Published:Updated:

`` `ஃபீஸ் கட்டி மாளல'னு புலம்புறாங்க!" அரசுப் பள்ளிக்கான சைக்கிள் பேரணியில் மாரியப்பன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`` `ஃபீஸ் கட்டி மாளல'னு புலம்புறாங்க!" அரசுப் பள்ளிக்கான சைக்கிள் பேரணியில் மாரியப்பன்
`` `ஃபீஸ் கட்டி மாளல'னு புலம்புறாங்க!" அரசுப் பள்ளிக்கான சைக்கிள் பேரணியில் மாரியப்பன்

"எங்கள் பேரணியை அரசுப் பள்ளியில் படித்து உயர்நிலைக்கு வந்தவர்களால் தொடக்கி வைக்கும் முயற்சியை மேற்கொண்டோம். அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை, கல்வியாளர் வசந்தி தேவி, எழுத்தாளர் இமயம், இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்டோரே எங்கள் பேரணியைத் தொடங்கிவைத்தார்கள்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பேரணியில்தான் இருக்கிறேன். ஐந்து நிமிடத்தில் கூப்பிடுகிறேன்" என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன். தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளைக் காக்க, மாணவர்கள் 1500 கி.மீ தூரம் சைக்கிள் பேரணியை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தின் நான்கு முனையிலிருந்து புறப்பட்டுள்ள இந்தப் பேரணியை முன்னெடுத்துச் செல்லும் மாரியப்பன் சிறிதுநேரம் கழித்து அழைத்தார்.

`` `ஃபீஸ் கட்டி மாளல'னு புலம்புறாங்க!" அரசுப் பள்ளிக்கான சைக்கிள் பேரணியில் மாரியப்பன்

``பொருளாதாரத்தில் எவ்வளவு குறைவான நிலையில் இருந்தாலும் அவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அரசுப் பள்ளிகள்தாம். அவற்றைக் காக்கவும் மேம்படுத்தக்கோரியும்தான் எங்களின் சைக்கிள் பேரணி. சென்னை, கோவை, கடலூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இந்த மாதம் 25-ம் தேதி நான்கு முனைகளில் தொடங்கியிருக்கும் இந்தப் பேரணி 31-ம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்தோடு நிறைவடைய உள்ளது. எங்கள் குழுவில் தனியார் பள்ளி மாணவர்களும் இருக்கின்றனர். இந்திய அளவில் 3 லட்சமும், தமிழ்நாடு அளவில் 3000 அரசுப் பள்ளிகளும் மூட இருப்பதாகத் தெரிய வந்தது. சென்ற ஆண்டில்கூட தமிழக அரசே 890 அரசுப் பள்ளிகளை மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி, அருகில் இருக்கும் பள்ளியோடு இணைப்பதாகச் சொல்லியிருந்தது. இணைப்பது என்றால் என்ன... மறைமுகமாக மூடுகிறேன் என்பதுதான் அர்த்தம். 

ஸ்வீடன், அமெரிக்கா மாதிரியான முதலாளித்துவ நாடுகளில்கூட கல்வியை பொதுப் பள்ளிகள்தாம் வழங்கி வருகின்றன. நாட்டின் அஸ்திவாரத்தைப் பள்ளிகளே அளிக்கின்றன என்பதை அந்த நாடுகள் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கின்றன. ஏற்கெனவே, தனியார் பள்ளிகளை திறக்க வைத்து, கல்விக்கு ஏராளமாகச் செலவழிக்க வைக்கின்றன. இப்போது, அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் முறையைக் கொண்டு வருகின்றனர். அது முற்றிலும் தவறானது.  ஏற்கெனவே பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வழியே ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீட்டால், பல பள்ளிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுப்பது என்பது தனியாருக்குத் தாரை வார்ப்பது போன்றதுதான். 

