Published:Updated:

4 நாள்கள்... 435 கி.மீ சைக்கிள் பயணம்! - அசரவைக்கும் ஈரோடு இளைஞர்!

4 நாள்கள்... 435 கி.மீ சைக்கிள் பயணம்! - அசரவைக்கும் ஈரோடு இளைஞர்!
4 நாள்கள்... 435 கி.மீ சைக்கிள் பயணம்! - அசரவைக்கும் ஈரோடு இளைஞர்!

பைக்கில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு ஹாயாக லாங் ரைடு செல்லும் இன்றைய இளசுகளுக்கு மத்தியில், பழைய இரும்புக் கடையில் எடுத்த சைக்கிளுக்கு பட்டி டிங்கரிங் பார்த்து, அதில் 435 கி.மீ லாங் ரைடு சென்று அசத்தியிருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

`ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் போயிருப்பார்!’ என நினைக்கிறீர்களா, அதுதான் இல்லை. கிராமத்தில் ஐஸ் விற்பவர்கள், காய்கறி வியாபாரம் செய்பவர்கள் ஓட்டி வருவார்களே, அந்த மாதிரியான சைக்கிளில்தான் ஈரோட்டிலிருந்து கன்னியாகுமரி வரை 435 கி.மீ பயணம் செய்திருக்கிறார். ``பைக் ஒரு மெஷின் பிரதர். யார் பெட்ரோல் போட்டு ஓட்டினாலும் போகும். ஆனா, சைக்கிள்ல ஒரு லாங் டிராவல் போறதுங்கிறது, எனக்குள்ள உள்ள எனர்ஜி லெவல், என்னோட திறமையை எனக்கே காட்டும். அதனால்தான் ஒரு கை பார்த்துடுவோமேன்னு பெடலை மிதிக்க ஆரம்பிச்சேன்'' - உற்சாகமாகிறார் வி.பி.விக்னேஷ்.

4 நாள்கள்... 435 கி.மீ சைக்கிள் பயணம்! - அசரவைக்கும் ஈரோடு இளைஞர்!

ஈரோடு கொங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவரான விக்னேஷ், பி.காம் ஐடி படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள வங்கி ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். வங்கி வேலை, டீசன்டான சம்பளம் என இருந்துவிடாமல், லீவ் நாளில் சைக்கிள், பைக் என ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு எங்கேயாவது லாங் டிராவலுக்குக் கிளம்பிவிடுகிறார். அப்படியான சமீபத்திய அவரது பயணம்தான் ஈரோடு டு கன்னியாகுமரி. நான்கே நாளில் இந்த 435 கி.மீ பயணத்தை முடித்திருக்கிறார். இரவு நேரத்தில் பெட்ரோல் பங்க்கில் தூக்கம், வெயிலுக்கு டீக்கடை, ஹோட்டலில் ஒதுங்கி கொஞ்சம் ரெஸ்ட் என இந்த நான்கு நாளில் சாப்பாட்டுக்கு மட்டும் 500 ரூபாய் செலவழித்ததோடு, இந்த ட்ரிப்பை முடித்திருக்கிறார்.

``என்ன காரணத்துக்காக சைக்கிளில் இந்த லாங் டிரைவ்?''

``சின்ன வயசுலயிருந்தே எனக்கு சைக்கிள் மேல ஒரு க்ரஷ். 2-வது படிக்கிறப்பவே வீட்டுல சைக்கிள் கேட்டேன். குடும்பச் சூழ்நிலையால  வீட்ல வாங்கிக் கொடுக்கலை. நான் 7-வது படிக்கிறப்ப என் தாத்தாதான் சைக்கிள் வாங்கிக் கொடுத்தாரு. சைக்கிளை எடுத்து பெடலை மிதிக்க ஆரம்பிச்சேன்னா, கால் வலிக்கிறப்பதான் வண்டியை நிறுத்துவேன். சைக்கிள் ஓட்டுறதுல எனக்கு அப்படி ஓர் ஆர்வம். ஒருநாள் பழைய இரும்புக் கடையில ஒரு சைக்கிளைப் பார்த்ததும் 400 ரூபாய் கொடுத்து வாங்கி 4,500 ரூபாய் செலவு பண்ணி பெயின்ட் எல்லாம் அடிச்சி அதை புது வண்டியா மாத்திட்டேன். அந்த சைக்கிளுக்கு `அயர்ன் மேன்’னு பெயர் சூட்டினேன். அவன்கூடதான் இப்போ கன்னியாகுமரிக்குப் போயிட்டு வந்திருக்கேன்” என்றார்.

4 நாள்கள்... 435 கி.மீ சைக்கிள் பயணம்! - அசரவைக்கும் ஈரோடு இளைஞர்!

``மே 27-ம் தேதி சாயங்காலம் 7 மணிக்கு ஈரோடு கொங்கம்பாளையத்துல இருக்கிற என் வீட்ல இருந்து கிளம்புனேன். அன்னைக்கு 23 கி.மீ.க்கு மேல வண்டி ஓட்ட முடியலை. கணபதிபாளையம்கிற இடத்துல ஒரு பெட்ரோல் பங்க் இருந்துச்சி. அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கி நைட் அங்கே தங்கிட்டேன். அடுத்த நாள் காலையில 5 மணிக்கு எழுந்து ரொம்ப உற்சாகமா வண்டி ஓட்டினேன். தினமும் சராசரியா 100 கி.மீ.ங்கிற அளவுல ஓட்ட ஆரம்பிச்சேன். காலையில 5 மணிக்கு வண்டியை எடுத்தா, வெயில் நேரத்துல பெட்ரோல் பங்க், டீக்கடை, ஹோட்டல்ல ஓரம் கட்டிடுவேன். அப்புறம் 4 மணிக்கு ஆரம்பிச்சு, இருட்டுற வரைக்கும் ஓட்டுவேன். ஸ்ட்ராவா-ங்கிற (strava) மொபைல் ஆப்ல ஜி.பி.எஸ் மூலமாக என்னோட டிராவலை கனெக்ட் செஞ்சு, எந்த வழியாக தினமும் எத்தனை கி.மீ போனேன்னு டிராக் பண்ணியிருக்கேன். இந்த 4  நாள்ல ஒரே ஒரு நாள் மட்டும்தான் என் ப்ரெண்டு வீட்ல நைட் தங்கினேன். மீதி மூணு நாளும் பெட்ரோல் பங்க்லதான்.

இந்த டிராவல்ல நான் சந்தித்த மனிதர்கள் எல்லாரும் என்னுடைய முயற்சியைப் பார்த்துப் பாராட்டி, உற்சாகப்படுத்தினாங்க. ஒருசிலர், ஸ்போர்ட் சைக்கிள் யூஸ் பண்ணியிருக்கலாமேன்னு சொன்னாங்க. இந்தப் பழைய சைக்கிள்லயும் என்னால் இவ்ளோ தூரம் போக முடியும்னு நிரூபிக்கத்தான் இதை நான் தேர்ந்தெடுத்தேன். இந்த நாலு நாள் டிராவல்ல எனக்கு எந்தச் சிரமும் இல்லை. வண்டி ஒரு இடத்துலகூட பஞ்சர் ஆகலை. என் ஆசைக்கு, அயர்ன்மேன் எந்த இடைஞ்சலும் பண்ணலை. திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் வீசின பயங்கரமான எதிர்காற்றை மீறி வண்டி ஓட்டுறது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. இன்றைக்கு எல்லாரும் கார், பைக்குன்னு அடிக்ட் ஆகிட்டோம். ஆனா, நம்மளோட பவரை யூஸ் பண்ணி சைக்கிள் ஓட்டுறதுல இருக்கிற ஃபீல் வேற எதுலயும் இல்லை. தினமும் எல்லாரும் அரை மணி நேரமாவது சைக்கிள் ஓட்டணும். அது நம்மை ஹெல்தியாவும் உற்சாகமாவும் வெச்சுக்கும். 

4 நாள்கள்... 435 கி.மீ சைக்கிள் பயணம்! - அசரவைக்கும் ஈரோடு இளைஞர்!

ஈரோட்டில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிள்லயே போகணும்கிறது பெரிய கனவு. இன்னும் ஓரிரு மாசத்துல அந்தப் பயணத்தைத்  தொடங்க இருக்கிறேன். அதுக்கான ஒரு ஒத்திகையாகத்தான் இந்த ஈரோடு - கன்னியாகுமரி ட்ரிப் போனேன். காசு இருந்தா பெட்ரோல் போட்டுக்கிட்டு எந்த வயசுல வேணும்னாலும், எங்க வேணும்னாலும் போகலாம். ஆனா, இந்தச் சின்ன வயசுலதானே இப்படியான ஆசைகளை நிறைவேற்ற முடியும். இந்த 435 கி.மீ சைக்கிள் ஓட்டினது, வாழ்க்கையில் நான் ஏதோ பெருசா சாதிச்ச சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு; இன்னும் பெருசா சாதிப்பேன்னு எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு” என்றார் உணர்ச்சி பொங்க.

உங்களுக்கும் உங்களுடைய அயர்ன் மேனுக்கும் வாழ்த்துகள்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு