Published:Updated:

``பறிச்சதுமே அப்படியே தின்னாதான் ருசி!” - நுங்கு சூத்திரம் சொல்லும், பனையேறிகள்

``பறிச்சதுமே அப்படியே தின்னாதான் ருசி!” - நுங்கு சூத்திரம் சொல்லும், பனையேறிகள்
``பறிச்சதுமே அப்படியே தின்னாதான் ருசி!” - நுங்கு சூத்திரம் சொல்லும், பனையேறிகள்

"நுங்குகளப் பறிச்சதுமே இப்படிச் சாப்பிட்டாதான்யா ருசி" என்று பாலை அறுத்து நுங்கு வெட்டிக்கொண்டிருந்த பனையேறி முத்தையா சொல்ல, அதற்கு பாலம்மா, "ஆமா ஆமா" என்று நுங்கு சாப்பிட்டுக் கொண்டே தலையசைத்தார்.

னை நுங்குகளுக்கு ஏப்ரல், மே மாதங்கள்தான் சீஸன். வெயிலின் சீற்றத்தைப் பார்த்தால், இன்னும் ஒரு மாதத்துக்குக்கூட தொடர்ந்து நுங்குகளைத் தின்று தீர்த்துக்கொண்டே இருக்கலாம்போல தோன்றுகிறது. நாம் உண்ணும் நுங்குகள் எப்படி கடைகளுக்கு வருகின்றன என்பதை அறிந்துகொள்ள பனை ஏறும் வயலுக்கே சென்றோம். அதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள பொதும்பு கிராமத்துப் பனந்தோப்புக்கு சென்றோம். இங்கிருந்துதான் நகரின் பல்வேறு இடங்களுக்கு நுங்குகள் கொண்டுசெல்லப்பட்டு விற்பனையாகின்றன. பனை மரங்களின் உரிமையாளர்களிடமிருந்து பனை மரங்களை கான்ட்ராக்ட் எடுத்து, சிலர் நுங்கு பறித்துக் கொண்டிருந்தனர். அவர்களை கான்ட்ராக்டர் பாலம்மா மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் நுங்கு பற்றிய முழு விபரங்களைக் கேட்க, "பரவாயில்லயே ராசா, இதைக் கேட்க, எங்களைத் தேடி இவ்ளோ தூரம் வந்துருக்கீங்களே!" என்று பேச ஆரம்பித்தார்.

``பனைகள்ல கள், பதநீர் ஏதும் இறக்காம இருந்தா மட்டும்தான் நீர் கெட்டிப்பட்டு நுங்கு கிடைக்கும். பனம்பாளைகள்ல மூணு வேளையும் கீறல்கள் போட்டுவைச்சு, கள் இறக்குவாங்க. சுண்ணாம்பு சேர்த்தா அது பதநீர். பனை மரப் பாளையோட சேர்த்து முளைக்குற பனம் பூக்கள், பிஞ்சாவும், பின்னால காய்களாவும் மாறுது. பனையில ஆண்மரம், பெண்மரம்ணு ரெண்டு வகை இருக்கு. ஆண் மரம் பூக்க மட்டும்தான் செய்யும், காய்க்காது. பெண்மரம், பூத்துக் காய்க்கும். வாழை மாதிரியே பனையோட பாகங்களும் மக்களுக்கு ரொம்ப உதவியா இருக்குது. விசிறிகள், பனை ஓலைப் பெட்டிகள்னு பல பொருட்கள் செய்யுறதுக்கும் பனை ஓலைகள் பயன்படுது. பனை மரம் ஏறும் நபர் அவரோட கால்கள்ல பிடிமானத்துக்காக துண்டைக் கட்டிக்கிட்டு ஏறுவாங்க. 50 அடி உயரம் இருக்குற பனை மரங்கள் மேல 25 எக்குகளுக்குள்ள மரத்தோட உச்சிக்குப் போயிடுவாங்க. மேல போறவங்க பனம் பாளைகள் மேல கால்களை இடுக்கி குத்த வைப்பாங்க. முதுகுக்குப் பின்னால வச்சிருக்குற பாளை வெட்டுற அரிவாளால ஒவ்வொரு பாளையா வெட்டுவாங்க. இவங்க மாதிரி அருவா வேற யாரும் வச்சிருக்க முடியாது. ரொம்ப கூரான அரிவாளைத்தான் பயன்படுத்துவாங்க." என்றார் பாலம்மா.

