Published:Updated:

``வேர்ப்பலா மரமெடுத்து வாசிப்புத் தந்தி முடிந்து...'' - வீணை உருவாகும் கதை!

``வேர்ப்பலா மரமெடுத்து வாசிப்புத் தந்தி முடிந்து...'' - வீணை உருவாகும் கதை!
``வேர்ப்பலா மரமெடுத்து வாசிப்புத் தந்தி முடிந்து...'' - வீணை உருவாகும் கதை!

வேர்ப்பலா வகையில் இருந்துதான் வீணைகள் பெருமளவில் செய்யப்படுகின்றன. பலாச்சுளை மட்டுமன்றி கலைச்சுவைக்கும் வேர்ப்பலா மரமே சிறந்தது.

ஒருபுறம் பிரதான சாலையின் வழி நெடுக்க மக்கள் வாகன நெரிசலில் திணறிக்கொண்டிருக்க, மறுபுறம் எந்த இடையூறுமின்றி எந்த ஆர்ப்பாட்டமுமின்றி இளைப்பாறிக்கொண்டிருக்கின்றன சாலையோர மரங்கள். மரங்களைப் பின்தொடர்ந்து இசை வந்த வழி தேடி மயிலாப்பூரில் உள்ள லக்ஷ்மணின் இசைக் காட்சியகத்தை வந்தடைந்தோம். வீணையுடன் உரையாடிக்கொண்டிருந்தவர் நிறுத்தி நிமிர்ந்து பார்த்தார். எங்களுக்குள் உரையாடல் தொடங்கியது.

ச, ரி, க, ம என சுவிட்சர்லாந்திலும், காம்போதி ராகத்துடன் கனடாவிலும், ராவணன் விரல்களைத் தேடி இலங்கையிலும், ஆதிதாளத்துடன் ஆஸ்திரேலியாவிலும், நாத லயங்களுடன் நியூயார்க்கிலும் ஆட்சிசெய்யும் எண்ணற்ற வீணைகள் லட்சுமணனின் இசைக்காட்சியகத்தை தாய்வீடாகக் கொண்டவை. 

``இசைக்கருவிகளில் தொன்மையான வரலாற்றைக்கொண்ட வீணை, தஞ்சாவூரில்தான் அன்றிலிருந்து இன்று வரை கலை நேர்த்தி குறையாமல் உருவாக்கப்பட்டுவருகிறது. சரபோஜி மகாராஜா தஞ்சையை ஆண்ட சமயத்தில்தான் இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் `சரஸ்வதி வீணை' எனப்படும் ரகுநாத வீணை முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

பலா மரத்தின் நாட்டுப்பலா, வேர்ப்பலா என்னும் வகைகளுள் வேர்ப்பலா வகையில் இருந்துதான் வீணைகள் பெருமளவில் செய்யப்படுகின்றன. பலாச்சுளை மட்டுமன்றி கலைச்சுவைக்கும் வேர்ப்பலா மரமே சிறந்தது. தமிழகத்தில் பரவலாகக் கிடைக்கும் வேர்ப்பலா, வீணையின் உறுதிக்கும் நாதத்துக்கும், நிறத்தின் தன்மைக்கும் ஏதுவானது.

கடந்த காலங்களில் வேரின் கழிவுப் பாகங்கள்கொண்டே துண்டுத் துண்டாக வீணையின் பாகங்கள் செய்யப்பட்டன. வீணை செய்து முடித்த பிறகு, அரக்குகொண்டு பூசுதலும், யானைத்தந்தம், மான்கொம்பு போன்ற விலை உயர்ந்த பொருள்களைக்கொண்டு அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டன. தந்தமும் மான்கொம்பும் தடைசெய்யப்பட்ட பிறகு பிளாஸ்டிக் தாள்கள் அறிமுகமாயின'' என வீணையின் வரலாற்றோடு தொடங்கிய லட்சுமணன், அடிப்படையில் புல்லாங்குழல் கலைஞர். குருவின் வழிகாட்டுதலே இந்தத் துறைக்குள் அவரை இழுத்துவந்திருக்கிறது. 

``வேர்ப்பலா மரமெடுத்து வாசிப்புத் தந்தி முடிந்து...'' - வீணை உருவாகும் கதை!

``ஏற்கெனவே இயந்திரத் துறையில் அனுபவமும் அறிவும் இருந்ததால், புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்து பிளாஸ்டிக் தாள்களுக்குப் பதிலாக மரத்தின் மீதே அலங்கார வேலைப்பாடுகள் செய்ய முயன்றேன். அதைச் செய்வதற்கு மையப்பகுதி அடர்த்தியாக இருக்க வேண்டும். மேலும் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ எடுத்துச் செல்லப்படும் வீணையில் பூசப்படும் மெழுகு உருகும் பிரச்னை வேறு இருந்தது. இதற்கு முடிவுகட்டும் விதமாக மரத்தின் நடுப்பகுதியை ஒரே கட்டையாகச் செய்தேன். மையப்பகுதி உறுதி என்பதால், அலங்கார வேலைகள் செய்ய அது ஏதுவாக இருந்தது. பிறகு, கடினமான மெழுகை உருவாக்கினேன். அது ஆயுளுக்கும் உருகாது, சிதையாது.

தந்தியைத் திருத்தும் `பிருடை' என்னும் சாவி பயன்படுத்துதல் கடினமாய் இருந்ததால், அதை கிட்டார் சாவிகளைக்கொண்டு மாற்றி எளிமையாக்கினேன். ஆனால் இப்படியான தயாரிப்பு முறை நேரம் பிடிக்கும் ஒன்று. மற்றவர்கள் 50-60 வீணைகள் செய்யும் நேரத்தில், நாங்கள் 12-15 வீணைகள் செய்கிறோம். ஆனால், தரம் முக்கியமல்லவா? அதனால்தான் வீணை ஸ்ரீவாணி, மைசூர் துரைசாமி அய்யங்கார் போன்ற பல வீணைக் கலைஞர்கள் இங்கே வந்து வீணை வாங்கியும், பலருக்கு எங்களது வீணைகளைப் பரிந்துரைத்தும் சென்றிருக்கின்றனர்'' எனப் பெருமிதம் தொனிக்கச் சொல்கிறார்.

``ஒரு வீணை செய்ய மரத்தின் பாகம் குறைந்தது 15 வருடங்கள் நன்றாகக் காய்ந்திருக்க வேண்டும். ஆனால், மையப்பகுதி ஏற்கெனவே உறுதியானது என்பதால் நாங்கள் செய்யும் வீணைகளுக்கு மரத்தின் பகுதி 3-4 வருடங்கள் காய்ந்தாலே போதுமானது. இந்த முறையில் தயாரிக்கப்படும் வீணைகளில் நாதம் வெகு சிறப்பாக இருக்கும்'' எனக் கூறியவர் பேசிக்கொண்டே வீணையை மீட்ட, அவர் சொற்களில் இருந்த உண்மையை உணர்த்தியது அந்த வீணை. 

``ஒரே கட்டையில் செய்யப்படும் வீணைக்கு `ஏகாந்த வீணை' என்று பெயர். அவற்றில் செய்யப்படும் அலங்காரங்களைப் பொறுத்து அஷ்டலட்சுமி வீணை, ரத்ன வீணை, கஜமுக வீணை என அவை அழைக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் இத்தகைய வீணைகளை உருவாக்கி பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளோம். முக்கியமாக, இலங்கைவாழ் தமிழர்களுக்கு வீணை என்றால் கொள்ள பிரியம். வீணையை உருவாக்குவது என்பது, நுண்ணிய நேர்த்தியான ஒரு கலை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தக் கலையைச் சொல்லித்தர சரியான பள்ளி இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் ஆதரவுகூட நமது அரசிடமிருந்து இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை'' என சோகம் பகிர்கிறார் லட்சுமணன்.

அந்தச் சமயத்தில் உள்ளே வந்த வாடிக்கையாளருக்குப் புல்லாங்குழலை அவர் வாசித்துக்காட்ட, அவருக்கும் புல்லாங்குழலுக்குமான புது உரையாடல் தொடங்கியிருந்தது. வெளியே வந்த நம்மை, காற்றில் கலந்த இசைகொண்டு தலையாட்டி வரவேற்றன சாலையோர மரங்கள். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு