Published:Updated:

ஆதலினால் காதல் செய்வீர்!

எழில்வரதன்

ஆதலினால் காதல் செய்வீர்!

 'இரண்டு வருடங்களுக்கு முன்பு, ரயில் ஏறி ஓடி, ரகசியக் கல்யாணம் செய்துகொண்ட தங்கராஜு, ''நான் கடவுளையும் பார்த்து இருக் கிறேன்... காதலையும் பார்த்து இருக்கிறேன்...'' என்பான். எட்டாவது படிக்கும்போதே காதலிக்க ஆரம்பித்தவன். காதலுக்காக எதையும் செய்ய அஞ்சா தவன். அதே காதலுக்காக ஒன்பது முறை ரத்தம் சொட்டச் சொட்ட உதைபட்டும் இருக்கிறான். அப்போதும் அடங்கவில்லை. அப்பா மாட்டுக்கு லாடம் அடிக்கிறவர். பெண்ணின் அப்பா அதியமான் கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு. கேட்கவே வேண்டாம். இரண்டு பக்கமும் தர்ம அடி. ஓடிப் போவதற்கு ஒரு மாதம் முன்பு, எசகு பிசகாக அடிபட்டு பத்து நாள் ஹாஸ்பிடலில் படுத்து இருந் தான். கோமாவுக்குக் கொஞ்சம் கிட்ட. அப்போதுதான் அவன் கண்ணுக்குக் கடவுளும், சொர்க்கமும் தெரிந்து இருக்கிறது.

##~##

எமனைப் பற்றியும், எவனைப் பற்றியும் அஞ்சா மல், எனக்குக் காதல் போதும் என்று எவன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிற அவனோ, அவளோ நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய வர்கள். ஆனால், தங்கராஜுவை யாரும் பாராட்டி யதாகத் தெரியவில்லை. அப்பாவில் ஆரம்பித்து, சித்தப்பாவின் மாமியார் வீட்டுச் சொந்தக்காரர்கள் வரை அவனை திட்டித் தீர்த்தார்கள். காதலிப்பது என்பது, தாறுமாறாக உடை அணிந்து நாய் இருக்கும் தெருவில் போவதற்குச் சமானம். வசவும், வாயடியும் கேட்டு மாளாது. இளைஞனுக்கு இத்தனை எதிரிகளா? ஆனாலும் அவன் ஓயவில்லை.

தங்கராஜுவின் அப்பா, ''டேய், நானும் உன் வயசத் தாண்டி வந்தவன்தான்டா... கல்யாணத்துக்கு முன்ன ஒரு பெண்ணையாவது ஏறெடுத்துப்பாத்திருப் பேனா? இல்ல ஒரு பொண்ணாச்சும் என்னத்தான் பாத்திருப்பாளா? வாழ்ந்தா என்ன மாதிரி சுத்தபத்தமா வாழணுன்டா...'' என்பார்.

ஆதலினால் காதல் செய்வீர்!

''உன்னை எல்லாம் கடைசிவரை உலகத்தில் இருக்கிற எவளுமே ஏறெடுத்துப் பாக்கலேன்னா நீ எல் லாம் எதுக்குப் பொறந்தே... இன்னும் எதுக்கு உயிரோட இருக்கே?'' என்று தங்கராஜும் பச்சையாகக் கேட்டுவிட்டான். இதற்கு அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம். காதலை வெறும் கவர்ச்சி என்றும், வயசுக் கோளாறு என்றும் சொல்பவர்கள் நிச்சயம் நிராகரிக்கப்பட்டவர்களாக, காலாவதியானவர்களாகத்தான் இருப்பார்கள். கல்யாணம் என்ற ஓர் ஏற்பாடு இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு எல்லாம் நிச்சயம் திருமணமே நடந்து இருக்காது. வம்ச விருத்தியும் உண்டாகி இருக்காது.

தங்கராஜு எட்டாவது படித்து இருந்தான். மொத்தப் படிப்பே அவ்வளவுதான். ஊரில் டெய்லர் கடைவைத்து பழைய பைஜாமா தைத்துக்கொண்டு இருந்தான். அவன் காதலித்த பெண், கம்ப்யூட்டர் படித்து, பெங்களூருவில் நல்ல சம்பளத்தில் இருந் தாள். இருவேறு துருவம். எப்படி ஒட்டும்? ஆனால், ஒட்டியது. அதுதான் காதல். மணிக்கணக்காக தொலைபேசியில் தொண தொணப்பு, பிதற்றல்கள், கடிதக் கிறுக்கல்கள், உளறிக்கொட்டும் குறுஞ்செய்திகள், வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள்... அந்தப் பெண் ஊருக்கு வந்தால் தங்கராஜுபொரித்த மீன் வாங்கிக் கொடுப்பான். மரத்தடியில் காத்து இருப்பான்.

கல்யாணப் பருவம் நெருங்க நெருங்க, இரு வீட்டிலும் தினம் தினம் சண்டை, அடிதடி, ஓயாத கலகம். தங்கராஜு, ''செத்தாலும் அவதான்டா என் பொண் டாட்டி'' என்று தீர்மானமாக இருந்தான். ஆனால், அந்தப் பெண்ணுக்கு நிச்சயம் செய்துவிட்டார்கள். நிச்சயத்துக்கு முன், தங்கராஜுவிடம் அந்தப் பெண் பேசி இருக் கிறாள். ''ஆணும், பெண்ணும் நல்ல நண்பர் களாக இருக்கவே முடியாதா? நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்.''

இந்த அபத்தங்களும், பிரிவுகளும், கண்றாவிகளும் எதற்காக? பாதியில் பிய்த்துக் கொண்டு போக, ஆரம்பத்தில் இருந்து ஏன் காதலிக்கிறார்கள்?

இந்தப் பைத்தியக்காரத்தனம் இந்த ஊரில் மட்டுந்தானா? இல்லை உலகம் எங்கும் இப்படியேதானா? தங்கராஜுவோடு சேர்ந்து ஊரின் மொத்த இளைஞர் படையும் குழம்பிப்போனது. காதலிப்பவர் களை உயிரைக் கொடுத்தாவது சேர்த்து வைப்போம் என்று சபதம் செய்தவர்களுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார்களே!

கடைசி நேரத்தில், அந்தப் பெண் என்ன நினைத்தாளோ... கல்யாணச் சீராக வைத்து இருந்த நகையை பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு தங்கராஜுவைப் பார்க்க வந்தாள். கடைசியில் அவன் அவளையேதான் கல்யாணம் செய்துகொண்டான். முறைப்படி பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு, கல்யாணம் செய்துகொண்டால் குடும்பத்தில் என்னென்ன உபாதைகள் உண்டோ அத்த னையும் அவனுக்கும்தான் இருக்கிறது. என்னுடைய சந்தே கம் இது ஒன்றுதான். தங்கராஜு காதலித்தது, அவனுடைய சொந்த அத்தைப் பெண்ணை. அதற்கு எதற்கு இத்தனைப் போராட்டம்?

தங்கராஜு முட்டி மோதி தன் குடும்பத்தை நிமிர்த்தி வைப்பதற்குப் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இப்போது அவனுக்கு ஒரு வயதில் குழந்தை. பிரிந்த குடும்பம் ஒன்றுசேர்ந்துவிட்டது. இப் போது, மாமா, மாப்பிள்ளை என்றுஉறவாகி விட்டார்கள். இதைக் கொஞ்சம் முன்பே செய்து இருக்கலாம். காதலைப் பிடிக்காது என்றாலும் பரவாயில்லை. உங்களை யாரும் காதலிக்கச் சொல்லவில்லை. கமுக்கமாக இருந்து காதலிப்பவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களுக்குப் பெற்ற பிள்ளைகள் பிடிக்கும் என்றால், அவர் களைக் காதலித்துப் பாருங்கள். காதலும் பிடிக்கும், கடவுளும் கண்ணுக்குத் தெரிவார்!''

ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையபாரதி

அடுத்த கட்டுரைக்கு