Published:Updated:

`ஒருவழியா செல்வி, காலேஜ்ல படிக்க சீட் கிடைச்சிடுச்சு' அரசுப் பள்ளி ஆசிரியை நிம்மதி!

`ஒருவழியா செல்வி, காலேஜ்ல படிக்க சீட் கிடைச்சிடுச்சு' அரசுப் பள்ளி ஆசிரியை நிம்மதி!
`ஒருவழியா செல்வி, காலேஜ்ல படிக்க சீட் கிடைச்சிடுச்சு' அரசுப் பள்ளி ஆசிரியை நிம்மதி!

``ஒரு மாணவிக்குக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது என்பது பெரிய விஷயமா என்ன? ஆமாம், நிச்சயம் பெரிய விஷயம்தான். செல்வியைப் பற்றிக் கேள்விப்பட்டால் நீங்களும் இதை ஒத்துக்கொள்வீர்கள். 

கோவை மாவட்டம் அரசூரிலிருந்து 10 கி.மீ பயணத்தில் சென்றடையலாம் வாகராயன்பாளையம் கிராமத்தை. அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் செல்வநாயகி (எல்லோரும் அழைப்பது செல்வி) சென்ற கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்தார். குடிநோய்க்கு ஆளான அப்பாவால் குடும்பத்திற்கு எவ்வித பலனும் இல்லை. அம்மா காய்கறி விற்றுக் குடும்பத்தை நடத்தி வருகிறார். ஒரு தம்பி, ஒரு தங்கை. படிப்பில் அதீத ஆர்வமுள்ள செல்விக்கு தனது 12-ம் வகுப்பைத் தொடரவியலாத சூழல். அதனால், பள்ளி தொடங்கியதுமே அருகிலுள்ள உள்ள மளிகை ஸ்டோரில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார் செல்வி. நன்றாகப் படிக்கும் செல்வி பள்ளிக்கு வராததால், ஆசிரியர் முத்தரசி உள்ளிட்டோர் செல்வியைத் தேடிச் சென்றனர். ஆனால், செல்வி வேலை பார்த்துக் கொடுக்கும் பணம் அவரது குடும்பத்துக்கு அவசியம் என்று தெரிந்ததும், எதுவும் செய்வதற்கு வழியற்று திரும்பி வந்துவிட்டனர். அதை அடுத்து, செல்விக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. அவருக்கு 18 வயது ஆகாததால், குழந்தைத் திருமணம் எனக் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. 

திடீரென்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆசிரியை முத்தரசிக்கு, செல்வி போனில் பேசியிருக்கிறார். "தனது மாற்றுச் சான்றிதழை (T.C) வாங்கிக்கொள்ள வரவா மேடம்?" என்று கேட்டிருக்கிறார். அப்போது, "நீ இப்போ நினைத்தாலும் ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதலாம். ட்ரைப் பண்றியா?" ஆசிரியைக் கேட்டது செல்விக்கு ஆச்சர்யமாக இருந்தது. தேர்வு எழுத ஆசை ஒரு புறம் இருந்தாலும், தன்னால் எழுதித் தேர்ச்சியடைய முடியுமா என்ற சந்தேகமும் மறுபுறம் இழுக்க, குழம்பியிருக்கிறார். செல்வியின் நிலையை நன்கு உணர்ந்த ஆசிரியை முத்தரசியும் அப்பள்ளி ஆசிரியர்களும் செல்விக்கு முழு நம்பிக்கையும் உதவியையும் அளித்துத் தேர்வு எழுதத் தயார் செய்தனர். மிக சொற்பமான நாள்களே பள்ளிக்கு வந்திருந்ததால், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கெஞ்சி, தேர்வு எழுத அனுமதி பெற்றனர் ஆசிரியர்கள். 

`ஒருவழியா செல்வி, காலேஜ்ல படிக்க சீட் கிடைச்சிடுச்சு' அரசுப் பள்ளி ஆசிரியை நிம்மதி!

செல்வி எப்போது சேர்ந்துபோகிறாளோ அப்போதெல்லாம் ஆசிரியர்கள் தன்னம்பிக்கை அளித்ததோடு, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காகப் பாடங்களைக் கற்றும் தந்தனர். செல்வியும் தனக்குக் கிடைத்த நேரத்தையெல்லாம் படிப்பதற்கு எனச் செலவழித்தார். அந்த விடாமுயற்சிக்குப் பலன் கிடைத்தது. சுமார் 20 நாள்களே படித்து, 12-ம் வகுப்புத் தேர்வில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்றிருந்தார். ஒருவழியாக எல்லாமும் நல்லபடியாக முடிந்தது என நினைக்கையில், உண்மையில் அப்போதுதான் சிக்கலே தொடங்கியது. 

செல்வி தொடர்ந்து படிக்க முடியாமல், மீண்டும் மளிகை ஸ்டோரில் வேலைக்குச் செல்லும் நிலைமையே தொடர்கிறது. செல்வி குடும்பத்தினரிடம், ஆசிரியை முத்தரசி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் செல்வி கல்லூரியில் படிப்பதற்குப் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இதைக் கேள்விப்பட்டு, ஆசிரியை முத்தரசியின் கருத்துகளைக் கேட்டு, விகடன் இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அதன் விளைவாக, செல்விக்குக் கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைப் பற்றி ஆசிரியை முத்தரசி சொல்கிறார். 

``என்னுடைய எண்ணமெல்லாம் எப்படியாவது செல்வி கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். அவங்க குடும்பத்தில் செல்வியைப் படிக்க அனுப்பாததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஏனென்றால், அந்தளவுக்குச் செல்வியின் குடும்பச் சூழல் இருக்கிறது. விகடன் தளத்தில் இந்தச் செய்தி வந்ததும் சில மணிநேரத்திலேயே மாற்றம் பவுண்டேஷனிலிருந்து அழைத்தார்கள். `செல்வியின் படிப்புக்கு நாங்கள் உதவுகிறோம்' என்றார்கள். அந்த நேரத்தில் மருத்துவமனையில் நான் இருந்தாலும், மகிழ்ச்சியோடு நன்றி சொன்னேன். அதோடு, செல்விக்கும் இந்தச் செய்தியைச் சொன்னேன். கடந்த ஞாயிறன்று சென்னைக்கு வரச் சொன்னார்கள். செல்வியோடு வந்திருந்தோம். ஒரு தனியார்க் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்கான வாய்ப்பு செல்விக்குக் கிடைத்தது. செல்வியின் குடும்பச் சூழலை மீறியும் அவள் படித்துவிட வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். நிச்சயம் எடுப்பேன். இதற்கு உதவியாக இருந்த எல்லோருக்கும் நன்றி. பெண்களுக்குப் படிப்பைப் போல பெரிய சொத்து இல்லையே! அது செல்விக்கும் கிடைக்கப் போகிறது என்பதைவிட சந்தோஷம் என்ன இருக்கு?" என்கிறார் மகிழ்ச்சியோடு.  

நாம் விகடனில் எழுதியதும், வாசகர்கள் பலரும் செல்விக்கு உதவ முன்வந்தார்கள். அவர்களுக்கும் நம் நன்றிகள். செல்வியின் கல்வியால் அவரின் குடும்பத்தின் கனவுகள் நிறைவேறட்டும். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு