Published:Updated:

இன்று புதிதாய்த் திறந்தோம்!

செவ்வாப்பேட்டையில் புதுமைப் புகுவிழா

''அன்னை வயலிலிருந்து/வரும்/அன்பு அழைப்பு இது...'' - திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பொன்.இராசசேகரன் அனுப்பிய கவிதையோடு கூடிய இந்தப் புதுமனை புகுவிழா அழைப்பிதழ் நம் மைக் கவர்ந்ததுபோல், வாய்ஸ்நாபில் அவர் தந்தத் தகவலும் கவர்ந்தன. 'இது பஞ்சாங்கம் பார்த்து, நாள் குறித்து, பன்னீர் தெளித்து, மாக்கோலம் போட்டு, பால் பொங்கவைத்து நடைபெறும் விழா அல்ல; இரு கைம்பெண்கள் இல்லத்தைத் திறக்க, எழுத்தாளர் பிரபஞ்சன் உரையாற்ற, வாழ்த்த வருபவர்களுக்கு மருத்துவக் குணம் உள்ள மரக் கன்றுகள் வழங்க, இனிதே நடைபெறும் விழா. பெருமைக்காகவோ, விளம்பரத்துக்காகவோ இதைச் செய்யவில்லை. படைப்பாளர்களுக்கும் மொழிக்கும் இப்படியும் புதுமையாகப் பெருமை சேர்க்கலாம் என நாலு பேருக்கு வழிகாட்டவே இந்த விழா’ எனத் தொடர்ந்தது இராசசேகரன் குரல்.

இன்று புதிதாய்த் திறந்தோம்!
##~##

செவ்வாப்பேட்டையில் இறங்கியதுமே அரசியல்வாதிகளுக்கு வைக்கப்படுவது போல் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த பிரபஞ்சனுக்கான பேனர்கள் நம்மை வரவேற்றன. நிகழ்ச்சியில் அழைப்பிதழ் தொடங்கி அனைத்திலும் பெண்களுக்கே முதல் மரியாதை. ''தஞ்சையை அடுத்து உள்ள பாபநாசம் என் சொந்த ஊர். அம்மா செல்லம்மாள், அப்பா பொன்னுசாமி இருவருமே விவசாயிகள். எனக்கு குடும்ப நலத் துறை பண்டகசாலையில் எழுத்தர் பணி. மனைவி புஷ்பஇலக்குமி, மகன் அருண்குமார், மகள் அர்ச்சனா. என் இத்தனை வருட அனுபவத்தில் பெண்கள் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதை உணர்ந்தவன்; நம்புபவன். எட்டு மணி நேர வேலைக்கே அலுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு மத்தியில் எந்த வித சோர்வும் இல்லாமல் காலம் முழுவ தும் உழைக்கும் அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் கொண்டாடினாலும் தகும்.

என் அம்மா 15 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். பிறகு என் பெரியம்மா செகதாம்பாள் என் அம்மாவானார். அடுத்து மாமியார் முத்துஇலக்குமி. பதில் உதவி எதிர்பாராத இவர்களுடைய பாசம் மட்டுமே என் இல்லத்தை ஆள்கிறது. பெண்களின் இந்தப் பாசம் என் வீட்டுக்கு மட்டும் அல்ல; இந்த உலகுக்கும் பொருந்தும். அதனால்தான் கைம்பெண்களாக இருந்தாலும் பெரியம்மா, மாமியார் இருவரும் புது இல்லம் திறக்க உள்ளனர். மேலும் பெண்களின் பெருமையைத் தூக்கிப் பிடிக்கும் பிரபஞ்சனைப் பேச அழைத்தேன். என் மகன் அருண்குமார் எம்.டெக்., முடித்து ரயில்வேயில் பொறியாளராக இருக்கிறான். மகள் அர்ச்சனா, காலிகட் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் எம்.டெக்., படிக்கிறாள். இவர்களுக்குத் தமிழ் முறைப்படி திருமணம்செய்ய வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை'' எனப் பெருமை பொங்கப் பேசினார் இராச

சேகரன். செகதாம்பாள் ரிப்பன் வெட்ட, பாரதிதாசன் படத்தை முத்துஇலக்குமி திறந்துவைக்க, புதுமனை புகுவிழா இனிதே முடிந்தது.

இன்று புதிதாய்த் திறந்தோம்!

''நான் படித்த மராட்டியக் கதை அதிசுவாரஸ்யமானது. ஒரு பெண், நாயைத் திருமணம் செய்து கொண்டாள். 'நாய் போட்டதைத் தின்னுட்டு கிடக்கும்; கேள்வி கேட்காது. முதல் நாளில் தரும் அதே மரியாதையைக் கடைசிவரை தரும். டாஸ்மாக் போய் வந்து நடு இரவில் கதவைத் தட்டாது’ என அதற்கு மூன்று காரணங்களையும் அடுக்கினாள். இந்தக் கதை ஆண்களின் அத்துமீறலை அழுந்தச் சொல்கிறது'' என்று கதையுடன் தன் பேச்சைத் தொடங்கிய பிரபஞ்சன், ''எனக்கு மட்டும் நீளமான தலைமுடி இல்லையே என்று கவலைப்படுபவர்களாகவே பெண்களை விளம் பரங்கள் சித்திரிக்கின்றன. எதற்கு நீளமான தலைமுடி? பட்டுப் புடவை? சுடிதார் அணிவதுதானே எளிதாகவும் வசதியாகவும் இருக்கும்?'' என்றவர், போகிறபோக்கில் அரசையும் ஒரு பிடிபிடித்தார்.

''இன்று அரசு இலவசங்கள் தந்து மக்களைக் கெடுத்துவிட்டது. எப்போது இலவசம் தரும் என மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இது, ஆரோக்கியமானது அல்ல; 63-வது குடியரசு தினத்தை அரசு கொண்டாடுகிறது. ஆனால், மக்கள் கொண்டாடும் அளவுக்கு அரசு இல்லை. 2020-ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்கிறார் கலாம். வல்லரசைவிட நல்லரசாக இருந்தாலே போதும்'' என்ற பிரபஞ்சனின் பேச்சுக்கு அமோக வரவேற்பு. விழா முடிவில் வந்தவர்கள் அனைவருக்கும் மரக் கன்றுகள் வழங்கும்போது, இராசசேகரனின் முகத்தில் அத்தனை திருப்தி!

இன்று புதிதாய்த் திறந்தோம்!

- க.நாகப்பன்
படங்கள்: ப.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு