கடந்த ஆறு மாதங்களில் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு சர்ச்சை என்றால் அது போயிங்கின் 737 MAX விமானங்கள் குறித்த சர்ச்சைதான். ஐந்து மாதத்தில் இரண்டு விபத்துகளைச் சந்தித்த இந்த விமானங்களால் மொத்தம் 346 உயிர்கள் பலியானது. முதல் விபத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் லயன் ஏர் (Lion Air) சேவையின் விமானம் ஜாவா கடலில் விழுந்ததில் 189 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பின் ஐந்தே மாதங்களில் எத்தியோப்பியாவில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான 737 MAX 8 விமானம் தரையில் மோதி 157 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளும் இந்த விமானங்களைப் பறக்க தடைவிதித்தன. இந்த விபத்துக்கு அந்தவகை விமானங்களில் இருந்த புதிய MCAS மென்பொருளும் கோளாறான சென்சார் ஒன்றும்தான் காரணமாக இருக்க வேண்டும் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்துகள் எப்படி நடந்தன என விரிவாகப் படிக்க இந்தக் கட்டுரையைப் படிக்கவும்,
இந்த ஒரு சென்சார்தான் 2 விமான விபத்துகளுக்கும் காரணம்? சிக்கலில் போயிங்
இப்படி 346 உயிர்களைப் பலிவாங்கிய இந்த மென்பொருளுக்கு அப்டேட் தயாராகிவிட்டதாகக் கடந்த வாரம் அறிவித்தது போயிங். இந்த அப்டேட் செய்யப்பட்ட MCAS மென்பொருளுடன் 207 விமானங்கள் 360 மணிநேரங்களுக்குச் சோதனை செய்துபார்க்கப்பட்டுள்ளதாம். அடுத்ததாக அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA) சான்றிதழுக்காக இவற்றை அனுப்பும் போயிங். இப்போதுவரை எதுவும் வரவில்லை எனத் தெரிவிக்கிறது FAA. இருப்பினும் இப்போதே அமெரிக்கன் ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் போன்ற விமான சேவைகள் இவற்றுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆகஸ்ட் மாதம் இந்த விமானங்களைப் பயன்படுத்தும் சேவைக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், 36 நாடுகளைச் சேர்ந்த 38,000 விமானிகளைப் பரிந்துரைக்கும் European Cockpit Association (ECA) அமைப்பு இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறது. ``ஐரோப்பிய விமானிகளைப் பொறுத்தவரையில், இந்த முன்னேற்றங்கள் ஒருவகையில் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. FAA மற்றும் போயிங் இந்த விமானங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாமா என்று பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், விமானத்தின் வடிவமைப்பில் இருக்கும் சவாலான விஷயங்கள் குறித்து இன்னும் எதுவும் பேசப்படவில்லை" என்று கூறிய அந்த அமைப்பு, FAA-வின் சோதனையை மட்டும் நம்பாமல் ஐரோப்பிய யூனியனும் தன்னிச்சையாகச் சோதனை செய்து அனுமதி வழங்க வேண்டும் என நிர்பந்தித்துள்ளது.
ஏற்கெனவே இந்த சர்ச்சைகளால் போயிங் மேல் மட்டுமல்லாமல் ஒழுங்குமுறை ஆணையமான FAA பெயரும் அடிவாங்கியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பேசி முடிவெடுக்க டெக்சாஸில் உலகமெங்கும் இருக்கும் விமான ஒழுங்குமுறை ஆணையங்களும் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளன.