Published:Updated:

இன்னும் இறக்கவில்லை பெரியார்!

இன்னும் இறக்கவில்லை பெரியார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'சேலம் பெரியார்’ என்று உவமைக் கவிஞர் சுரதாவால் சிறப்புச் செய்யப்பட்டவர் சேலத்தைச் சேர்ந்த பாவலர் எழுஞாயிறு! 70 வயதைக் கடந்த நிலையிலும் சிறு வயதில் இருந்து, தான் கொண்ட பகுத்தறிவுக் கொள்கையில் கடுகளவும் வழுவாமல் வாழ்வதால் இவருக்கு இந்தப் பெயர். அவருடைய 'பகுத்தறிவு இல்லம்’ சென்று அவரிடம் பேசினேன்.

இன்னும் இறக்கவில்லை பெரியார்!
##~##

''வாழப்பாடி அருகே ராமநாதபுரம் குக்கிராமம் என் ஊர். அம்மா சின்னம்மாள். அப்பா எல்லப்பர். பெற்றோர் எனக்கு வைத்த பெயர் கோவிந்தராஜன். அப்பா என் சிறு வயதில் இறந்துவிட்டார். அம்மாதான் மிகுந்த சிரமங்களுக்கு இடையே என்னைப் படிக்கவைத்தார். அப்போது பெரியார் கொள்கைகள் தீவிரமாக வளர்ந்து வந்த சூழல். பெரியார், கிராமந்தோறும் மேடைகள் போட்டுப் பேசி வந்தார். அவருடையப் பேச்சும் கொள்கையும் என்னை பற்றிக்கொண்டது.

நான் தனலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்தேன். அது சீர்திருத்தத் திருமணம். திருமணத்துக்கு 300 பேருக்குச் சாப்பாடு செய்தோம். ஆனால், வந்தவர்கள் 3,000 பேர். நாங்கள் பயந்துவிட்டோம். பிறகுதான் தெரிந்தது, சீர்திருத்தத் திருமணத்தைப் பார்க்க வந்த கூட்டம் என்று. எங்கள் பகுதியிலேயே என் திருமணம்தான் முதல் சீர்திருத்தத் திருமணம்.

இன்னும் இறக்கவில்லை பெரியார்!

அதே ஆண்டில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தேன். அப்போது சேலம் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பாகப் பேச பெரியார் வந்திருந்தார். அவர், 'ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்த இவர், கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். இதுதான் சமூக முன்னேற்றம். இதற்குத்தான் போராடி வருகிறோம்’ என்று என்னை உதாரணம் காட்டிப் பேசினார்.

என் குடும்பத்தைப் பகுத்தறிவு உள்ள தமிழ்க் குடும்ப மாக நானும் என் மனைவியும் மாற்றிக் காட்டினோம். எங்கள் வீட்டுக்குப் 'பகுத்தறிவு இல்லம்’ என்று பெயர் சூட்டினோம். என் மனைவி தனலட்சுமி என்ற பெயரைச் செல்வம் என்று மாற்றிக்கொண்டார். நானும், என் மனைவியும் உடல் தானம் செய்தோம். எங்கள் வீட்டில் பொங்கல் திருநாள், குழந்தைகளின் பிறந்த நாட்களைத் தவிர  வேறு எந்த ஒரு சமய விழாவையும் கொண்டாடுவது கிடையாது.

எங்களுக்கு புகழேந்தி, இளங்கோ, முப்பாலிகை என்று மூன்று பிள்ளைகள். மூவருக்குமே சாதி, மதம் பார்க்காமல், நேரம் பார்க்காமல், தாலி கட்டாமல் சீர்திருத்தத் திருமணம்தான் செய்து வைத்துள்ளேன். ராகு காலத்திலும் இரவு நேரத்திலும் திருமணம் செய்துள்ளோம். எங்கள் குடும்பத்துப் பெண்கள் யாரும் தாலி அணிவது கிடையாது.

என் மூத்த மகன் புகழேந்தி, 12-ம் வகுப்புப் படிக்கும்போது பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலித்தான். அந்தப் பெண்ணையும் என் மகனையும் கூப்பிட்டு, 'உங்கள் காதலுக்கு நான் தடையாக இருக்க மாட்டேன். நிச்சயமாக உங்களுக்குத் திருமணம் செய்துவைக்கிறேன். நன்றாகப் படித்து முடியுங்கள்’ என்றேன். பிறகு என் மகன் சென்னையில் மேற்படிப்புப் படித்து முடித்து வந்தான்.

திருமணப் பேச்சு வந்தபோது, 'நீங்களே நல்ல பெண்ணாகப் பாருங்கள் அப்பா’ என்றான். 'நீ காதலித்த பெண் என்ன ஆயிற்று?’ என்றேன். அதற்கு அவன், 'அப்போது உலகம் தெரியாமல் இருந்தேன். சென்னையில் நிறைய அழகான பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாதிரி அழகான பெண் பாருங்கள்’ என்றான். அவனிடம், 'வசதி வாய்ப்புகள் மாறலாம். ஆனால், கொண்ட அன்பு மாறக்கூடாது’ என்று எடுத்துச் சொல்லி, அவன் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துவைத்தேன்.  

பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளேன். ஆறு நாடகங்களை எழுதியும் இருக்கிறேன். ஆறு இசை நாடாக்களை வெளியிட்டு உள்ளேன். என்னுடைய பவள விழாவில் உவமைக் கவிஞர் சுரதா எனக்கு 'சேலம் பெரியார்’ என்று பட்டம் கொடுத்தார். இதில் எல்லாம் எனக்குப் பெருமை இல்லை. நகரம் தொடங்கி குக்கிராமம் வரை இன்னமும் தீண்டாமையும் சாதியமும் ஒழிக்கப்படவில்லை. அதை முன்னிறுத்தி நடத்தப்படும் கொடுமைகளும் ஏராளம். அவை எல்லாம் எப்போது முழுமையாக ஒழிகிறதோ அப்போதுதான் என்னைப் போன்றவர்களுக்குப் பெருமையும் நிம்மதியும்!''

இன்னும் இறக்கவில்லை பெரியார்!
இன்னும் இறக்கவில்லை பெரியார்!

- வீ.கே.ரமேஷ்
படம்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு