பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் எனப் பல்வேறு விழாக்கள் அமர்க்களப்பட்டாலும், பொங்கல் முடிந்து நீண்ட நாள்... (சில சமயம் அடுத்த பல மாதங்கள் வரை ) நடக்கும் விழா,

ஊருக்கு வந்த நரியார்!
##~##

நரி ஜல்லிக்கட்டு! சேலம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இந்த விழா ரொம்பப் பிரபலம்.        

கரி நாள் அன்று கிளம்பி எப்பாடுபட்டாவது நரி ஒன்றைப் பிடித்து வந்துவிட வேண்டும். எத்தனை மாதம் ஆனாலும் சரி... நரி பிடிக்காமல் ஊருக்குத் திரும்பக் கூடாது. அப்படிப் பிடித்து வந்த நரியை நீராட்டி, சீராட்டி, மாலை மரியாதை செய்து, நாள் முழுக்கக் கிராமம் கிராமமாக நரி உலா செல்கிறார்கள். ஊர் எல்லையில் மக்கள் திரண்டு வந்து கலர்ப் பொடியையும் மலர்களையும் தூவி நரியாரை வரவேற்க... அல்லோல

கல்லோலப்படுகிறது நரி ஜல்லிக்கட்டு. பிற்பாடு சாமிக்குப் படைத்த பின்பு நரியைக் கொண்டுபோய் மறுபடியும் காட்டுக்குள் விட்டுவிடுவார்கள்.

சேலம், வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி ஊர்க்காரர்கள் காடு, மேடு, மலை எல்லாம் அலைந்து திரிந்து பொங்கல் முடிந்து 25 நாட்களுக்குப் பின் நரியைப் பிடித்து இருக்கிறார்கள். கொட்டவாடி கிராம மக்களோடு நாமும் விடியற் காலையிலேயே நரியைப் பார்க்கக் கிளம்பினோம். கொட்டவாடியைச் சேர்ந்த கணேசன், ''கரி நாளில் செல்லியம்மன் கோயில்ல வாக்கு கேட்டுட்டு நரி பிடிக்க வீட்டுக்கு ஒருத்தர் கிளம்பிடுவோம். நரி பிடித்த பிறகுதான் ஆண்களும் பெண்களும் வேலைக்கே போகணும்கிறது ஐதீகம். குறைஞ்சது 400 பேர் நரியைப் பிடிக்கப் போவோம். எங்க கிராமத்தில் இருந்து மட்டும் 60 வலை வரும்.

முன்னாடி எல்லாம் கம்மங்காட்டு நரி, சோளக்காட்டு நரி, பனங்காட்டு நரினு ஊரு பக்கத்துலேயே நரி கிடைக்கும்; சுளுவாப் பிடிச்சுடலாம். ஆனா, இப்ப எல்லாம் நரி பிடிக்கிறது சாதாரண வேலை இல்லை. ஊருக்குள்ள ஏதாவது தப்புத் தண்டா நடந்து போச்சுனா ரெண்டு மாசம் ஆனாலும் நரி ஆப்படாது. சாமிக்கிட்ட மன்னிப்புக் கேட்டு பரிகாரம் பண்ணிட்டுப் போனாத்தான் நரி கிடைக்கும்.

தம்மம்பட்டி, தும்பல், மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, நைனார்பாளையம் பக்கம் இருக்கிற கரடுகள்ல நரி பிடிப்போம். நரி, காலை 7 மணியில் இருந்து 10 மணி வரைக்கும், ராத்திரி 11 மணியில் இருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும்தான் வெளியே வரும். மத்த நேரத்தில் வங்குக்குள்ள தங்கிடும். நரி வரும் நேரம் பார்த்து வலையைப் போட்டு, ஒரு வலைக்கு ரெண்டு பேர் மறைஞ்சு உட்கார்ந்துக்குவோம். மத்தவங்க அந்தக் கரட்டைச் சுத்தி கொட்டி அடிச்சிட்டேப் போவாங்க. நரி பயந்து ஓடும்போது வலையில மாட்டிக்கும்.

ஊருக்கு வந்த நரியார்!

எனக்கு 45 வயசு. நான் சின்னப்பையனா இருக்கும்போது இருந்தே நரி பிடிக்க வர்றேன். 10 வருஷம் முன்னாடி கள்ளக்குறிச்சி பக்கம் ஒரு கரட்டுல நரி பிடிக்கப் போனப்ப, பெரிய நரி எல்லாம் ஒண்ணுசேர்ந்து எங்களைத் துரத்த ஆரம்பிச்சிடுச்சு. துண்டைக் காணோம்... துணியைக் காணோம்னு ஓடி வந்துட்டோம். இதோ 20 நாளுக்கு மேல தேடி, தம்மம்பட்டி கரட்டு உச்சியில ஒண்ணுக்கு ரெண்டு நரிங்க மாட்டுச்சு. ரெண்டைக் கொண்டு வரக்கூடாதுனு ஒரு நரியை மட்டும் பிடிச்சு வந்து இருக்கோம்...'' என்றார் உற்சாகமாக!

ஊர் மக்களின் பெருந்திரளான வரவேற்பில் ஏகத்துக்கும் மிரண்டு இருந்தார் நரியார். கொட்டுச் சத்தம் கேட்கும்போது எல்லாம் பயந்துபோய் மண்ணில் தலையைப் புதைத்துக்கொண்டது பரிதாபக் காட்சி. ஒருவழியாக அதைத் ஆற்றித் தேற்றி ஊர்வலம் கிளம்புவதற்குள் படாதபட வேண்டியதாயிற்று. நரியின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அழைத்துவந்த குழந்தைக் கவுண்டர், ''பார்க்க பாவமாத்தான் இருக்கு. ஆனா, சாமிக் குத்தமாயிடும். நரி ஜல்லிக்கட்டு நடத்தினாத்தான் குழந்தைகளுக்கு நோய், நொடி வராம கால்நடைகளும், காடுகளும் செழிப்பா இருக்கும். அதனால சாமிக்குப் பூஜை போட்டதும் இதுக்கு ஒரு தீங்கும் செய்யாம நல்லா கவுச்சி விருந்து போட்டு, காட்டுக்குள்ள விட்டுடுவோம்'' என்கிறார்.

ஊருக்கு வந்த நரியார்!
ஊருக்கு வந்த நரியார்!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு