Published:Updated:

4 லட்சம் கோடி பிசினஸ், 73 லட்சம் வேலைவாய்ப்புகள்! - மாறும் இந்திய உணவுக் கலாசாரம்

வீட்டில் சமைக்காத அல்லது சமைக்கத் தெரியாத உணவு வகைகளை உண்ணும் போக்கு, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தப் போக்கு நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்கார வர்க்கத்தினரிடையே அதிகம் காணப்படுகிறது.

4 லட்சம் கோடி பிசினஸ், 73 லட்சம் வேலைவாய்ப்புகள்! - மாறும் இந்திய உணவுக் கலாசாரம்
4 லட்சம் கோடி பிசினஸ், 73 லட்சம் வேலைவாய்ப்புகள்! - மாறும் இந்திய உணவுக் கலாசாரம்

திகரிக்கும் நகரமயமாக்கல், மாறிவரும் மக்களின் வாழ்க்கைத்தரம் எனப் பல்வேறு காரணங்களால் நகர்ப்புறங்களில் உணவுவிடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து, கிடுகிடுவென்ற வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது இந்திய உணவு சேவை துறை. குறிப்பாக, வீடுகளுக்கு நேரடியாகச் சென்று உணவை டெலிவரி செய்யும் ஜொமாட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு, இந்தத் துறையின் சந்தை மதிப்பு நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து, பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளையும் அளித்துவருகிறது. 

கிராமப் புறங்களில் விவசாயம் பொய்த்து, நகரங்களை நோக்கிய மக்களின் படையெடுப்புகள் காரணமாக நகரமயமாக்கல் நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. இதனால், ஒன்றைச் சார்ந்து ஒன்று என்ற அடிப்படையில் கிராமப்புறங்களில் இருப்பவர்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு ஓரளவு வேலைவாய்ப்பும், அதன் மூலம் கணிசமான வருவாயும் கிடைத்து வருகிறது. கூடவே, நகரங்களுக்கே உண்டான இதர வேலைவாய்ப்புகள் மூலம் மத்தியதர மற்றும் உயர் நடுத்தர வர்த்தகத்தினரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. 

4 லட்சம் கோடி பிசினஸ், 73 லட்சம் வேலைவாய்ப்புகள்! - மாறும் இந்திய உணவுக் கலாசாரம்

மாறும் உணவுப்பழக்கம் 

இத்தகைய சூழலில் மாறிவரும் வாழ்க்கைத்தரம், அதிகரித்துள்ள நுகர்வுக் கலாசாரம் போன்றவை மக்களிடையே எதையும் அனுபவித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் ஓர் அம்சமாகவே விதவிதமான உணவுகளை ருசிபார்ப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமான உணவு வகைகள் ஒருபுறம் என்றால், தொலைக்காட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் மயங்கும் குழந்தைகள், வீடுகளில் தயாரிக்கப்படாத பர்கர், பீட்சா போன்ற வெளிநாட்டு உணவு வகைளையும், பிற மாநில உணவுகளையும் உண்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது, வீட்டில் சமைக்காத அல்லது சமைக்கத் தெரியாத உணவு வகைகளை உண்ணும் போக்கு, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தப் போக்கு நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்கார வர்க்கத்தினரிடையே அதிகம் காணப்படுகிறது. 

அதிலும் 18 முதல் 35 வயது வரை உள்ள இளம் வயதினரின் உணவுப் பழக்கவழக்கம், முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் ஐ.டி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முதல் தர தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக உள்ளனர். இவர்களிடையே காணப்படும் அனுபவித்துப் பார்க்கும் நுகர்வு ஆசை, செலவழிக்கும் திறன் போன்றவைதான் வீட்டில் சமைக்கப்படாத உணவு விற்பனைச் சந்தையை வளர்ச்சியடைய வைக்கிறது. மாதம் சராசரியாக 6.6 முறையாவது இவர்கள் இந்த உணவை ஆர்டர் செய்து வாங்கியோ, உணவுவிடுதிக்கு நேரடியாகச் சென்றோ விரும்பி உண்கிறார்கள். இதற்காகக் குறைந்தபட்சம் ஒருவர் மாதம் 2,500 ரூபாயாவது செலவிடுகிறார் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

4 லட்சம் கோடி பிசினஸ், 73 லட்சம் வேலைவாய்ப்புகள்! - மாறும் இந்திய உணவுக் கலாசாரம்

இந்திய அளவில் பெங்களூருதான் இதில் முதல் இடத்தில் உள்ளது. இங்கு உள்ள இளம்வயதினர் இதற்காகச் செலவிடுவது, தேசிய சராசரியான 2,500 ரூபாயைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. அதாவது, ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு 3,536 ரூபாயை வெளி உணவை உண்பதற்காகச் செலவிடுகிறார்.

அதிகரிக்கும் உணவு விடுதிகள்

மக்களிடையே அதிகரித்துள்ள இந்த உணவு நுகர்வு காரணமாக, நகர்ப்புறங்களில் உணவு விடுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. அதேசமயம் உணவு விடுதிகளுக்குச் சென்று உண்ண விரும்பாதவர்கள் அல்லது நேரம் இல்லாதவர்களுக்காக, பிடித்த உணவு விடுதிகளிலிருந்து பிடித்தமான உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கென்றே அவதரித்துள்ள ஜொமாட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும்  நிறுவனங்களால் இந்திய உணவு சேவை துறை அபார வளர்ச்சியை எட்டிவருவதாக இந்திய உணவுவிடுதிகள் சங்கம் (National Restaurants Association of India - NRAI) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அளவில், அமைப்பு சார்ந்த உணவு சேவைத்துறையில் 31,132 கோடி ரூபாய் மதிப்புடன் டெல்லி முதல் இடத்திலும், 27,540 கோடி ரூபாய் மதிப்புடன் மும்பை இரண்டாவது இடத்திலும், 20,014 கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்திய அளவில் மிக அதிக உணவுவிடுதிகளைக்கொண்ட நகரங்களின் பட்டியலிலும் பெங்களூரு மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு 17,932 உணவுவிடுதிகள் உள்ளன. இதில் 48% உயர் ரக உணவுவிடுதிகளாகும். துரித உணவு சேவை விடுதிகள் 8,564 உள்ளன. மேலும், உணவுகளை பார்சலாக மட்டுமே வழங்கக்கூடிய உணவுவிடுதிகள் (Cloud kitchens or dark kitckens) 2,680 உள்ளன. அத்துடன் கஃபேக்கள் 2,346, சாதாரண உணவுவிடுதிகள் 1,657, நடுத்தர உணவுவிடுதிகள் 1,318 என உள்ளன. டெஸர்ட் மற்றும் ஐஸ்க்ரீம் (dessert and ice cream) விற்பனைக்கூடங்கள் 838, பப்கள் (pubs) உள்ளன. 

லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு  

கடந்த மூன்றாண்டுகளில் இத்துறை 11 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், 2018-19-ம் ஆண்டில் 4,23,865 கோடி ரூபாய் அளவுக்கு இந்தத் துறையில் வர்த்தகம் நடந்துள்ளதை மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை அமைப்பு சார்ந்த உணவு சேவைத் துறை சுமார் 37 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது. அதுவே, அமைப்பு சாரா உணவு சேவை துறை 36 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. இது, இந்தத் துறையின் மொத்த வேலைவாய்ப்பில் 49 சதவிகிதமாகும். 2022-23-ல் இது 6 சதவிகித வளர்ச்சியுடன் 92 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஆண்டுக்கு சுமார் 9 சதவிகித வளர்ச்சி என்றாலும்கூட, 2022 - 23-ம் ஆண்டில் இதன் வர்த்தக மதிப்பு 5,99,784 கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் உணவு சேவைத் துறையில், அமைப்பு சார்ந்து இயங்குகிற துறை 1,48,353 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் இது 15 சதவிகித வளர்ச்சியுடன் 2,57,907 கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

4 லட்சம் கோடி பிசினஸ், 73 லட்சம் வேலைவாய்ப்புகள்! - மாறும் இந்திய உணவுக் கலாசாரம்

உயரும் வர்த்தகம் 

அமைப்பு சார்ந்து இயங்கும் உணவு சேவைத் துறையில், கடந்த 2018-19-ம் நிதியாண்டில், சாதாரணமான உணவுவிடுதிகளின் மூலமான வர்த்தகம் 60,255 கோடி ரூபாய் அளவுக்கும், அதுவே தரமான உணவுவிடுதிகள் மூலமான வர்த்தகம் 2,872 கோடி ரூபாய் அளவுக்கும், மதுபான விடுதிகள், ரிசார்ட்டுகள் போன்ற ஓய்வு இடங்கள் மூலம் 17,979 கோடி ரூபாய் அளவுக்கும், கஃபேக்கள் மூலம் 9,370 கோடி ரூபாய் அளவுக்கும் நடந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

வரி பங்களிப்பு எனப் பார்த்தால், அமைப்பு சார்ந்த உணவு சேவைத்துறை 2018-19-ம் நிதியாண்டில் சுமார் 18,000 கோடி ரூபாய் அளவுக்குப் பங்களித்துள்ளது. இது ஒட்டுமொத்த அமைப்பு சார்ந்த துறையின் பங்களிப்பில் 12 சதவிகிதமாகும். 

இந்நிலையில், அமைப்பு சாரா உணவு சேவை துறையின் வர்த்தகம், கடந்த மூன்றாண்டுகளில் 10 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், 2018-19-ம் நிதியாண்டில் மட்டும் 2,75,512 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. இதுவே 2022-23-ம் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சியுடன் 3,41,877 கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

4 லட்சம் கோடி பிசினஸ், 73 லட்சம் வேலைவாய்ப்புகள்! - மாறும் இந்திய உணவுக் கலாசாரம்

உணவு சேவைத் துறையைப் பொறுத்தவரை அது இந்தியாவின் சமூக, பொருளாதார மற்றும் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இத்துறை அடைந்துள்ள வளர்ச்சி, லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு வாழ்வளித்துவருகிறது எனச் சொல்லலாம்!