Published:Updated:

அள்ளிக் குடித்தால் ஆயுள் கூட்டும் நொய்யல்!

Sathyan
Sathyan

அள்ளிக் குடித்தால் ஆயுள் கூட்டும் நொய்யல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அள்ளிக் குடித்தால் ஆயுள் கூட்டும் நொய்யல்!

'நண்பன்’ மூலம் மனதைக் கவர்ந்த நகைச்சுவை நண்பன் சத்யன். தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமாரின் புதல்வன். 'மாயாவி’, 'கஜினி’, 'சிவா மனசுல சக்தி’, 'சந்தோஷ் சுப்பிரமணியம்’, 'நண்பன்’ என சீராக ஏறுமுகம் காட்டும் கிரேட் தலைவன், தன் சொந்த ஊரான மாதம்பட்டி குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்!

அள்ளிக் குடித்தால் ஆயுள் கூட்டும் நொய்யல்!
##~##

''எந்த நேரமும் சிலுசிலுனு வீசுற மேற்குத் தொடர்ச்சி மலைக் காற்று, தென்னை, பாக்கு, திராட்சைனு செழிப்பு காட்டி சிரிக்கும் விவசாயம், கூப்பிடு தூரத்தில் குளுமையாகக் கொட்டும் கோவைக் குற்றாலம், மாமன், மச்சான், அங்காளி பங்காளினு பாசக்கார உறவுகள் வாழும் அழகான ஊர் மாதம்பட்டி. கோவையில் இருந்து சிறுவாணி சாலையில் ஊரை நெருங்குறப்பயே மஞ்சக் கிழங்கு வாசம் மூக்கைத் துளைக்கும்.

அந்தக் காலத்தில் இந்தப் பகுதி மேய்ச்சல் நிலமா இருந்ததாம். வற்றாத ஜீவ நதியா ஓடுற நொய்யல் ஆறும் இங்கு இருந்ததால, ஜனங்க இங்க கால்நடைக்குப் பட்டிப் போட்டுக் குடியேறினாங்களாம். அதில் தலைவர் மாதிரி இருந்த ஒருத்தர் பேர் மாதய்யன். அது மாதய்யன்பட்டி ஆகி, காலப்போக்கில் மாதம்பட்டி ஆகிடுச்சுனு பெரியவங்க சொல்வாங்க.

மாதம்பட்டியில் என்னோட பள்ளி நாட்களை மறக்கவே முடியாது. லீவு விட்டாப்போதும்... எஞ்சோட்டு பசங்களோட சைக்கிள்ல குரங்கு பெடல் மிதிச்சு காடு, மேடு, குளம், குட்டைனு சுத்துவோம். கிளம்புறப்பயே வீட்ல இருந்து உப்பு, மிளகாய்ப் பொடியை சுட்டுட்டு வந்துடுவோம். முதல் அசைன்மென்ட் பொன்னம்பூச்சி (பொன்வண்டு) பிடிக்கிறது. குளுகுளுனு இருக்கிற குளத்தேறி மரங்கள்லேயும் கருவேல மரங்கள்லேயும்தான் அது அதிகம் இருக்கும்.

அள்ளிக் குடித்தால் ஆயுள் கூட்டும் நொய்யல்!

பச்சை நிறத் தங்கமா ஜொலிக்கிற வண்டுகளைப் பிடிச்சு காலி தீப்பெட்டிக்குள் போட்டு அடைச்சுடுவோம். கருவேல மரத்தில் ஏறி இறங்கினதில் முட்டிக் காலுல முள்ளு கிழிச்சு ரத்தம் வடியும். புண்ணு மேல சர்னு ஒண்ணுக்கு அடிச்சு, அதுக்கும் முதல் உதவி பண்ணிக்குவோம்.

எங்க ஊருக்கு வடக்குத் திசையில் நொய்யல் ஆறு ஓடுது. இன்னைக்கும் இங்க நொய்யல் தண்ணியை அள்ளிக் குடிக்கலாம். காஞ்சி மாநதின்னு, கொங்கு நாட்டு கங்கையா மக்கள் நொய்யலை வணங்குறாங்க. ஆனா, கொஞ்சம் தொலைவில் இருக்கிற கோயமுத்தூருக்குப் போறதுக்குள்ள அந்த நதியை ஆளாளுக்குக் கற்பழிச்சு, களங்கமாக்கிடறாங்க. நதியை தயவு செஞ்சு காப்பாத்துங்கப்பா!

உலகத்தில் இருக்கிற சுவையான தண்ணியில சிறுவாணி தண்ணியும் ஒண்ணுங்கிறது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. சிறுவாணி அணைக்கு அடிக்கடி போவோம். அங்க ஆட்டம் போட்டு ஆசை தீர தண்ணியை அள்ளிக் குடிச்சா, மனசு குதூகலமாயிடும். வருஷம் முழுக்கத் தண்ணி கொட்டுற கோவைக் குற்றாலமும் பக்கத்தில்தான் இருக்கு. எப்ப ஊருக்கு வந்தாலும் ஒரு எட்டு அங்க போய் நண்பர்களோடு ஒரு குளியலாவது போட்டுத் திரும்பினாத்தான் மனசு குளிரும்.

எங்க ஊருக்குச் சந்தை என்னைக்கோ அன்னைக்குத்தான் லீவு நாள்... சம்பள நாள் எல்லாமே. வெள்ளிக் கிழமைதான் லீவு. பக்கத்தில் இருக்கிற பூலுவபட்டியில் சந்தை கூடும். அன்னைக்கு நண்பர்களோட சைக்கிள் உலா. செருப்புக் கடை தொடங்கி சேலை கடை வரைக்கும் ரவுசுவிடுவோம். ஆனா, ஒண்ணும் வாங்க மாட்டோம். கொண்டு போன காசுக்குத் தேன் மிட்டாய், தேங்காய் பர்பிதான் கிடைக்கும். அதைத் தின்னுட்டு பக்கெட் தண்ணியில் முக்கி வெச்சு இருக்கிற கலரைக் குடிச்சிட்டு வீடு திரும்பிடுவோம்.

ஊர்ல யார் வீட்டில் விசேஷம்னாலும் பாகுபாடு இல்லாம ஆளுக்கு ஒருவேலை செய்றது எங்க மக்களின் இயல்பு. இன்னிக் கும் கல்யாணம், காட்சினு யார் வீட்டுக்குப் போனாலும் வேட்டிய மடிச்சுக் கட்டிக் கிட்டு, ரெண்டு பந்திக்காவது  சாப்பாடு பரிமாறிட்டு சாப்பிட்டாத்தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும். இப்பவும் ஊருக்கு வந்து ரெண்டொரு நாளு ஆசை தீர தங்கிட்டு கிளம்புறப்போ மனசு மட்டும் கிளம்பாம அடம் பிடிக்கும். அதுதானுங்கோ எங்க ஊர்!''    

அள்ளிக் குடித்தால் ஆயுள் கூட்டும் நொய்யல்!

- ஜி.பழனிச்சாமி,
படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு