Published:Updated:

``அவங்களால நம்மைப் புரிஞ்சுக்க முடியாது... நாமதான் அவங்களைப் புரிஞ்சுக்கணும்!" - குழந்தைகளின் உளவியல் பேசும் தம்பி ராமையா

``அவங்களால நம்மைப் புரிஞ்சுக்க முடியாது... நாமதான் அவங்களைப் புரிஞ்சுக்கணும்!" - குழந்தைகளின் உளவியல் பேசும் தம்பி ராமையா
``அவங்களால நம்மைப் புரிஞ்சுக்க முடியாது... நாமதான் அவங்களைப் புரிஞ்சுக்கணும்!" - குழந்தைகளின் உளவியல் பேசும் தம்பி ராமையா

``குழந்தைகளுக்குப் பெற்றோர் ஸ்பரிசம் படுவதால் ஆறுதலும் அரவணைப்பும் கிடைக்கும். அவர்களின் அன்பான கதகதப்பு வியத்தகு சாதனைகளைப் புரியவைக்கும்'' என்கிறார் நடிகர் தம்பி ராமையா.

ம்பி ராமையா... நடிகர், இயக்குநர். அனைத்தையும் தாண்டி சிறந்த குடும்பத் தலைவர். இரு பிள்ளைகளுக்குத் தந்தை (ஒரு மகன், ஒரு மகள்). மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் உமாபதி `மணியார் குடும்பம்', `திருமணம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். `சாட்டை' படத்தில் மாணவர்களை இம்சிக்கும் ஆசிரியராகவும், `அப்பா' படத்தில் கண்டிப்புடன் பிள்ளையை வளர்க்கும் தந்தையாகவும் நடித்தவர், நிஜத்தில் கனிவும் கருணையுமாகப் பேசுகிறார். 

அவர் குழந்தைகளைப் பெற்றோர் எப்படி அணுகவேண்டும் என்பது பற்றி உளவியல்பூர்வமாக விரிவாகப் பேசுகிறார். 

``அவங்களால நம்மைப் புரிஞ்சுக்க முடியாது... நாமதான் அவங்களைப் புரிஞ்சுக்கணும்!" - குழந்தைகளின் உளவியல் பேசும் தம்பி ராமையா

``கோடை விடுமுறை முடிஞ்சு, பள்ளிக்கூடம் திறந்தாச்சு. ஹையர் செகண்டரி படிக்கிறவங்க, காலேஜ்ல படிக்கிறவங்களையெல்லாம் விட்டுடுங்க. அவங்களுக்கெல்லாம் இப்பவே பல பாடங்கள் அனுபவப் படிப்பினைகள் கிடைச்சிருக்கும். ஆனா, சின்ன குழந்தைங்க மலர்கள் மாதிரி. அவங்க முகம் வாடாதமாதிரி அவங்க குணத்தை நாம புரிஞ்சு நடந்துக்கணும். அது ரொம்ப முக்கியம். ஏன்னா அவங்களால நம்மைப் புரிஞ்சிக்க முடியாது. நாமதான் அவங்களைப் புரிஞ்சிக்கணும். அந்தக் குழந்தைங்க நமக்காகப் பிறக்கலை. நம்ம வழியா பிறந்திருக்காங்க. நாம இல்லைன்னாலும் அவங்க பிறந்திருப்பாங்க. கடவுள் அருளால அந்தக் குழந்தை பிறந்து நமக்கு பெருமை சேர்த்திருக்குனு நினைக்கணும். அவசரமான இந்த உலகத்துல எத்தனையோபேர் குழந்தை இல்லாம அவஸ்தைப்படுறதை நாம கண்ணால பார்க்கிறோம். 

``அவங்களால நம்மைப் புரிஞ்சுக்க முடியாது... நாமதான் அவங்களைப் புரிஞ்சுக்கணும்!" - குழந்தைகளின் உளவியல் பேசும் தம்பி ராமையா

நமக்குப் பிள்ளைகள் இருக்கிறதாலதான் எல்லா குடும்ப நிகழ்ச்சிகள்லயும் கௌரவமாவும், பெருமையாவும் கலந்துக்கிறோம். நமக்குப் பிறகு நம்முடைய வாழ்க்கையை, வளர்ச்சியை பெருமையைப் பேச பிள்ளைகள் இருக்காங்கங்கிற எண்ணம்தான் அதுக்குக் காரணம். அதனால பிள்ளைகளை சுமையா நினைக்காதீங்க. சுகமான சுமையா நினைச்சுத் தூக்குங்க. பள்ளிக்கூடத்தைச் சொல்லி அவங்களைப் பயமுறுத்தாதீங்க. பெற்றோர், ஆசிரியர் இரண்டு பேரையும் பார்த்தா குழந்தைங்களுக்கு `லவ்' வரணும்; பயம் வரக் கூடாது. பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது, `ஐயோ பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டியிருக்கே'னும், வீட்டுக்கு வரும்போது `ஐயோ வீட்டுக்குப்போக வேண்டியிருக்கே'னும் குழந்தைகள் நினைக்கக் கூடாது. பள்ளிக்கூடம், வீடு ரெண்டு இடங்களுமே அவர்கள் விரும்பிப் போகக்கூடிய இடங்களாக இருக்கணும். 

குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதே சுமக்கமுடியாத அளவு புத்தக மூட்டையை அவங்களோட முதுகுல சுமக்க வைக்காதீங்க. நானெல்லாம் ஆறாவது போனப்போ ஒரே ஒரு ரஃப் நோட்டை மட்டும்தான் கையில எடுத்துக்கிட்டுப் போவேன். அப்புறம் ஒருவாரம் கழிச்சு ரெண்டு புத்தகம் வாங்கிக் கொடுப்பாங்க. நோட்டு, புத்தகம் எல்லாத்தையும் ஒரே நேரத்துல வாங்கி எல்லாத்தையும் பைக்குள்ள வெச்சு திணிச்சு, `இந்தா டிபன்பாக்ஸ், ஸ்நாக்ஸ் டப்பா, வாட்டர் பாட்டல்... வேன் வந்திருச்சு ஓடு... ஓடு'னு விரட்டாதீங்க. காலையிலயே அவங்களை பதற்றத்துக்கு உள்ளாக்காதீங்க. 

எல்லோர் வீட்டுலயும் பாருங்க பெரியவங்க சத்தம் போட்டுக்கிட்டே இருப்பாங்க. ஆனா, குழந்தைங்க பொறுமையா இருப்பாங்க. காலையில படுக்கையில இருந்து அவங்களை எழுப்பும்போதே பொறுமையா பூவைக் கையாள்ற மாதிரி அவங்ககிட்ட பேசுங்க... அதிர்ந்து பேசாதீங்க. பிஞ்சு இதயம், பிஞ்சு மூளை, அழகான முகம்... அது வாடிப்போகாமப் பாத்துக்கங்க. காலையில ஏழரை மணிக்கு வேன் வருதா? 7.25-க்கு கொண்டுபோய் நிறுத்துங்க. அரக்க பரக்க, அடிச்சு புடிச்சு ஏழு மணிக்கே நின்னுக்கிட்டு `வேனைக் காணோமே'னு நிக்காதீங்க. அதிர்வு கொடுக்காம குழந்தைங்களை எழுப்புறதே அவங்களுக்குப் பெரிய ஆரோக்கியம். டூயட், மெலடி, குத்துப்பாட்டு, கர்னாடக சங்கீதம்னு நம்ம முன்னோர் பலவிதமான பாடல்களை வெச்சிருக்காங்க. அதுமாதிரி குழந்தைங்களை எழுப்பும்போது மென்மையான பாடல்களையும், நர்சரி ரைம்ஸ்களையும் சொல்லி மெதுவா எழுப்பணும். இப்படிச் செய்தாலே குழந்தைங்க அன்பாயிடுவாங்க. 

``அவங்களால நம்மைப் புரிஞ்சுக்க முடியாது... நாமதான் அவங்களைப் புரிஞ்சுக்கணும்!" - குழந்தைகளின் உளவியல் பேசும் தம்பி ராமையா

எதுக்கு இவ்வளவு பெரிய புத்தக மூட்டை... கிளாஸ் டீச்சர்கிட்ட பேசுங்க. டைம் டேபிள்படி புத்தகங்களை எடுத்துட்டு வந்தா போதும்னு சொல்வாங்க. இதையெல்லாம் பக்குவமா குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்க. எல்லாத்தையுமே அவங்களுக்குப் பழக்கப்படுத்துங்க. `எங்க அம்மா மாதிரி உண்டா, எங்க அப்பா மாதிரி உண்டா?'னு பேச ஆரம்பிச்சிடுவாங்க. இதைவிட்டுட்டு குழந்தைங்க ஒருத்தருக்கொருத்தர் பேசும்போது `எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டைடா... சரியாக்கூட சாப்பிடலை'னு சொன்னா நல்லாவா இருக்கும். இந்த விவாதம் பள்ளிக்கூடத்துல நடக்கிறது நியாயமா? 

குழந்தைகளைத் துன்புறுத்துறதுங்கிறது நேரடியா அவங்களை அடிச்சி உதைச்சு திட்டுறதுனு இல்ல. அப்பா, அம்மா ஒருத்தருக்கொருத்தர் வாக்குவாதம் பண்ணி அடிச்சிக்கிட்டாலே அது அவங்களைத் துன்புறுத்துறது மாதிரிதான். குழந்தைங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வெச்சிட்டு அதுக்குப்பிறகு உங்க விவாதத்தை வெச்சுக்கங்க. 

விவாதம் பண்ணுங்க... அப்போதான் குடும்பம் வளர்ச்சியடையும். ஆனா, ஒருத்தருக்கொருத்தர் வாதம் பண்ணாதீங்க. குழந்தைங்க பட்டாம் பூச்சி மாதிரி... அவங்களை இயல்பா பறக்கவிடுங்க. நல்ல மனநிலையோட அவங்க பள்ளிக்கூடம் போனாதான், வாத்தியார் பாடம் நடத்தும்போது அதையெல்லாம் முறையா அவங்களால கவனிக்க முடியும். அவங்க மனசு வெள்ளையடிச்ச சுவர் மாதிரி... நாம அதுல என்னமாதிரியான சித்திரத்தை வரையுறோமோ அதுதான் அவங்க மனசுல இருக்கும். 

கணவர் வேலையிலிருந்து வந்ததும் எப்படி ஒரு பத்து நிமிஷம் அவரை ரிலாக்ஸா விடுறீங்களோ, அதேபோல பள்ளிக்கூடம் முடிஞ்சி வந்ததும் குழந்தைங்களை ஃப்ரீயா விடுங்க. வந்தும் வர்றதுக்குள்ள, `இன்னிக்கு என்ன வீட்டுப் பாடம்', `இன்னிக்கு வெச்ச டெஸ்ட் எப்படியிருந்துச்சு'னு கேள்வி கேட்காதீங்க. பத்து நிமிஷம் எதுவும் பேசாதீங்க; அதுவா பேசும். பள்ளிக்கூடத்துல மாணவன், மாணவியா இருந்தவங்க மகனா, மகளா மாறுறதுக்கு அவகாசம் தேவைப்படும். அவங்கக்கிட்ட அதிர்ந்து பேசாதீங்க.

ஒரு குழந்தையை வளர்க்கும்போது ரெண்டு விஷயத்தை ஞாபகம் வெச்சுக்கங்க. சரீரம், சாரீரம் இது ரெண்டையும் ஒரு குழந்தையைக் கவனிக்கச் சொல்லுங்க. அவங்களுடைய உடல், குரல் ரெண்டையும் அவங்க நேசிக்கக் கற்றுக் கொடுங்க. அவங்க குரலை நேசிக்க ஆரம்பிச்சிட்டாலே உடலையும் நேசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. இது இரண்டையும் நேசிச்சாலே அவங்களுக்கு உணவுக் கட்டுப்பாடு வந்திடும். உணவுக் கட்டுப்பாடு வந்துட்டா மனக் கட்டுப்பாடு வந்துடும். இது ரெண்டும் வந்தாலே, குழந்தைங்க எதிலயும் அத்துமீறிப் போகமாட்டாங்க. குழந்தைகள்மேல தாய், தந்தையோட ஸ்பரிசம் படப்பட அவங்களுக்கு ஆறுதலும், அரவணைப்பும் கிடைக்கும். பெத்தவங்களோட அன்பான பேச்சும், அந்தக் கதகதப்பும் குழந்தைகளை வியக்கத்தக்க சாதனைகளைச் செய்ய வைக்கும்!'' என்கிறார் நடிகர் தம்பி ராமையா.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு