Published:Updated:

தமிழ் வழிக்கல்வி, பெயின்டரின் மகள்... தேனி உதயகீர்த்திகாவின் விண்வெளி கனவு சாத்தியமானது இப்படித்தான்!

தமிழ் வழிக்கல்வி, பெயின்டரின் மகள்... தேனி உதயகீர்த்திகாவின் விண்வெளி கனவு சாத்தியமானது இப்படித்தான்!
தமிழ் வழிக்கல்வி, பெயின்டரின் மகள்... தேனி உதயகீர்த்திகாவின் விண்வெளி கனவு சாத்தியமானது இப்படித்தான்!

மும்மொழிக் கல்விக் கொள்கை பற்றிய விவாதம் சூடுபரக்க நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், தமிழ் வழியில் படித்த தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் விண்வெளி கனவு நிறைவேற, முக்கியமான அடியை எடுத்து வைத்திருக்கிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக்கூடிய செய்தி அல்லவா! உதயகீர்த்திகா எனும் அப்பெண் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவரின் அப்பா அல்லிநகரம் தாமோதரன். இவர் ஓர் எழுத்தாளர். பெயின்டராகப் பணியாற்றியவர். ஃப்ளெக்ஸ் போர்டுகளின் வரவால் தொழில் நொடிந்துபோன தொழில்முறை ஓவியர்களில் இவரும் ஒருவர். இப்படியான சூழலிலிருந்து எப்படிச் சாத்தியமானது உதயகீர்த்திகாவின் வெற்றிப் பயணத்தின் கதையை அவரின் அப்பாவிடம் கேட்டோம். 

தமிழ் வழிக்கல்வி, பெயின்டரின் மகள்... தேனி உதயகீர்த்திகாவின் விண்வெளி கனவு சாத்தியமானது இப்படித்தான்!

"உதயகீர்த்திகாவுக்கு எப்போதுமே அறிவியல் தொடர்பான செய்திகளைத் தெரிந்துகொள்வதில் ரொம்ப ஆர்வம். தேனியில் அவள் படித்தது தனியார் பள்ளிதான் என்றாலும் தமிழ் வழியில்தான் படித்தார். நான் பெயின்டராக மதுரையில் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது ஃப்ளெக்ஸ் போர்டில் கடைகளுக்கான விளம்பரம் செய்வது பெருகியதால், எனக்கு வேலை வருவது குறைந்துவிட்டது. அதனால், அங்கிருந்த தொண்டு நிறுவனம் ஒன்றில், குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தேன். அதை வைத்து, உதயகீர்த்திகாவின் விருப்பங்களை நிறைவேற்றியே வந்தேன். அப்போது, செய்தித்தாளில், மாணவர்களுக்காக இஸ்ரோ ஒரு கட்டுரைப் போட்டி நடத்துவதாக அறிவிப்பைப் பார்த்தேன். 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகளிடம் காட்டினேன். உலக நாடுகள் விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களின் விவரங்கள் உட்படப் பல விஷயங்களை ஒட்டி, நான்கே நாளில்  'சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதிவிட்டாள்.

இந்தப் போட்டியில் கலந்துகொண்டாலே போதும் என்றுதான் அக்கட்டுரையை அனுப்பினோம். ஆனால், இஸ்ரோவிலிருந்து வந்த கடிதத்தில் அக்கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது என்றிருந்தபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதேபோன்ற போட்டியை 12-ம் வகுப்புப் படிக்கும்போது எழுதி, மாநில அளவில் பரிசு பெற்றாள். இதற்கான விழாக்களுக்குச் சென்றபோது பல விஞ்ஞானிகளைச் சந்தித்துப்பேசும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது. இந்தப் பரிசுகளும் பாராட்டுகளும் அவளுக்கு விண்வெளி பற்றிய கனவை ஆழமாகப் பதிய வைத்துவிட்டன. 

தமிழ் வழிக்கல்வி, பெயின்டரின் மகள்... தேனி உதயகீர்த்திகாவின் விண்வெளி கனவு சாத்தியமானது இப்படித்தான்!

ஐ.ஐ.டி தொடர்பான ஒரு தேர்வுக்காக மதுரைக்கு மகளை அழைத்து வந்திருந்தேன். அப்போது, அங்கே ஒருவர், வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு பற்றிய நோட்டீஸ் ஒன்று கிடைத்தது. உக்ரைன் நாட்டில், கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிக்கும் வாய்ப்பு இருந்ததைப் பார்த்த உதயகீர்த்திகா, அங்கு சென்று படிக்க ஆசைப்பட்டாள். அதற்காக, விசாரித்தபோது சுமார் 12 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் எனத் தெரிந்ததும் சோர்ந்துபோய்விட்டோம். ஆரம்பச் செலவுகளுக்காக என் மனைவியின் சகோதரியுடைய நகைகளை அடமானம் வைத்துச் சமாளித்தோம். அதன்பிறகு, சில தனியார் அமைப்புகளைச் சந்தித்து உதவிகளைக் கேட்டேன். அப்போதுதான் ஆனந்த விகடனில் 'அறம் செய்ய விரும்பு' திட்டத்தின் மூலம் பலருக்கும் உதவி செய்வது தெரிய வந்தது. என்னுடைய கதைகள் பல ஆனந்த விகடனில் வெளியாயிருக்கின்றன. அதனால் மற்றவர்களைவிட, கூடுதலான உறவு எனக்கு இருக்கிறது. எனவே, தயக்கமில்லாமல் அணுகினேன். விகடனும் நடிகர் ராகவா லாரன்ஸும் உதவியதில் என் மகள் உக்ரைன் செல்லும் ஆசை நிறைவேறியது. 1,80,000 ரூபாய் இதன்மூலம் கிடைத்தது. நான்கு வருடப் படிப்புக்கு ஒவ்வோர் ஆண்டும் விகடன் சார்பில் உதவிகள் கிடைத்து வருவது பெரிய பலம் எங்களுக்கு. உக்ரைனில் அவளின் படிப்பு சென்ற மாத இறுதியோடு முடிகிறது. 92.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றிருக்கிறாள்.

உதயகீர்த்திகா ஒன்றை முடிப்பதற்குள் அடுத்தது என்ன என்ற தேடலில் இருப்பாள். அப்படி அவளின் தேடலில் அடுத்தது, போலந்து நாட்டிலுள்ள Analog Astronaut Training Center எனும் விண்வெளி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி எடுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விண்வெளிப் பயணத்தில் ஒருவர் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான பல கட்டங்களாக அளிக்கப்படும் பயிற்சி இது. உலக அளவில் வாய்ப்பு கிடைத்திருக்கும் 20 பேரில் என் மகளும் இடம் பிடித்திருப்பது பெருமைதான். ஆனால், இதற்கு சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவாகும் என்பதுதான் தயக்கத்தைக் கொடுக்கிறது. என்றாலும் சமாளித்துப் படிக்க வைப்பேன்" என்கிறார் நம்பிக்கையுடன் தாமோதரன். 

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரே இந்தியாவிலிருந்து விண்வெளிக்குப் பயணித்த பெண்கள். அதுவும் இவர்கள் இந்திய வம்சாவளியினர்தான். நாளை உதயகீர்த்திகா விண்வெளிப் பயணம் செல்லும்போது இந்தியாவிலிருந்து நேரடியாகப் படித்து, அதுவும் தமிழ் வழியில் படித்த ஒருவர் சென்றதாக வரலாற்றில் பதிவு செய்யப்படும். அது நிறைவேறும் நாளுக்காகக் காத்திருப்போம். 

Vikatan