைக்கப்போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. 

Vikatan
பின் செல்ல