``பறிச்சதுமே அப்படியே தின்னாதான் ருசி!” - நுங்கு சூத்திரம் சொல்லும், பனையேறிகள்

கீழே வெட்டிப்போட்ட பாளைகளில் இருந்து நுங்குகளை சேகரிக்கின்றனர். அதில் சிறிதாக இருக்கும் நுங்குகளை எடுத்துப் போட்டுவிட்டு, கொஞ்சம் பெரிய கண்கள் கொண்டவற்றைத் தனியே பிரித்துவைக்கின்றனர். ஒதுக்கிப்போட்ட சிறிய நுங்குகளை எடுத்து கண்ணின் விளிம்பில் கட்டைவிரல் கொண்டு அழுத்தினால் வரும் நீரை அப்படியே உறிஞ்சிக் குடிக்கின்றனர். நமக்கும் அதை ருசிக்கக் கொடுக்க அவர்கள் சொன்ன மாதிரியே அதிக ருசியாக இருந்தது. 

அவரைத் தொடர்ந்து, ``நுங்குகளப் பறிச்சதுமே இப்படிச் சாப்பிட்டாதான்யா ருசி" என்று பாளை அறுத்து நுங்கு வெட்டிக்கொண்டிருந்த பனையேறி முத்தையா சொல்ல, அதற்கு பாலம்மா, "ஆமா ஆமா" என்று நுங்கு சாப்பிட்டுக் கொண்டே தலையசைத்தார்.

அதே ஊரைச்சேர்ந்த 30 வயது பாலமுருகன் மொத்தமாக நுங்குகளை சாக்குமூட்டையில் அள்ளி டூ வீலரில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இவர்களின் பாட்டன், முப்பாட்டன் அனைவரும் பனை ஏறுவார்களாம். இப்போது, நுங்குகளுடன் விற்பனைக்காக நகருக்குள் சென்றார். ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள வைகை மேம்பாலத்தின் நடைபாதை ஓரத்தில் நுங்கு மூட்டையை வைத்து, அதன்மேலே அமர்ந்துகொண்டார். பனை ஓலையை முன்னால் வைத்து நுங்குகளை சீவத் தொடங்கினார்.

``பறிச்சதுமே அப்படியே தின்னாதான் ருசி!” - நுங்கு சூத்திரம் சொல்லும், பனையேறிகள்

ஒவ்வொரு காயாக எடுத்துச் சீவி, பக்குவத்தோடு அரிவாளிலேயே நுங்கை லாகவமாக எடுத்துப் பனை ஓலையில் வைக்கிறார். இன்னொரு சாக்கை பக்கத்தில் விரித்து, அறுத்து முடித்த காய்களை அதில் போட்டுக்கொண்டே வருகிறார். 3 நுங்குகள் 20 ரூபாய் என்பது விலை. மிதிவண்டிகளில் வந்தவர்கள் முதல் இன்னோவா காரில் வந்தவர்கள் வரை, தங்கள் வண்டிகளுக்கேற்ப ஐந்து முதல் 10 ரூபாய் வரையிலும் பேரம் பேசினர். சிரித்த முகத்தோடு, “கட்டாதுண்ணே” என நாசுக்காய் விலைபேசினார், பாலமுருகன். பேரம் பேசுவது வணிக உத்திதான் என்றாலும், இதுமாதிரி சாலையோர வியாபாரிகளிடம் கறாராகப் பேரம் பேசுவது அவர்களது அன்றாடப் பிழைப்பில் கைவைக்கும் செயல் என்பதை நாம் உணர வேண்டும். “வர்றவங்க எல்லாம் இப்படிப் பேரம் பேசும்போது, விக்கிற விலை மொத்தமா குறைஞ்சிடுது” என நொந்துகொள்கிறார், பாலமுருகன். அவருக்கு இயல்பாகவே கோப சுபாவமாம். “வியாபாரத்துக்கு வந்துட்டா குணத்தையெல்லாம் மூட்டைகட்டி வச்சிடுவேன். மொறச்சிக்கிட்டா பொழப்புப் போயிருமில்ல. 6 நொங்கு விற்பனை செஞ்சாத்தான் 5 ரூபாய் லாபம் கிடைக்கும்” என்று தன்மையாகப் பேசுகிறார்.

கொதிக்கிற வெயிலில் ஒருலிட்டர் கேன் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் அருந்தி உயிர் நனைத்தபடியே, மற்றவர்களுக்குத் தாகம்போக்க நுங்கை எடுத்து வெட்டிக்கொண்டிருந்தார், பாலமுருகன்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு