Election bannerElection banner
Published:Updated:

நேசத்துக்கு இல்லல தேசம் !

கோ.செந்தில்குமார் படங்கள்: பா.கந்தகுமார்

##~##

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரு வெள்ளைக்காரர் சில இந்தியர்களுடன் சேர்ந்து போவோர் வருவோரிடம், 'ஹெல்ப் மீ ப்ளீஸ்’ என்று வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இருந்தார். கையில் இருந்தத் தட்டியில், 'இந்தக் குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைக்காக அன்பு நெஞ்சங்கள் உதவவும்’ என்ற வாசகம் என் கவனம் ஈர்க்க, விசாரிக்க ஆரம்பித்தேன்.

திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவில் இட்லி கடைவைத்து இருக்கும் கார்த்திகேயன்-வேடியம்மாள் தம்பதியரின் 20 வயது மகள் ஜெயந்தி மற்றும் அவளுடைய தம்பி சிலம்பரசன். இருவருக்குமே சிறு வயது முதல் மரபு சார்ந்த தசை நோய். ஜெயந்தியின் முகத்தில் இடதுபுறத்திலும் சிலம்பரசனின் முகத்தில் வலதுபுறத்திலும் தசை நோயின் காரணமாக அதிகப்படியான சதை வளர்ந்து கண், காது, தாடை எனப் பல இடங்களில் ஆக்கிரமித்து உள்ளன. ஜெயந்தி ப்ளஸ் டூ வரையும் சிலம்பரசன் 10-ம் வகுப்பு வரையும் படித்து உள்ளனர். பெற்றோரின் ஏழ்மை காரணமாக பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்களுடைய முகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விகாரமாக மாறத் தொடங்கின. அந்தக் குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைக்காகத்தான் நிதி கேட்டு வேண்டுகோள் விடுக்கிறார் இந்த வெள்ளைக்காரர்.

நேசத்துக்கு இல்லல தேசம் !

''நான் அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் இருக்கிறேன். கடந்த 15 வருடங்களாகத் திருவண்ணாமலைக்கு வந்து ஆறு மாத காலம் தங்கி அருணாச்சலேசுவரரை வணங்கி கிரிவலம் செல்வது வழக்கம். கடந்த 2003-ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்லும்போது, இந்த இரண்டு பிள்ளைகளையும் பார்த்தேன். அவர்களுடைய பெற்றோரிடம் குழந்தைகளுக்கு வந்து இருக்கும் நோய் 'நியூரோஃபிப்ரோமா’ பற்றி எடுத்துச் சொல்லி, 'சிகிச்சை எடுத்தீர்களா?’ என்று கேட்டேன். அவர்களோ, 'நாங்களும் எங்கள் வருமானத்தில் முடிந்த வரை சிகிச்சை அளித்துதான் வருகிறோம். ஆனால், முழுமையாகக் குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை’ என்றார்கள் வருத்தத்துடன். எனக்குத் தாங்க மாட்டாத துயரமாக இருந்தது. பலரிடம் உதவிபெற்று 2005-ம் ஆண்டு கொச்சியில் ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தோம். ஆனாலும் முழுமையாகக் குணமாகவில்லை.

நேசத்துக்கு இல்லல தேசம் !

மீண்டும் பழைய மாதிரியே முகங்களில் தசை வளர ஆரம்பித்துவிட்டது. அதனால் இதை முழுமையாகக் குணமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உலகில் இந்த வகை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பற்றி இணையதளங்களில் தேடினேன். அதன்படி சிக்காகோவில் மிக்கேய் மிக்கின்னான் என்ற மருத்துவர் இந்த வகை நோயைக் குணமாக்குவதில் வல்லவர் எனக் கேள்விப்பட்டு அவரைத் தொடர்புகொண்டேன். இவர்களுடைய நிலைமையை எடுத்துக் கூறினேன். அவரும்  இவர்களுக்குச் சிகிச்சை அளிக்க இந்தியாவுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்கான நிதிக்காகத்தான் இந்த போர்டு. இந்த நற்பணிக்கு வேர்ல்டு பீப்பிள் சர்வீஸ் சென்டர் என்ற அமைப்பும் என்னுடன் முன்வந்துள்ளது'' என்கிற ஸ்டீவ் லிஞ்ச் சிறிது இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

''நாங்கள் இவர்களுடைய சிகிச்சைக்காக யாரிடமும் சென்று வலிய பணம் கேட்பது இல்லை. எங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும்தான் உதவி கேட்கிறோம். அதுபோக பௌர்ணமி நாட்களிலும் முக்கிய விழா நாட்களிலும் இங்கே நின்று கிரிவலம் வரும் பக்தர்களிடம் உதவி கேட்கிறோம். இந்தக் குழந்தைகளைப் பார்த்ததும் அண்ணாமலையார் பக்தர்கள் மனமுவந்து தாங்களாகவே முன்வந்து தங்களால் ஆன உதவியை செய்துவிட்டு செல்கின்றனர். இதுவரை ஒரு சிறிய தொகையை இந்தச் சிகிச்சைக்காகத் திரட்டி உள்ளோம். அமெரிக்க மருத்துவர் தேதி கொடுப்பதற்குள் சிகிச்சைக்கான செலவுத் தொகையைக் கண்டிப்பாகத் திரட்டிவிடுவோம்'' என்கிறார் உறுதியாக.

ஏழை, எளியவர்க்கு இரங்குவதும், மானுட நேயத்தால் இந்தப் பூமியை இன்னும் இன்னும் அழகாக்குவதும் சாதி, மதம், நிறம், இனம்,  தேசம், மொழி கடந்த அன்புதான் என்பதை அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார் அமெரிக்க ஸ்டீவ் லிஞ்ச்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு