Published:Updated:

அது சிங்கம்... காட்டுக்கே ராஜா... அதைப்போய் இப்படிச் செஞ்சீட்டீங்களே!?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அது சிங்கம்... காட்டுக்கே ராஜா... அதைப்போய் இப்படிச் செஞ்சீட்டீங்களே!?
அது சிங்கம்... காட்டுக்கே ராஜா... அதைப்போய் இப்படிச் செஞ்சீட்டீங்களே!?

காட்டுயிர்கள் மனித மிருகங்களால் ஆபத்துகளைச் சந்திப்பது சமீபகாலங்களில் அதிகமாகி வருகிறது. உணவுச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கும் யானை, புலி, சிங்கம் போன்ற பேருயிர்கள் மனிதர்களின் பேராசைக்காக அனுபவிக்கும் அவலங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

கற்பனை செய்துபாருங்கள். நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே இருக்க முடிகிற கூண்டுக்குள் 20 பேரை அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்த மனிதர்கள் தோல் நோய்க்கு ஆட்பட்டு, உடலில் வலுவின்றி நடக்கக்கூட முடியாத பலரும் தவழ்ந்துகொண்டு, பிறக்கும் குழந்தைகள் பிறவியிலேயே மூளையில் ஏற்பட்ட குறைபாடுகளால் கை, கால்கள் செயலிழந்து துன்பப்படுகிறார்கள். ஆனால், அவர்களை அடைத்து வைத்திருப்பவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலையே படுவதில்லை. அந்த மனிதர்களை அவர்கள் வளர்ப்பதே அவர்களைக் கொன்று எலும்புகளைச் சேகரித்து பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பதற்காகத்தான். கேட்கும்போதே உடல் நடுங்குகிறதா! நெஞ்சம் பதைக்கின்றதா! இதை அப்படியே ஆப்பிரிக்க சிங்கம் போன்ற காட்டுயிர்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். 

ஒருவேளை இந்த விஷயத்தைச் சிங்கங்களுக்குச் செய்கிறார்கள் என்று எடுத்தவுடனே சொல்லியிருந்தால், அதை வெறும் ஒரு செய்தியாகக் கடந்து சென்றிருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், மனித உயிருக்கு நாம் அளிக்கும் மதிப்பில் பாதியைக்கூட மற்ற உயிர்களுக்குக் கொடுப்பதில்லை. 

காட்டுயிர்கள் மனித மிருகங்களால் ஆபத்துகளைச் சந்திப்பது சமீபகாலங்களில் அதிகமாகி வருகிறது. உணவுச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கும் யானை, புலி, சிங்கம் போன்ற பேருயிர்கள் மனிதர்களின் பேராசைக்காக அனுபவிக்கும் அவலங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. மனிதர்கள் 100 பேரைக் கூண்டில் அடைத்து வைத்து வியாபாரம் செய்தால், ஒரு புரட்சியே வெடித்துவிடும்.  அதுவே புலியையோ சிங்கத்தையோ கூண்டில் அடைத்து வைத்து வியாபாரம் செய்தால், யார் வந்து கேட்பார்கள். ஒருசில காட்டுயிர் ஆர்வலர்களைத் தவிர... 

அது சிங்கம்... காட்டுக்கே ராஜா... அதைப்போய் இப்படிச் செஞ்சீட்டீங்களே!?

Photos Courtesy: Conservation Action Trust

மனிதர்களையே கூண்டுகளில் அடைத்து விற்பனை செய்த பெருமைமிகு வரலாற்றைப் பெற்ற உயிரினம்தானே நாம். நமக்கு இவையெல்லாம் எம்மாத்திரம். ஒரு சில பண முதலைகள் கொழுப்பதற்காகச் சில உயிரினங்கள் படும் பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 

ஏற்கெனவே விகடன் தளத்தில், தென்னாப்பிரிக்காவில் சிங்கக் கடத்தல் சட்டபூர்வமாக நடந்துகொண்டிருப்பது குறித்துப் பார்த்திருந்தோம். அப்படி வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்காக வளர்க்கப்படும் சிங்கங்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் காதளவில் கேட்டாலே உடல் நடுங்கும். 

தென்னாப்பிரிக்காவின் வடமேற்குப் பகுதியில் சில நூறு சிங்கங்கள் இதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூடத்தை நேஷனல் ஜியாகரபி செய்த புலனாய்வு மூலம் கண்டுபிடித்தது. அங்கிருந்ததில் ஒரு சிங்கம்கூட ஆரோக்கியமாக இல்லை. வாழ இடமே இல்லாத அளவுக்குக் கூண்டுகளுக்குள் நெருக்கி அடைத்துள்ளார்கள். காட்டில் வாலை வில்போல் வளைத்துக்கொண்டு நிமிர்ந்த நெஞ்சோடு நடந்திருக்க வேண்டிய சிங்கம். அங்கு, அடைபட்ட கூண்டுக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றன. 

விலங்குகளுக்கு எதிரான அநீதிகளைத் தடுக்கும் தேசிய சபை இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் சம்பவ இடத்துக்குச் சென்றார்கள். பைனிகா (Peinika Farm) என்ற பண்ணையில் சிங்கக் கூட்டம் நூற்றுக்கணக்கில் அடைபட்டிருப்பதாகவும் அவை மிகக் கொடூரமான முறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்து அவர்கள் அங்கு சென்றார்கள். சென்று பார்த்தபோது அங்கிருந்த நிலையைப் பார்க்க முடியாமல் கண்ணீர்விட்டு அழத் தொடங்கிவிட்டார்கள். 

அது சிங்கம்... காட்டுக்கே ராஜா... அதைப்போய் இப்படிச் செஞ்சீட்டீங்களே!?

அங்கிருந்த 27 சிங்கங்கள் மாங்கே (Mange) என்ற தோல் தொற்று நோய்க்கு ஆளாகி அவதிப்பட்டுக்கொண்டிருந்தன. அங்கு ஒரு சிங்கம்கூட தெம்பாக இல்லை. அனைத்துமே தம் உடலிலிருந்த முடிகள் உதிர்ந்து, கால்கள் வலுவிழந்து இருந்தன. அவை, மிகவும் அருவருப்பான இடத்தில்தான் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சிங்கம் அல்லது இரண்டு சிங்கங்கள் இருக்கக்கூடிய இடத்தில் 30 சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்தால் அவை எப்படி நிம்மதியாக வாழமுடியும். மூன்று சிங்கக் குட்டிகளுக்குப் பிறவியிலேயே நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தது. சில குட்டிகளுக்கு மூளையில் கட்டி இருந்ததால், அவற்றால் நடக்கக்கூட முடியவில்லை. அவற்றுக்கு உணவளிக்கும் நிலையில் அவற்றின் தாயும் இல்லை. இந்தக் காரணங்களால் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்ட ஒரு குட்டியைக் கருணைக்கொலை செய்ய வேண்டியதாகிவிட்டது. 

"அங்கு சென்று பார்த்ததிலிருந்து நாங்கள் மிகவும் வெறுமையாக உணர்கிறோம். அது சிங்கம், காட்டுக்கே ராஜா. அதைப்போய் இப்படியொரு நிலைமைக்குக் கொண்டு வந்துட்டாங்களே! அங்கு சிங்கங்களின் நிலையைப் பார்த்தபோதே என் ஆத்மா உருக்குலைந்துவிட்டது" என்று நிலைமையைப் பற்றி விளக்குகிறார் விலங்குகளுக்கு எதிரான அநீதிகளைத் தடுக்கும் தேசிய சபை இயக்குநர் டக்லஸ் வாலுடெர். 

இந்த மாதிரியான கொடூரங்கள் நடப்பது தென்னாப்பிரிக்காவில் புதிதல்ல. 2015-ம் ஆண்டு பிளட் லயன்ஸ் (Blood lions) என்ற ஆவணப்படம், சுமார் 6,000 முதல் 8,000 வரை வேட்டையாடி விலங்குகளை (அதில் பெரும்பாலும் சிங்கம்) இதேமாதிரியான காப்பிட வளர்ப்பு முறையில் அடைத்து வைத்திருந்ததை வெளிக்கொண்டுவந்தது. அங்கு இப்போதைய எண்ணிக்கை 10,000 என்கிறார் அந்த ஆவணப்படத்தின் இயக்குநர் இயான் மிஷ்லெர் (Ian Michler). இதை ஒரு தொழிலாகவே பலரும் செய்துவருகிறார்கள். இவர்கள் இந்த விலங்குகளை இப்படிக் காப்பிடத்தில் வளர்த்து அவற்றின் உறுப்புகளை, எலும்புகளை வெளிநாடுகளுக்கு விற்கிறார்கள். சில இடங்களில் இவற்றை வளர்த்து சுற்றுலாத்துறையில் பயன்படுத்துகிறார்கள். சுற்றுலா வரும் வெளிநாட்டவரை குட்டிகளுக்குப் பாலூட்ட விடுவது, சிங்கக் குட்டிகளோடு செல்ஃபி எடுத்துக்கொள்ள, முதிர்ந்த சிங்கம் தங்களுடன் நடந்துவருவதுபோல படம் எடுப்பது என்று பலவற்றுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை. அதுமட்டுமல்ல, அமெரிக்காவிலிருந்து வரும் பலரும் பொழுதுபோக்கு வேட்டையாக (Trophy Hunting) சிங்க வேட்டையாடிச் செல்கின்றனர். 

அது சிங்கம்... காட்டுக்கே ராஜா... அதைப்போய் இப்படிச் செஞ்சீட்டீங்களே!?

பைனிகா பண்ணையில் இந்தச் சிங்கங்களை எலும்புகளுக்காகத்தான் இப்படிக் கொடூரமான முறையில் வளர்த்துள்ளார்கள். புலிகளுடைய எலும்புகள் ஆசிய கள்ளச்சந்தையில் அதிக லாபம் ஈட்டிக்கொடுக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதற்குக் கிராக்கி அதிகமாகிவிட்டதால் புலி எலும்புகளுக்குப் பதிலாக சிங்க எலும்புகளை விற்கிறார்கள். 

"எலும்புகள் ஏற்றுமதிக்காக மட்டுமே வளர்க்கப்படும் சிங்கம், தோற்றத்தில் எப்படி இருந்தாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால், எப்படியும் அது வளர்ந்தவுடன் சாக்குப் பைக்குள் திணிக்கப்பட்டு வெட்டுக்கூடத்துக்குக் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து மீண்டும் அதே சாக்குப் பைக்குள் திணிக்கப்பட்ட அதன் எலும்புகள் ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்" - இயான் மிஷ்லெர். 

இனி, நீதிமன்றம்தான் இவர்களைத் தண்டிக்க வேண்டும். ஆனால், அது நடக்கும் என்று மிஷ்லெர் நம்பவில்லை. ஒருவேளை சிங்கம் பேசும் திறன் பெற்றிருந்தால், அவை தம் உரிமைகளைக் கோரி நீதிமன்றத்தை நோக்கி உறுமிக்கொண்டே வந்திருக்கும். காட்டு ராஜாக்களை இப்படிக் கூண்டுக்குள் அடைத்து வளர்ப்பதைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியையும் தென்னாப்பிரிக்க அரசு எடுப்பதாகத் தெரியவில்லை. 

அது சிங்கம்... காட்டுக்கே ராஜா... அதைப்போய் இப்படிச் செஞ்சீட்டீங்களே!?

அந்தச் சிங்கங்கள் இன்னமும் அதே இடத்தில் அப்படியேதான் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விதி நீதிமன்ற வழக்கு செல்லும் திசையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். 

நீதிமன்றம் தீர்மானிப்பதால் மட்டும் என்ன நடந்துவிடப்போகிறது. பிறந்ததிலிருந்து காட்டையே பார்க்காமல் மிகக் கொடூரமான வாழ்க்கையைப் பயந்து பயந்தே வாழ்ந்துவிட்ட இந்தச் சிங்கங்களைக் காட்டில் கொண்டுபோய் விட்டால், அவை ஒரு நாள்கூடப் பிழைத்திருக்காது. துரதிர்ஷ்டவசமாகத் தென்னாப்பிரிக்காவில் நல்லதொரு சரணாலயம்கூட இவற்றுக்கு இல்லை. இந்தச் சிங்கங்களின் வாழ்வைக் காப்பாற்ற வேண்டும். ஆனால், அதுகுறித்து முடிவு செய்யமுடியாமல் காட்டுயிர் ஆர்வலர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெரும் பூனைகளின் எதிர்காலம் வெறுமையாகவும் இருட்டாகவும் உள்ளது

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு