Published:Updated:

பருப்பு கொடுப்பதும் அரிசி நிறுப்பதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் !

செய்தி மற்றும் படங்கள்: ஆ.நந்தகுமார்

 ##~##

''பொதுவாகரேஷன் கடைகள் மாதத்தில் பாதி நாட்கள் திறந்து இருப்பதே அரிது. அந்தப் பாதி நாட்களிலும் அரிசி இல்லை, கோதுமை இல்லை என 'இல்லை’ பதில்கள் மட்டும்தான் அரிசிக்கும் கோதுமைக்கும் பதிலாகக் கிடைக்கும். ஆனால், விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தில் உள்ள ஒரு ரேஷன் கடை, மாதம் முழுவதும் திறந்து இருக்கிறது. இதைவிட ஆச்சர்யம்

இந்த ரேஷன் கடையை நடத்துவது முழுக்க முழுக்கப் பெண்களே!'' - இப்படி ஒரு ரசனையான மொழியில் நம் வாசகர் வாய்ஸ்நாபுக்குத் தகவல் தெரிவித்து இருந்தார் வாசகி அமுதலட்சுமி.

உடனே ரேஷன் கடைக்கு ஆஜர் ஆகி விற்பனையாளர் மங்களலட்சுமியைச் சந்தித்தேன். ''1999-ல் 'மழைச் சாரல்’ என்ற சுய உதவிக் குழுவை ஆரம்பிச்சு சின்னச் சின்ன தொழில்களைச் செஞ்சிக்கிட்டு இருந்தோம். 2004-ல் 'செயல்படாத ரேஷன் கடைகளை மகளிர் சுய உதவிக் குழுவிடம் தரலாம்’னு ஆரசு ஆணை பிறப்பிச்சாங்க. சிறுவந்தாடு ரேஷன் கடையை எங்களுக்குத் தரணும்னு கலெக்டர்கிட்டே மனு கொடுத்தோம். நிறைய விசாரணை செய்து, எங்களுக்கு அனுமதி தந்தாங்க. அனுமதி வந்த  அடுத்த நிமிஷமே ஊர்ல எதிர்ப்பு வந்துடுச்சு. 'எப்படிப் பெண்கள்கிட்ட ரேஷன் கடையைத் தரலாம், அவங் களால எப்படி எல்லா வேலையும் செய்ய முடியும், ஊர்ல ஆண்களே இல்லையா?’னு ஆளுக்கு ஆள் பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, இந்த எதிர்ப்புதான் எங்களுக்குத் தாக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்துச்சு. ரேஷன் கடையைச் சிறப்பா நடத்திதான் அவங்க முகத்துல கரி பூசணும்னு முடிவு எடுத்தோம்.

பருப்பு கொடுப்பதும் அரிசி நிறுப்பதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் !

பெண்கள் ஏதாவது பண்ண ஆரம்பிச்சா எல்லார் கண்ணும் அதுலதான் இருக்கும். எதுல தப்பு கண்டுபிடிக்கலாம்னு காத்துக்கிட்டு இருப்பாங்க. அப்படித்தான் நாங்க ஆரம்பிச்சப் பவும் நிறையப் பிரச்னைகளைச் சந்திச்சோம். நாங்க எழுந்து நின்னு பில் போடலையாம், எல்லார் முன்னாடியும் உட்கார்ந்தே பில் போடுறோமாம். இதை ஒரு பெரிய விஷயமாக்கி பிரச்னை பண்ணினாங்க. இவங்க எல்லாம் பெண் டாக்டர்கிட்டேயும், பெண் இன்ஸ்பெக்டர் கிட்டேயும் போனா அவங்க என்ன எழுந்து நின்னா பதில் சொல்றாங்க? சாதாரண பெண் கள் முன்னுக்கு வந்துட்டா மட்டும் இவங்க ளுக்குப் பொறுக்காதே?

பருப்பு கொடுப்பதும் அரிசி நிறுப்பதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் !

இந்த ஊர்ல இருக்கிற 1,004 ரேஷன் கார்டுகளுக்கும் இந்த ஒரு கடைதான். மொத்தம் அஞ்சு பேர் வேலை பார்க்கிறோம். எவ்வளவு அரிசி, கோதுமை வேணும்கிறதுக்குத் தகுந்த மாதிரி டி.டி எடுக்கறது, அதை விழுப்புரத்தில் இருக்கிற குடோன்ல தந்து பொருள் வாங்கிட்டு வர்றதுனு எல்லா வேலையும் நாங்கதான் செய்றோம். சில நேரங்களில் ராத்திரி 10, 11 மணிக்கு எல்லாம் லோடு வரும். அப்பவும் நாங்கதான் கடையைத் திறந்துவெச்சு லோடைக் கணக்குப் பார்த்து வாங்கிவைப்போம். இதுக்கு எல்லாம் எங்களுக்கு அரசு சம்பளம் கிடையாது. ஒரு கிலோ அரிசிக்கு 45 காசு கமிஷன். இதில் லாரி வாடகை, ஆட்களுக்குக் கூலினு எல்லாம் போக, மீதி இருப்பதைத்தான் நாங்க பிரிச்சிக்குவோம். ஒருத்தர் லீவு போட்டா மத்தவங்க பார்த்துக்குவோம்கிறதால கடைக்கு லீவுங்கிற பேச்சே இல்லை'' என்றபடி, ''என்ன அன்னக்கா, ரேஷன் கார்டைப் புதுப்பிச்சிட்டீங்களா?'' என்றபடி பில் போடத் தொடங்கினார் மங்களலட்சுமி.

பருப்பு கொடுப்பதும் அரிசி நிறுப்பதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் !
அடுத்த கட்டுரைக்கு