Published:Updated:

`குடும்பத்தோடு தற்கொலை எண்ணம் ஏன்?' மிரள வைக்கும் உளவியல் பார்வை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`குடும்பத்தோடு தற்கொலை எண்ணம் ஏன்?' மிரள வைக்கும் உளவியல் பார்வை!
`குடும்பத்தோடு தற்கொலை எண்ணம் ஏன்?' மிரள வைக்கும் உளவியல் பார்வை!

பெங்களூரில் நடந்த சம்பவத்தைப் பார்க்கும்போது அவர் பல நாள்களாகத் தற்கொலைபற்றி யோசித்தவராகத்தான் தெரிகிறது. திடீரென எண்ணம் ஏற்பட்டு அவரின் மகனைத் தூக்கிலிட்டதாகத் தெரியவில்லை. ஆரம்பத்திலேயே அந்த எண்ணத்தைத் தடுத்திருந்தால் இன்றைக்கு இரண்டு உயிர்கள் போயிருக்காது.

ஞாயிற்றுக்கிழமை என்பது அனைவராலும் மிகவும் விரும்பிக் கொண்டாடப்படும் ஒரு நாள். எந்திரமயமாகிப்போன வாழ்க்கைச் சூழலில் கொஞ்சம் ஓய்வெடுக்க, குடும்பத்தினருடன் உரையாட, பிடித்த இடங்களுக்குச் செல்ல என அந்தநாள் மட்டுமே அடுத்துவரும் வாரத்துக்கான சோர்வு நீக்கியாக, உற்சாகமூட்டியாக இருக்கும். ஆனால், கடந்த ஞாயிறு பெங்களூர் ஹெச்.ஏ.எல் பகுதியைச் சேர்ந்த கீதாபாய்க்கும் அவரின் 12 வயது மகன் வருணுக்கும் துயரமான ஒரு நாளாக அமைந்துவிட்டது. தன், சொந்த அப்பாவின் கையால் துடிக்கத் துடிக்க, தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்துபோனான் சிறுவன் வருண். அவனைக் காப்பாற்ற அவன் அம்மாவும் சகோதரியும் கல்நெஞ்சம் படைத்த அந்தக் குடும்பத் தலைவனிடம் மன்றாடிக் கதறுகின்றனர். அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அந்தச் சிறுவனைத் தூக்கில் மாட்டிக் கொன்று விடுகிறார் சுரேஷ் என்னும் அந்தத் தந்தை. மகன் இறந்த துக்கம் தாளாமல், தாய் கீதாபாயும் தற்கொலை செய்துவிடுகிறார். மகளின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவர போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார் சுரேஷ். 

`குடும்பத்தோடு தற்கொலை எண்ணம் ஏன்?' மிரள வைக்கும் உளவியல் பார்வை!

சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், `கடன் தொல்லை காரணமாகக் குடும்பத்தில் உள்ள அனைவரையும்

`குடும்பத்தோடு தற்கொலை எண்ணம் ஏன்?' மிரள வைக்கும் உளவியல் பார்வை!

கொன்றுவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டிருந்தேன்' என்று தெரிவிக்கிறார் சுரேஷ். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. இப்படியெல்லாம்கூட நடக்குமா என்று பார்ப்பவர்கள் அனைவரின் இதயத்தையும் பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. குலை நடுங்கச் செய்யும் இதுபோன்ற செயல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குடும்பத்துடன் தற்கொலை செய்வதற்குப் பெரும்பாலும் கடன் தொல்லை, அதனால் எழும் நெருக்கடிதான் பிரதான காரணமாக இருக்கிறது.

பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள், கடன் சுமை போன்றவை அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், அது பெற்ற பிள்ளைகளைக் கொன்றுவிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்வது வரை செல்வது ஏன் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது.

``குடும்பத்துடன் தற்கொலை செய்யும் இதுபோன்ற நிலைகளை, நாம் `ஃபேமிலிசைட்' (Familicide) என்போம். தான் மட்டும் இறந்துவிட்டால், தனக்குப் பிறகு தன் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் என்கிற குடும்பத்தின்மீதான அதீத பாசமே இது போன்ற குடும்பத் தற்கொலைகளுக்குக் காரணம்" என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கினார் அவர்.

`குடும்பத்தோடு தற்கொலை எண்ணம் ஏன்?' மிரள வைக்கும் உளவியல் பார்வை!

``குடும்பத்தின் தலைவராக இருக்கும் ஆண் நபர்தான் இதுபோன்ற முடிவுகளை பெரும்பாலும் எடுப்பார்கள். அவர்கள்தான் தற்கொலை பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள். பொதுவாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதில் முதன்மையானவையாகப் பொருளாதார நெருக்கடியும் கடன் சுமையும் காரணமாகச் சொல்லப்படுகிறது. அப்போது குடும்பத்தின் தலைவர் தான் மட்டும் இறந்துபோனால், தனக்குப் பிறகு குடும்பத்தினர் கஷ்டப்படுவார்கள் என்று யோசிப்பார்கள். தனது இறப்புக்குப் பிறகு அவர்கள் கஷ்டப்படக் கூடாது என்கிற தவறான எண்ணத்தில் அவர்களையும் தற்கொலையில் ஈடுபடுத்துவார்கள். ஏறக்குறைய அதைக் கொலை என்றுதான் சொல்ல வேண்டும்.  

தங்களது குடும்ப உறுப்பினர்களில் யாராவது தவறு ஏதும் செய்தாலோ, குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ குடும்ப கௌரவம் பறிபோய்விட்டதாகவோ, மானம் போய்விட்டதாகவோ நினைப்பார்கள். இதனாலும் சிலர்  குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுப்பார்கள். அடுத்ததாக, குடும்ப உறுப்பினர்கள்மீது ஏற்படும் ஆத்திரத்தில், கோபத்தில் அவர்களைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வார்கள். இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் குடும்பத் தற்கொலைகள் நடக்கின்றன. குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கும் குடும்பத்தின் தலைவருக்கு மதுப்பழக்கம் இருந்தால், அவர் அந்த முடிவை வெகு எளிதாக எடுக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால் மதுப்பழக்கம் மூலம் தன்னை அழித்துக்கொள்வதில் அவருக்கு எந்தவித அச்சமும் இருக்காது. அதனால் தன் குடும்ப உறுப்பினர்களை தற்கொலைக்குத் தூண்டுவதிலோ, கொலை செய்வதிலோ அவருக்குப் பெரிய பயமோ, வருத்தமோ இருக்காது. 

`குடும்பத்தோடு தற்கொலை எண்ணம் ஏன்?' மிரள வைக்கும் உளவியல் பார்வை!

ஒருவர் தன் தாயைக் கொலை செய்வது `மேட்ரிசைட் (Matricide)'; தந்தையைக் கொலை செய்வது 'பேட்ரிசைட் (Patricide)'; பெற்றோரைக் கொலை செய்வது 'பேரிசைட்' (Parricide) எனப்படுகிறது. உடன் பிறந்தவர்களைக் கொலை செய்வது 'சிப்ளிசைட்' (Siblicide) எனப்படுகிறது. அதிலும் சகோதரரைக் கொலை செய்வது 'ஃப்ராட்ரிசைட்' (Fratricide) எனவும் சகோதரியைக் கொலை செய்வது 'சோரோரிசைட்' (Sororicide) எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெற்ற குழந்தையைக் கொலை செய்வது 'ஃபிலிசைட்' (Filicide) எனவும், மனைவியைக் கணவன் கொலை செய்வது 'யூக்ஸோரிசைட்' (Uxoricide) எனவும், கணவனை மனைவி கொலை செய்வது 'மேரிட்டிசைட்' (Mariticide) எனவும் குடும்பக் கொலையில் பல வகைகள் இருக்கின்றன. 

குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்வதோடு மட்டுமல்லாமல், இறுதியாகத் தாங்களும் தற்கொலை செய்துகொண்டு இறந்து போவார்கள். அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் துளிகூட இருக்காது. மாறாக, தான் இல்லாவிட்டால் தன் குடும்பத்தினர் உணவுக்கும், கடனை அடைக்கவும் மிகவும் சிரமப்படுவார்களே என்கிற எண்ணத்தில்தான் அப்படிச் செய்கிறார்கள். குடும்பத் தற்கொலைகளைத் தவிர்க்க ஒரே வழிதான் இருக்கிறது. குடும்பத்தில் யாருக்காவது அப்படியோர் எண்ணம் லேசாக எழுந்தாலும், உடனடியாக அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிடுவது நல்லது. முறையாக கவுன்சலிங் கொடுத்து அந்த எண்ணத்தை நிச்சயமாக மாற்றிவிட முடியும். கணவனை, அப்பாவை எப்படி மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்வது என்கிற தயக்கமோ, கவனக்குறைவோ இருந்தால் அது நிச்சயமாக மிகப்பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். தவிர குடும்ப உறுப்பினர்கள் நம்பிக்கையான வார்த்தைகளைப் பேசி அவர்களை மாற்றலாம். 

`குடும்பத்தோடு தற்கொலை எண்ணம் ஏன்?' மிரள வைக்கும் உளவியல் பார்வை!

பெங்களூரில் நடந்த சம்பவத்தைப் பார்க்கும்போது அவர் பல நாள்களாகத் தற்கொலைபற்றி யோசித்தவராகத்தான் தெரிகிறது. திடீரென எண்ணம் ஏற்பட்டு அவரது மகனைத் தூக்கிலிட்டதாகத் தெரியவில்லை. ஆரம்பத்திலேயே அந்த எண்ணத்தைத் தடுத்திருந்தால் இன்றைக்கு இரண்டு உயிர்கள் போயிருக்காது. எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு இருக்கிறது. அதை அனைவரும் உணர்ந்துகொண்டு, நெருக்கடிகளைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தால் இதுபோன்ற தற்கொலைகளைத்  தடுக்கமுடியும்'' என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு