Published:Updated:

ஊட்டி மலர்க் கண்காட்சி: ஆளுநரின் வருகையும்... சுற்றுலாப் பயணிகளின் தவிப்பும்!

ஊட்டி மலர்க் கண்காட்சி: ஆளுநரின் வருகையும்... சுற்றுலாப் பயணிகளின் தவிப்பும்!
ஊட்டி மலர்க் கண்காட்சி: ஆளுநரின் வருகையும்... சுற்றுலாப் பயணிகளின் தவிப்பும்!

"ஊட்டியில் மலர்க் கண்காட்சி நடைபெறுவதைக் கேள்விப்பட்டு குடும்பத்துடன் முதல்முறையாக ஊட்டி வந்தோம். பணம் செலவுசெய்து நான்கு நாள்கள் ஊட்டியில் தங்கினோம். நான்கு நாள்களும் அறையில் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டது."

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக, இந்த ஆண்டு கோடை விழாவில் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. நூற்றாண்டுப் புகழ்வாய்ந்த ஊட்டி மலர்க் கண்காட்சி மற்றும் குன்னூர் பழக் கண்காட்சியை மட்டும் நடத்த முடிவுசெய்தனர். கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான 123-வது மலர்க் கண்காட்சி 17-ம் தேதி  தொடங்கியது. 5 நாள்கள் நடைபெறும் இந்த மலர்க் கண்காட்சியைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார்.

ஊட்டி மலர்க் கண்காட்சி: ஆளுநரின் வருகையும்... சுற்றுலாப் பயணிகளின் தவிப்பும்!

வழக்கமாக ஊட்டி மலர்க் கண்காட்சியை முதல்வர் தொடங்கிவைப்பார். நிறைவு விழாவில் ஆளுநர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்குவார். இந்த முறை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இந்த நிலையில், 17-ம் தேதி தொடங்கிய மலர்க் கண்காட்சிக்கு, அதைத் தொடங்கிவைப்பதற்காக 16-ம் தேதியே ஊட்டி வந்தடைந்த  தமிழக ஆளுநர், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் தங்கினார்.

ஆளுநரின் வருகையையொட்டி, மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை போக்குவரத்து பல மணி நேரம் நிறுத்தப்பட்டது.17-ம் தேதி காலை மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்த கையோடு,  ஊட்டி குதிரைப் பந்தய மைதானத்துக்குச் சென்று, குதிரைப் பந்தயத்தைக் கண்டு ரசித்தார். பின்னர், வெற்றிபெற்றவர்களுக்கு ஆளுநர் கோப்பையை வழங்கினார். பிறகு மறுநாள் 18-ம் தேதி காலை, முதுமலைப் புலிகள் காப்பகம் மற்றும் சிங்காரா நீர்மின் நிலையத்துக்குச் சென்றார். பிறகு, 19-ம் தேதி அவலாஞ்சி பகுதியைச் சுற்றிப் பார்த்தார். பின்னர், அன்று இரவே ஊட்டி அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கில் 1960-ல் வெளியான, `முகல் இ ஆசம்' படத்தை மும்பையிலிருந்து டெக்னீஷியன்கள் வரவழைக்கப்பட்டுச் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்து நள்ளிரவுவரை படம்பார்த்து மகிழ்ந்தார்.

ஊட்டி மலர்க் கண்காட்சி: ஆளுநரின் வருகையும்... சுற்றுலாப் பயணிகளின் தவிப்பும்!

20-ம் தேதி ஊட்டியில் நடைபெற்ற பழங்குடியினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், பைக்காரா படகு இல்லம் சென்று படகு சவாரியில் ஈடுபட்டார். 21-ம் தேதி காலை ஊட்டியிலிருந்து கான்வாயில் வெல்லிங்கடன் சென்ற ஆளுநர், வெல்லிங்கடன் மலை ரயில் நிலையத்திலிருந்து மலை ரயிலில் தனிப் பெட்டியில் குடும்பத்துடன் ஊட்டி வந்தார். இப்படி, ஊட்டியைச் சுற்றியிருந்த சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பார்வையிட்ட ஆளுநரால், பாதுகாப்பு கருதி போக்குவரத்து ஸ்தம்பிக்கத் தொடங்கியது. இதனால், சுற்றுலா சென்ற பயணிகள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆளுநரின் பாதுகாப்புக்காக, வழியெங்கும் சாலை ஓரங்களில் போலீஸ் பாதுகாப்பு, முன்னும்பின்னும் படைசூழ 20 வாகனங்கள், எஸ்.பி., கலெக்டர், நூற்றுக்கணக்கான போலீஸார் என இவர் செல்லும் சாலை எங்கும் ஒருமணி நேரத்துக்கு முன்னரே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவஸ்தையைச் சந்தித்தனர். 

கோடை சீசன் உச்சத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில், சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கடந்த 5 நாள்களில் ஊட்டிக்கு வருகை புரிந்துள்ளனர். ``ஆளுநர், சுற்றுலாவில் ஈடுபட்ட 5 நாள்களும் தங்கள் இயல்பு வாழ்க்கையே முடங்கிவிட்டது" என உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.

ஊட்டி மலர்க் கண்காட்சி: ஆளுநரின் வருகையும்... சுற்றுலாப் பயணிகளின் தவிப்பும்!

ஊட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி, ``ஊட்டியில் இதுவரை இப்படி ஒரு மோசமான கோடை சீசன் இருந்ததில்லை. உள்ளூர் மக்களால் நடந்துகூடச் செல்ல முடியவில்லை. வெளிமாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் போலீஸ் குவிக்கப்பட்டது. `ஆளுநர் வருகிறார்' என்ற ஒரே காரணத்தால், நடந்துசெல்பவர்களைக்கூட போலீஸார் தடுத்து நிறுத்தினர். எங்களால் கடைகளுக்குக்கூடச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆளுநர் பைக்காரா செல்கிறார் என்பதற்காக, தொடர்பே இல்லாத தொட்டபெட்டா சாலையில் போக்குவரத்தை நிறுத்தினார்கள். இதனால் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி மனோஜ், ``ஊட்டியில் மலர்க் கண்காட்சி நடைபெறுவதைக் கேள்விப்பட்டு குடும்பத்துடன் முதல்முறையாக ஊட்டி வந்தோம். பணம் செலவுசெய்து நான்கு நாள்கள் ஊட்டியில் தங்கினோம். நான்கு நாள்களும் அறையில் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. முதல் நாள், பூங்காவுக்குக் குழந்தைகளுடன் சென்றோம். ஆளுநர் கான்வாய் வருகிறார் என்று அங்கே விடாமல் தடுத்தனர். மறுநாள், முதுமலை சென்றோம்; அங்கும் ஆளுநர் வருகிறார் எனப் பல மணி நேரம் வாகனத்தை நிறுத்தினார்கள். இதனால் சுமார் 3 மணி நேரம் காட்டில் குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல் அவதிப்பட்டோம். தொட்டபெட்டா காட்சி முனைக்கு ஆளுநர் செல்வார் என்பதால் 4 நாள்களுக்கு முன்னரே சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. இதனால் எங்களைப்போன்ற பல சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினோம்" என்றார்.

ஊட்டி மலர்க் கண்காட்சி: ஆளுநரின் வருகையும்... சுற்றுலாப் பயணிகளின் தவிப்பும்!

``ஆளுநர் குடும்பத்துடன் சுற்றிப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதே சமயம், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிறைந்த வேளைகளில் சுற்றுலாப் பயணிகளைத் தொந்தரவு செய்தும் அவசர தேவைகளுக்குக்கூட 5 நாள்களாக மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தடுப்பது எந்த மாதிரியான ஜனநாயகம்?" எனக் கேள்வி எழுப்புகின்றனர், பொது மக்கள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு