Published:Updated:

மோடியை ஃபாலோ செய்த 2,29,364 சௌக்கிதார்கள்... தேர்தலின் ட்விட்டர் சுவாரஸ்யங்கள்!

மொத்த தேர்தல் பிரசாரத்திலும் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளால் ஒன்று சௌக்கிதார். இது ட்விட்டரில் எப்படி எதிரொலித்தது?

மோடியை ஃபாலோ செய்த 2,29,364 சௌக்கிதார்கள்... தேர்தலின் ட்விட்டர் சுவாரஸ்யங்கள்!
மோடியை ஃபாலோ செய்த 2,29,364 சௌக்கிதார்கள்... தேர்தலின் ட்விட்டர் சுவாரஸ்யங்கள்!

ந்தத் தேர்தலில் சௌக்கிதார் அலையைத் தொடங்கிவைத்தது என்னவோ ராகுல்காந்திதான். ஆனால், அதையே தன்னுடைய இணைய பிரசாரமாக மாற்றி மைலேஜ் எடுத்துக்கொண்டது பா.ஜ.க. முதன்முதலில் மார்ச் மாதம் 15-ம் தேதி காலை 9 மணிக்கு நரேந்திர மோடி, தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பெயருக்கு முன் ‘சௌக்கிதார்’ என இணைத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் சொல்லவந்தது, "ஊழலுக்கு எதிராக யாரெல்லாம் போராடுகிறார்களோ, தேசத்துக்காக யாரெல்லாம் சேவையாற்றுகிறார்களோ அவர்கள் அனைவருமே சௌக்கிதார்கள்தான். இங்கு நான் மட்டும் தனியாகப் போராடவில்லை. நீங்களும் உடன் இருக்கிறீர்கள்" என்பதைத்தான். அதாவது, இந்தியாவின் சௌக்கிதாரே திருடனாகிவிட்டார் என ராகுல்காந்தி சொன்னதற்காக இப்படியொரு திரியை கிள்ளிப்போட்டார் மோடி. இந்தப் பிரசாரம் தொடங்கப்பட்ட அடுத்த 2 மணி நேரத்தில் இந்தியாவின் மிகப் பிரபலமான ஹேஷ்டேக்காக ‘சௌக்கிதார்’ டிரெண்டானது. பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் எல்லோருமே மோடியைப்போல தங்கள் பெயருடன் சௌக்கிதாரை இணைத்துக்கொண்டனர்.

ட்விட்டர் விதிகள்படி ஒருவரது ட்விட்டர் கணக்குக்கு இரண்டு பெயர்கள் இருக்கும். ஒன்று யூசர் நேம் (அதிகபட்சமாக 15 எழுத்துகள்), மற்றொன்று ஹேண்டில் நேம் (அதிகபட்சமாக 50 எழுத்துகள்). இதில் ஒவ்வொரு ட்விட்டர் பயனாளிக்கும் யூசர் நேம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஒருவர் உபயோகிக்கும் யூசர் நேமை மற்றொருவரால் பயன்படுத்த முடியாது. ஆனால், ஹேண்டில் நேமுக்கு அப்படி எந்த விதியும் இல்லை. அதனால் இந்த ‘சௌக்கிதார்' பிரசாரம் பெரும்பாலும் ஹேண்டில் நேமில்தான் அரங்கேறியது.  

மோடியை ஃபாலோ செய்த 2,29,364 சௌக்கிதார்கள்... தேர்தலின் ட்விட்டர் சுவாரஸ்யங்கள்!

ட்விட்டரின் இன்னொரு அம்சம் 'வெரிஃபைடு யூசர்' எனப்படும் சரிபார்க்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயனாளி அம்சம். இந்த அம்சம் எல்லா ட்விட்டர் பயனாளிகளுக்கும் கொடுக்கப்படுவதில்லை. உலகம் முழுவதும் 326 மில்லியன் ட்விட்டர் பயனாளிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள 34.4 மில்லியன் ட்விட்டர் கணக்குகளில் 1,268 கணக்குகளுக்கு மட்டுமே 'வெரிஃபைடு யூசர்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மிகக்குறுகிய காலகட்டமான மார்ச் 1-ம் தேதியிலிருந்து (1,252 வெரிஃபைட் யூசர்ஸ்) மார்ச் 24-ம் தேதிக்குள் 16 ட்விட்டர் கணக்குகள் 'வெரிஃபைட் யூசர்' அம்சத்தைப் பெற்றுள்ளன. மேலும், இந்த 1,268 வெரிஃபைடு ட்விட்டர் பயனாளிகளில் 377 ட்விட்டர் பயனாளிகள் தங்களை சௌக்கிதாராக மாற்றிக்கொண்டனர்.

அந்த 377 கணக்குகளில் 370 கணக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு (பி.ஜே.பி) ஆதரவாகச் செயல்படும் கணக்குகள் என்று அறியப்படுகிறது. இந்திய தேசியகாங்கிரஸுக்கு (ஐ.என்.சி) 4 வெரிஃபைடு பயனாளிகள், ஆம் ஆத்மி கட்சிக்கு  2 வெரிஃபைடு பயனாளிகள், ராஷ்ட்ரிய லோக் தல் கட்சிக்கு ஒரே ஒரு வெரிஃபைடு பயனாளி என மூன்று வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் தங்களை ‘சௌக்கிதார்' என ட்விட்டரில் அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனால், மிகக்குறுகிய காலத்துக்குள் அதை நீக்கிவிட்டனர்.

இந்த டிஜிட்டல் பிரசாரத்தின் மூலம் இவர்கள் (Verified Users) பெற்ற செல்வாக்கை அறிந்துகொள்ள ஐ.ஐ.ஐ.டி டெல்லி மாணவர்கள் மார்ச் 15 முதல் 24-ம் தேதி வரை ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். அதில், 35.7% பயனாளர்கள் தங்கள் ட்வீட்ஸ் அல்லது அக்கௌன்ட் நேமில் சௌக்கிதாரை சேர்த்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் உபயோகிக்கும் ‘சௌக்கிதார்’ ஒவ்வொரு இடத்துக்கும் மொழிக்கும் வேறுபடுவதால் மொத்தம் 99 வகை சௌக்கிதார்கள்ட்விட்டரில் வலம்வருகிறார்கள். இந்த 35.7% பயனாளர்களில் 3.9% பேர் தங்கள் ஹேண்டில் நேமை இரண்டுக்கும் அதிகமான முறை மாற்றிஅமைத்திருக்கிறார்கள். அதுவும் அதிகபட்சமாக கைலாஷ் யாதவ் என்கிற ட்விட்டர் பயனாளி தனது ஹேண்டில் நேமை 22 முறை மாற்றியிருக்கிறார்.

மோடியை ஃபாலோ செய்த 2,29,364 சௌக்கிதார்கள்... தேர்தலின் ட்விட்டர் சுவாரஸ்யங்கள்!

இந்த சுவாரஸ்யமான மாற்றங்கள் நரேந்திர மோடியின் ட்விட்டர் ஃபாலோயர்கள் கொண்டும் கணக்கிடப்பட்டது. நரேந்திர மோடியின் 45.9 மில்லியன் ஃபாலோயர்களில் 4,587 பயனாளிகள் தங்கள் யூசர் நேமை மாற்றியுள்ளார்கள். அதேபோல் 2,29,364 பயனாளிகள் தங்கள் ஹேண்டில் நேமுடன் சௌக்கிதாரை இணைத்துள்ளனர். இந்த ஆய்வில் நாம் தெரிந்துகொள்ளவும் ஆச்சர்யப்படவும் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ‘சௌக்கிதார்’ முதன்முதலில் #ChowkidarChorHai எனக் காங்கிரஸ் கட்சி சார்பில் ட்விட்டரில் 20-ம் தேதி செப்டம்பர் மாதம் 2018 அன்றே பதிவிடப்பட்டது. அதில் ராகுல் காந்தி உரையாற்றிய காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் மோடியின் #MainBhiChowkidar பிரசாரம் தொடங்கியது என்றே சொல்லலாம்.

Vikatan