`` `ஃபீஸ் கட்டி மாளல'னு புலம்புறாங்க!" அரசுப் பள்ளிக்கான சைக்கிள் பேரணியில் மாரியப்பன்

நம் அருகில் இருக்கும் மாநிலமான கேரளாவைப் பாருங்கள். அம்மாநில முதல்வர் வரை, பெற்றோர்களின் வீடுகளுக்குச் சென்று அரசுப் பள்ளியைப் பற்றிப் பிரசாரம் செய்தனர். இதனால், தனியார் பள்ளியிலிருந்து இரண்டு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மேலும், கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு முன், விதிமுறைகளை மீறியதாக 5000 தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்து முதல் முப்பது வரை தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாகச் சொல்கின்றன. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 

தனியார் பள்ளி அளவுக்கு அரசுப் பள்ளிகளின் தரம் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டனர். இந்த எண்ணத்தை உடைக்க வேண்டும் என்பதால்தான், எங்கள் பேரணியை அரசுப் பள்ளியில் படித்து உயர்நிலைக்கு வந்தவர்களால் தொடக்கி வைக்கும் முயற்சியை மேற்கொண்டோம். அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை, கல்வியாளர் வசந்தி தேவி, எழுத்தாளர் இமயம், இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்டோரே எங்கள் பேரணியைத் தொடங்கிவைத்தார்கள். எங்களின் நோக்கம், தமிழகம் முழுவதும் உள்ள பெற்றோர்களைச் சந்திப்பதும், அவர்களிடம் அரசுப் பள்ளியைப் பற்றிய விழிப்புணர்வை அளிப்பதும்தான். நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் செலுத்தும் வரியில் இரண்டு சதவிகிதம் கல்விக்காகச் செலவிட வேண்டும். ஆனால், அப்படிச் செலவிடப்படுவதில்லை. 1964-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷன் கல்விக்காக ஆறு சதவிகிதம் நிதி ஒதுக்க வேண்டும் என்பதை இன்று வரை ஆட்சியாளர்கள் செய்யவில்லை. மக்களின் அடிப்படை உரிமையாகக் கல்வியை வரையறுத்தது கல்வி உரிமைச் சட்டம்தான். அதில் வலியுறுத்தியுள்ள பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட வேண்டும்." என்றவரிடம், "பேரணிக்குப் பொதுமக்களிடம் எவ்வாறு வரவேற்பு இருக்கிறது?" என்று கேட்டேன்.

`` `ஃபீஸ் கட்டி மாளல'னு புலம்புறாங்க!" அரசுப் பள்ளிக்கான சைக்கிள் பேரணியில் மாரியப்பன்

``நாங்கள் நினைத்ததை விடவும் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல பெற்றோர்கள் தானாகவே வந்து பேசுகிறார்கள். விவரங்களைக் கேட்கிறார்கள். `பக்கத்து வீட்டுப் பிள்ளையைச் சேர்த்தாச்சுனு எங்க பிள்ளையையும் கெளரவத்துக்குச் சேர்த்தோம்'னு சொல்றாங்க. இன்னும் சிலர், `பிரைவேட் ஸ்கூல்ல ஆசைப்பட்டு சேர்த்துட்டோம். ஆனா, வேனுக்கு, ஷூவுக்கு, நோட்டுக்கு ஏதாவது கேட்டுட்டே இருக்காங்க. ஃபீஸ் கட்டி மாளல'னு புலம்புகிறார்கள். இந்தப் பேரணி மூலம், எழுத்தின் மூலமாகவே கருத்துகளைத் தெரிவித்துவந்த கல்வியாளர்கள் பலர் வீதிக்கு வந்து மக்களோடு பேசிவருகின்றனர். அடுத்து, அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள் எங்களை முழு மனத்தோடு வரவேற்கிறார்கள்.

இந்தப் பேரணி அரசுக்கு அச்சத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, பேரணியில் செல்ல தடுக்கிறது. தூத்துக்குடியில், திருப்பூரில் எனப் பல ஊர்களில் இதைப் பேசக் கூடாது, நகர எல்லைக்குள் வரக் கூடாது, மைக் பயன்படுத்தக் கூடாது எனச் சொல்கிறார்கள். நாங்கள் முறைப்படி அனுமதி வாங்கித்தான் செல்கிறோம்.

அரசுக்கு எங்களின் கோரிக்கை என்றால், அரசுப் பள்ளிகளை எந்தக் காரணம் கொண்டும் மூடக் கூடாது. அவற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல, தனியார் பள்ளிகளின் கட்டணத்தை வரையறுப்பதில் கறார் தன்மை வேண்டும். மேலும் ஒரு தனியார் பள்ளியில் எவ்வளவு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற தெளிவான முடிவும் தேவை" என்று கூறிவிட்டு பயணத்தைத் தொடர்கிறார் மாரியப்பன். 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு