Published:Updated:

``டாக்டர் படிப்பு...!’’ எப்படி இருக்கிறது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலை!? #LetsLearn

``டாக்டர் படிப்பு...!’’ எப்படி இருக்கிறது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலை!? #LetsLearn
``டாக்டர் படிப்பு...!’’ எப்படி இருக்கிறது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலை!? #LetsLearn

``டாக்டர் படிப்பு...!’’ எப்படி இருக்கிறது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலை!? #LetsLearn

"படிச்சு பெரிய ஆளா ஆனபிறகு, என்னவாகப்போற?" என்று பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கேட்டால், அதிகம் வரும் பதில், 'டாக்டராவேன்' என்பதுதான். இப்படிச் சொல்வதோடு நிற்காமல் அதைச் செயலாக்குவதிலும் விடாமுயற்சியும் ஆர்வமும் காட்டும் மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டறிந்து மேலும் ஊக்கப்படுத்தி நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறவைப்பதில் அக்கறை காட்டுவார்கள். அதிலும் அரசுப் பள்ளியில் எனும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களாக இருப்பார்கள். அதனால், ஆசிரியர்கள் தங்கள் கையிலிருந்தும் மற்றவர்களின் பங்களிப்போடும் மாணவர்களுக்கான உதவிகளைச் செய்து அவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற பெரிதும் முயல்வார்கள். ஆனால், அவர்களின் முயற்சிகளில் இப்போது சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. 

மருத்துவப் படிப்பில் சேர, ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் தேர்வும் எழுதி தேர்ச்சிபெற வேண்டியிருக்கிறது. அதனால், தனியார் பயிற்சி மையங்களில் இதற்கான பிரத்யேகப் பயிற்சியும் எடுக்க வேண்டியிருக்கிறது. இது ஆசிரியர்களின் மத்தியில் ஒரு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசியபோது, "பத்தாவது படிக்கும்போதே ஒரு பையனோ பெண்ணோ எப்படிப் படிக்கிறாங்கனு தெரிஞ்சிடும். அவங்களை அப்போதிலிருந்தே ஸ்பெஷலாகக் கவனிச்சு படிக்க வைப்போம். அவங்களும் விளையாட்டுத்தனங்களை எல்லாம் கட்டுப்படுத்திட்டு, கஷ்டப்பட்டு படிப்பாங்க. ஒருவழியா ப்ளஸ் டூவுல டாப் ஸ்கோர் எடுக்க வெச்சிட்டா போதும், எப்படியும் மெடிக்கல் சீட் கிடைச்சிடும். அந்தக் குடும்பத்தோட கனவும் நிறைவேறிடும். ஆனா, இப்போ நீட் தேர்வு வந்தபிறகு, அதுக்கு தனியா கோச்சிங் போற அளவுக்கு பணவசதி இருக்கிறதுல்ல. அதனால இன்ஜினீயரிங், நர்ஸிங் போன்ற கோர்ஸ்களை வழிகாட்டுறோம். கிராமத்துல பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறதுக்கே யோசிக்கிற குடும்பத்தால, எப்படிப் பணம் கட்டி, நீட் கோச்சிங் அனுப்ப முடியும்?" என்றார். 

``டாக்டர் படிப்பு...!’’ எப்படி இருக்கிறது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலை!? #LetsLearn

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், "எங்க ஸ்கூல்லேயும் அரசு தர்ற நீட் கோச்சிங் நடக்குது. க்ளாஸ்ல யார் யாருக்கு விருப்பமோ அவங்க வரலாம்னு சொல்றோம். 30 பேர் தொடர்ந்து வர்றாங்க. அக்கம் பக்கத்துல இருக்கிற ஊர்லேருந்து 20 பேர் வந்தாங்க. ஆனா, ரெண்டு மூணு வாரத்துல ஒண்ணு, ரெண்டு பேரா குறைஞ்சு இப்ப வெளியூர்லேருந்து யாரும் வர்றது இல்ல. இப்படித்தான் பல ஊர்ல நடக்குது" என்கிறார். இன்னொரு ஆசிரியரோ, "இப்போ இருக்கிற பாடத்திட்டம் நீட் தேர்வுக்குத் தயார்படுத்தும் விதத்துலதான் இருக்கு. ஆனா, இதுல படிச்சி பாஸ் பண்ணலாம்; மெடிக்கல் சீட் கிடைக்கிற அளவுக்கு மார்க் எடுக்கிறது ரொம்ப சிரமம். அப்புறம் எனக்கு ஒரு கேள்வியும் இருக்கு. ஒரு வகுப்புல 10 பேர் நீட் எக்ஸாம் எழுதப் போறாங்க என்றால், மத்தவங்களும் ஏன் நீட் எக்ஸாம்க்குத் தயாராகுற பாடத்திட்டத்தைப் படிக்கணும்?" என வேறு கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகுகிறார். 

கல்வியாளர் சங்கமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சதிஷ்குமாரிடம் இதுபற்றிக் கேட்டோம். "உண்மைதான். இப்போது, ஒரு மாணவனைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்து, ப்ளஸ் டூவில் 600-க்கு 600 மார்க் எடுக்க வைத்தாலும், அவனுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க வேண்டுமென்றால், நீட் எழுதித்தான் ஆக வேண்டும். அதற்குத் தனியார் கோச்சிங் வேண்டும். மேலும், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும். அப்படியென்றால், பள்ளி மதிப்பெண்களின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக நினைக்கத் தொடங்கிவிட்டனர். அதனால், ஆசிரியர்களே மனதளவில் சோர்ந்துவிடுகின்றனர். எனவே, மருத்துவத்தோடு மல்லுக்கட்டாமல், வேறு பக்கம் செல்வது இயல்பாகிவிட்டது. ஏனெனில், அரசுப் பள்ளிகளிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்ற மாணவர்களின் சதவிகிதம் கடந்த இரண்டாண்டுகளில் மிகவும் சொற்பம்தானே!'' என்று யதார்த்தத்தைச் சொல்கிறார் சதிஷ்குமார். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு