Published:Updated:

என் ஊர்

அந்தக் காலத்தில் அகழி இருந்தது !படங்கள்: எஸ்.தேவராஜன்

என் ஊர்

அந்தக் காலத்தில் அகழி இருந்தது !படங்கள்: எஸ்.தேவராஜன்

Published:Updated:

வடலூர்

##~##

''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமானார் வாழ்ந்த வடலூரை என் ஊர் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்'' என்று பெருமிதத்துடன் ஊர் குறித்த செய்தி களைப் பகிர்ந்துகொள்கிறார் கவிஞர் ஆதிரை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒவ்வோர் ஆண்டும் தைத்திங்களில் வடலூரில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வில்லு வண்டி கட்டிக்கொண்டு மக்கள் கூட்டம் வடலூரை நோக்கித் திரளும். நான்கு தினங்கள் நடைபெறும் தைப் பூசத் திரு விழாவுக்கு என் தாயாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சென்றதும், அங்கு உள்ள கடைத் தெருக்களில் சுற்றித் திரிந்ததும் ராட்டினங்களில் சுற்றி மகிழ்ந்ததும் இன்றும் ஒவ்வொரு தைப் பூசத் திருநாளிலும் நினைவில் வந்துபோகும்.

என் ஊர்

கோட்டக்கரை எனும் பகுதியில் முன்பொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன் பூபதியின் கோட்டை இருந்ததாகவும், அதனைச் சுற்றிலும் ஆழமான அகழிகள் இருந்ததாக வும், சுரங்கப் பாதை வழியே மஞ்சள் நீர்க் குட்டை யில் அரசி நீராடச் செல்வார் என்றும் பெரியவர்கள் சொல்லிக் கேட்டது உண்டு. அந்த ஞாபகத்தில்  செடிகள் அடர்ந்த மேட்டுப் பகுதியில் இருந்த சுரங்கப் பகுதியை எட்டிப் பார்த்து விளையாடுவது எங்களின் பொழுது போக்கு. முன்னோர்களின் வாழ்வியல் எச்சமாக இருந்த கோட்டைக்கரை இன்று வீட்டுமனைகளாக மாறி சுரங்கப் பாதை, அகழி எல்லாம் தொலைந்து போய்விட்டன.

சனிக்கிழமைதோறும் வடலூரில் கூடும் வாரச் சந்தை சிறப்பு வாய்ந்தது. காய்கறிச் சந்தை, மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை என்று வடலூர் சனிக்கிழமைகளில் நெரிசலில் சிக்கித் தவிக்கும். சந்தைத் தோப்பு அருகில் உள்ள அய்யனார் கோயிலில் குதிரை சிலைகளைப் பார்த்து மிரண்ட நாட்களும் உண்டு. ஆனால், அதே அய்யனாரின் அரிவாளும் குதிரையுமே இன்று என் எழுத்துகளின் கருவாக மாறி உள்ளதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

என் ஊர்

முந்திரிக் காடுகளும், கரும்புத் தோட்டங்களும், நெல் வயலுமாகக் காட்சித் தந்த வடலூர், நாகரிகத்தின் பிடிக்குள் வந்து வெகு நாட்கள் ஆகிறது. வடலூரை வளப்படுத்திய

பரவனாறு, அய்யன் ஏரி, வெண்கலத்து ஏரி, நாட்டேரி மற்றும் மண் ஏரி போன்ற நீர் ஆதாரங்கள் எல்லாமே இப்போது தன் சுயத்தை இழந்துவிட்டன. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் இந்த மண்ணின் நிலத்தடி நீர் வளத்தை உறிஞ்சிக் கொண்டே இருக்கிறது. போதாக்குறைக்கு சென்னை குடிநீர்த் திட்டத்தின் மூலமும் என் பகுதி நிலத்தடி நீர்வளம் தொலைந்துகொண்டு இருக்கிறது. பளிங்கு போன்ற நீர் ஓடிய பரவனாறு, சாம்பல் நீராகச் சூடுவது வருத்தமாக உள்ளது.

என் ஊர்

மல்லாக் கொட்டை, கரும்பு, கேழ்வரகு, நெல், வாழை, முந்திரி எனப் பசுமை கொழித்த நிலங்கள் எல்லாம் வீட்டு மனை களாக மாறி வருவதை என் 'கான்கிரீட் காடுகள்’ கவிதைத் தொகுப்பில்,

'விளைநிலம் எல்லாம்
வீட்டுமனைகளாக                
வெள்ளாட்டுக்குப் பதிலாக  
எல்லைக் கற்களே

மேய்கின்றன’ - என்று பதிவு செய்திருப்பேன். அந்தக் கவிதையின் உண்மையை நீங்கள் வடலூர் வந்தால் தரிசிக்கலாம்!''