Published:Updated:

குடிக்கத் தண்ணீர் இல்லை... ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழந்த குரங்குகள்!

குடிக்கத் தண்ணீர் இல்லை... ஹீட் ஸ்ட்ரோக்கால்  உயிரிழந்த குரங்குகள்!
குடிக்கத் தண்ணீர் இல்லை... ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழந்த குரங்குகள்!

நாடு முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்கு பல மைல் தூரம் நடந்து செல்லவேண்டிய நிலையில்தான் இன்னும் இந்தியாவின் பல கிராமங்கள் இருக்கின்றன. சென்ற வருடம் பொய்த்துப்போன பருவமழையின் காரணமாக, நீர்ப் பற்றாக்குறை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 

குடிக்கத் தண்ணீர் இல்லை... ஹீட் ஸ்ட்ரோக்கால்  உயிரிழந்த குரங்குகள்!

குடிநீர் பிரச்னை, மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளையும், பறவைகளையும்கூட பாதித்துவருகிறது. மனிதர்கள், எப்பாடுபட்டாவது தங்களுக்குத் தேவையான நீரைச் சேகரித்துவிடுகிறார்கள். ஆனால், விலங்குகள் செய்வதறியாமல் செத்து மடிகின்றன. அப்படியொரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமீபத்தில் நடந்தேறியிருக்கிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள திவாஸ் நகரில் ஜோஷி பாபா  என்ற வனப்பகுதி உள்ளது. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிக்கத் தண்ணீர் இல்லாததால், 15 குரங்குகள் உயிரிழந்துள்ளன. ஜோஷி பாபா வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் ஒருவன், குரங்குகள் ஆங்காங்கே இறந்துகிடந்ததை கிராமத்தினரிடம் கூறியிருக்கிறான். அவர்கள்,  வனத்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். வனத்துறையினர் விரைந்துவந்து பார்த்தபோது,  ஒரு குகைக்குள் இருந்த 8 குரங்குகளும், குகைக்கு வெளியில் ஆங்காங்கே ஏழு குரங்குகளும் இறந்துகிடந்துள்ளன. 

குடிக்கத் தண்ணீர் இல்லை... ஹீட் ஸ்ட்ரோக்கால்  உயிரிழந்த குரங்குகள்!

குரங்களின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனை செய்துபார்த்ததில், உயிரிழந்த  குரங்குகள் அனைத்தும் நீர் வறட்சியின் காரணமாக 'ஹீட் ஸ்ட்ரோக்'கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ''ஜோஷி பாபா வனத்தில் 5 அல்லது 6 குழுக்களாக குரங்குகள் வசித்து வருகின்றன. கடும் வெயில் மற்றும் வறட்சி காரணமாக, பெரும்பாலான நீர்நிலைகள் வற்றிவிட்டன. சிறிதளவு தண்ணீர் இருக்கும் நீர்நிலைகளைப் பெரிய குரங்குகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. தண்ணீர் குடிக்க வரும்  சிறிய குரங்குகளைத் தண்ணீர் குடிக்கவிடாமல் தாக்கி, அச்சுறுத்தி விரட்டியுள்ளன. இதனால் சிறிய குரங்குகள், வெயில் தாங்காமல் சுருண்டுவிழுந்து இறந்துள்ளன'' என்று கூறியுள்ளார்.  

Vikatan