Published:Updated:

இதுவரை 16 பேர் பலி... எவரெஸ்ட் மரணங்களுக்கான காரணம் என்ன?

ஒரு நாளில் 250-க்கும் மேற்பட்டோர் எவரெஸ்டில் ஏறியிருக்கிறார்கள். இதனால் உச்சியை நெருங்கும் நிலையில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் பகுதி அது. அவர்கள் கொண்டுபோன ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் குறையத் தொடங்கியது.

இதுவரை 16 பேர் பலி... எவரெஸ்ட் மரணங்களுக்கான காரணம் என்ன?
இதுவரை 16 பேர் பலி... எவரெஸ்ட் மரணங்களுக்கான காரணம் என்ன?

டந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் அதிகமான இறப்பு ஏற்பட்டுள்ளது. எவரெஸ்டில் இந்த சீஸனில் மொத்தமாக 381 பேருக்கு நேபாள அரசு அனுமதி தந்திருக்கிறது. இதிலிருந்து 11,000 டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது அந்த நாட்டு அரசு. இதற்கு முன்னர் இத்தனை பேருக்கு அனுமதி கொடுத்ததே இல்லை. மலையேறிய 381 பேருடன் வழிகாட்டி, பொருள்களைச் சுமப்பவர்கள் எனக் கிட்டத்தட்ட 600 நபர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இதனால் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மலை ஏற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதிகமானோர் மலையேறும்போது, 12 மணிநேரத்துக்கும் மேல் நெரிசலில் சிக்கியதால் மூச்சுத் திணறலில் ஒருவர் பலியானார். இதில் பலரும் திரும்பி கீழே வரும்போது பலியாகியிருக்கின்றனர். இதில் இந்தியர்களும் உண்டு. ஆனால், இந்த நெரிசல் மட்டும்தான் இந்த விபத்துக்குக் காரணமா என்றால் 'இல்லை' என்பதுதான் பதில். நெரிசல் தவிர, இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. 

இதுவரை 16 பேர் பலி... எவரெஸ்ட் மரணங்களுக்கான காரணம் என்ன?

8,848 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய மலைச்சிகரம், எவரெஸ்ட் சிகரம். இமய மலையில் உள்ள இந்தச் சிகரத்தை நோக்கி பயணம் செய்யும் சீஸன் மே 14-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற பயணிகள் எவரெஸ்ட் சிகரத்துக்குப் பயணம் மேற்கொண்டனர். 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்குக் குறிப்பிட்ட வானிலை இருந்தால் மட்டுமே ஏற முடியும். மலையேறுபவர்கள் மே மாத தொடக்கத்தில் எவரெஸ்ட் அடிப்பகுதியில் முகாமிட்டுத் தங்கி வந்தனர். அதே நேரத்தில் இந்த ஆண்டு ஃபானி புயல் உருவாகியது. இந்தியா மற்றும் வங்காள தேசத்தைப் புயல் தாக்கியதால் இமயமலைப் பகுதியில் நிலவும் காலநிலையால் அதிகாரிகள் கவலை கொண்டனர். புயலுக்குப் பின்னர் இமயமலையில் காலநிலை மோசமடைந்தது. அதனால் இரண்டு நாள்கள் மலையேறுதல் நிறுத்தி வைக்கப்பட்டன. முகாம்களில் கிட்டத்தட்ட 20 கூடாரங்கள் வலுவான காற்றால் வீசியெறியப்பட்டன. இதனால் மலையேறிக்கொண்டிருந்தவர்களும், அடிப்படை முகாமுக்குத் திருப்பி அழைக்கப்பட்டனர். புயலுக்குப் பின்னர் இரண்டு நாள்கள் கழித்து, குறுகிய காலத்தில் மலையேற ஆரம்பித்தனர். கூட்டமாக மலையேறியதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு சுமார் 16 பேருக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். கடந்த காலத்தை ஒப்பிடும்போது, இது மிக அதிகமான ஒன்று. 

இதுவரை 16 பேர் பலி... எவரெஸ்ட் மரணங்களுக்கான காரணம் என்ன?

மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதைத் தவறு என்கிறார்கள் மலையேற்ற வல்லுநர்கள். ஒரு நாளில் 250-க்கும் மேற்பட்டோர் எவரெஸ்டில் ஏறியிருக்கிறார்கள். இதனால் உச்சியை நெருங்கும் நிலையில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் பகுதி அது. அவர்கள் கொண்டுபோன ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் குறையத் தொடங்கியது. இதற்கு மலையேறும்போது தொடர்பு அதிகாரிகள் இல்லாமல் இருப்பதே முக்கியமான காரணம். மொத்தமாக பணியில் 59 அதிகாரிகள் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். அடிப்படை முகாமில் இருந்து மலையேறியவர்கள் சிலர் இன்னும் திரும்பி வரவில்லை. பணிகளில் இருக்கும் அதிகாரிகள் பெரும்பாலும் மலையேற்ற பயிற்சி இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். எனவே அதிகமான உயரத்தில் மலையேறுபவர்களைச் சமாளிக்க திணறுகின்றனர். இதுபோக உயரமான இடங்களில் பணியில் இருந்த அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் அதிகமான இறப்புக்குக் கூட்ட நெரிசலும் குறைவான அதிகாரிகளும் காரணமாக அமைந்தது. 

இமயமலையில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்வது சாகசமான பயணம்தான். ஆனால், அதிகமானோர் செல்வதால் சிக்கலான பயணமாக மாறி வருகிறது. இந்தப் பயணம் மேற்கொள்ள முழுமையான விழிப்புணர்வும் அனுபவமும் தேவை. மலையேற்றத்தில் விபத்துகள் தவிர்க்க முடியாதவை என்பதை மலையேறுபவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

எவரெஸ்ட்டில் சமீபகாலமாக அனுபவமற்ற மலையேற்ற வீரர்கள் வருகின்றனர். பல வீரர்களுக்குச் சுமை தூக்கும் ஷெர்பாக்கள் வழிகாட்டிகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள். ஷெர்பாக்களால் சுமை தூக்கும் வேலைகளைச் செய்து கொண்டு தன்னை மட்டுமே காத்துக்கொள்ள முடியுமே தவிர, மலையேறுபவர்களுக்கு உதவ முடியாது. இதை அறியாமல் பெரும்பாலானோர் ஷெர்பாக்களை வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஷெர்பாக்கள் தங்களைத்தான் முதலில் காத்துக் கொள்வார்கள். மலையேறும் வீரர்கள் அனுபவம் இல்லாமல் பல முடிவுகளை எடுத்தனர். 6,000 அடிக்கு மேல் மலையேறுபவர்கள் முறையான பயிற்சி பெற்று ஏற வேண்டும், நேபாள அரசு அதைப் பரிசோதித்து அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் நேபாள அரசுக்குக் கோரிக்கை வைக்கிறார்கள். 

இதுவரை 16 பேர் பலி... எவரெஸ்ட் மரணங்களுக்கான காரணம் என்ன?

மலையேறுபவர்கள் தங்களுடன் வழிகாட்டிகளை அழைத்துச் செல்வது வழக்கம். அந்த வழிகாட்டிகளை அனுப்பும் நிறுவனங்களுக்குள் குறைந்த விலைக்கு வழிகாட்டிகளைக் கொடுப்பதில் போட்டி அதிகமாக இருக்கிறது. எனவே, மலையேறுவோரிடம் குறைவான கட்டணத்தை வாங்கிக்கொண்டு, அனுபவம் குறைந்த வழிகாட்டிகளை அனுப்பிவிடுகின்றனர். நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்காக சில நேரங்களில் மலையேறுபவர்களின் உயிர்கள் போய்விடுகின்றன. நிறுவனங்களுக்குள் ஏற்படும் போட்டியால், எத்தனை பேரைக் காப்பாற்றி இருக்கிறோம் எனப் பட்டியலிடாமல், எவ்வளவு வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறோம் என்று நிறுவனங்கள் பட்டியலிடுகின்றன. இதை அரசு ஒழுங்குபடுத்த முன்வர வேண்டும் என மலையேறுபவர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.  

Vikatan