Published:Updated:

புஜங்காசனம் முதல் சலபாசனம் வரை ... அனிமேஷனில் அசத்தும் மோடி!

சைலபதி

2014-ம் ஆண்டு ஐ.நா சபையில் மோடி பேசும்போது, 'யோகாவின் அவசியத்தைச் சர்வதேச அளவில் கவனம் பெறச் செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்ற ஐக்கிய நாடுகள் சபை, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

புஜங்காசனம் முதல் சலபாசனம் வரை ...  அனிமேஷனில் அசத்தும் மோடி!
புஜங்காசனம் முதல் சலபாசனம் வரை ... அனிமேஷனில் அசத்தும் மோடி!

ர்வதேச யோகாதினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் யோகாசனங்கள் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களில், யோகாசனங்கள் செய்வது எப்படி என்றும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. 

புஜங்காசனம் முதல் சலபாசனம் வரை ...  அனிமேஷனில் அசத்தும் மோடி!

2014-ம் ஆண்டு ஐ.நா சபையில் மோடி பேசும்போது, 'யோகாவின் அவசியத்தைச் சர்வதேச அளவில் கவனம் பெறச்செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்ற ஐக்கிய நாடுகள் சபை, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து யோகா குறித்த விழிப்புணர்வுக்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் மோடி, அதன் ஒருபகுதியாகத் தற்போது இந்த வீடியோக்களை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். யோகாசனங்களை மோடியே செய்வதுபோன்ற அனிமேஷன் வீடியோக்களாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 10 யோகாசனங்கள் குறித்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆசனங்களையும் எப்படிச் செய்வது, அதன் பலன்கள் என்னென்ன, யாரெல்லாம் அதைச் செய்யக் கூடாது போன்ற செய்திகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. சனிக்கிழமை புஜங்காசனம் குறித்த வீடியோவை பகிர்ந்த பிரதமர், சலபாசனம் குறித்த வீடியோவை இன்று காலை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

மாறிவரும் வாழ்வியல் சூழலால் உருவாகும் பிரச்னைகள் பலவற்றுக்கும் யோகா நல்ல தீர்வு. உடல் உழைப்பு குறைந்துவருவது, ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவது, நீண்டதூர வாகனப் பயணம் ஆகியவற்றால் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். உடல் எடை அதிகரிப்பு, முதுகு வலி, முதுகுத்தண்டில் உருவாகும் சிக்கல்கள் போன்றவற்றுக்கு புஜங்காசனமும், சலபாசனமும் பெரிதும் உதவும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

புஜங்காசனம் முதல் சலபாசனம் வரை ...  அனிமேஷனில் அசத்தும் மோடி!
புஜங்காசனம் முதல் சலபாசனம் வரை ...  அனிமேஷனில் அசத்தும் மோடி!

`புஜங்கம்' என்றால் `பாம்பு' என்று பொருள். பாம்புபோல் வளைந்து செய்யவேண்டிய ஆசனம் என்பதால் இதற்கு 'புஜங்காசனம்' என்று பெயர்.  இந்த ஆசனத்தைச் செய்வதற்குமுன் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும். கைகளை நெஞ்சுப்பகுதிக்கு நேராகத் தரையில் ஊன்றி, தலையை மெள்ள பாம்புபோல் உயர்த்தவேண்டும். தலையோடு மார்புப் பகுதியையும் சேர்த்து உயர்த்தவேண்டும். இதைச் செய்யும்போது மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளவேண்டும். தலை மற்றும் மார்பு உயர்ந்தும், இடுப்பு மற்றும் கால்கள் தரையோடு ஒட்டியநிலையிலும் இருக்கவேண்டும். சில நொடிகள் அப்படியே இருந்து, பின்பு மெள்ள மெள்ள தலையை இறக்கி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவேண்டும். அப்போது உள்ளுக்குள் இழுத்த மூச்சை மெள்ளவிடவேண்டும். சில நொடிகள் ஓய்வுக்குப் பின் இதேமுறையில் மீண்டும் இந்த ஆசனத்தைச் செய்யலாம். 

புஜங்காசனம் முதல் சலபாசனம் வரை ...  அனிமேஷனில் அசத்தும் மோடி!

'சலபம்' என்பதற்கு 'வெட்டுக்கிளி' என்று பொருள். வெட்டுக்கிளி எப்படிக் கால்களை ஊன்றி பின்புறத்தைத் தூக்கிக்கொண்டு நிற்கின்றதோ, அதுபோன்று செய்யப்படும் ஆசனம் என்பதால் இதற்கு `சலபாசனம்' என்று பெயர். குப்புறப்படுத்து நாடியும், மார்பும் தரையோடு ஒட்டிய நிலையில் இருக்கவேண்டும். கைகளை உடலுடன் ஒட்டியபடி நீட்டி தொடைக்கு அடியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மெள்ள மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு கால்கள் மடங்காமல் இணைந்தவாறு மேலே உயர்த்த வேண்டும். மூச்சை அடக்கிய நிலையில் சில நொடிகள் அதே நிலையில் இருந்து பிறகு, மூச்சை மெள்ள வெளியேற்றி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். சில நொடிகள் ஓய்வுக்குப் பிறகு, இதை மீண்டும் செய்யலாம்.

புஜங்காசனம் முதல் சலபாசனம் வரை ...  அனிமேஷனில் அசத்தும் மோடி!

இந்த ஆசனங்களின் முக்கியத்துவம் குறித்து இயற்கை மற்றும் யோகா மருத்துவர் டாக்டர் அகில் ஷர்மிளாவோடு பேசினோம்.

"இன்றைய தலைமுறையின் முக்கிய பிரச்னை முதுகுவலி. தொடர்ந்து பயணம் செய்பவர்கள், அளவுக்கு அதிகமாக இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள்,  சுழலும் நாற்காலியில் அமர்ந்து பணியாற்றுபவர்கள் போன்றோருக்கு ஏற்படும் முதுகுவலி, முதுகுத்தண்டு பிரச்னை ஆகியவற்றுக்கு புஜங்காசனம் நல்ல தீர்வுதரும். தொப்பை குறையவும் இது உதவும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளுக்கும் இது நல்ல தீர்வு. தைராய்டு பிரச்னை உள்ளவர்களும் இதைத் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும். இந்த ஆசனத்தை, பெப்டிக் அல்சர் உள்ளவர்கள், ஹெர்னியா பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் செய்யக் கூடாது.

புஜங்காசனம் முதல் சலபாசனம் வரை ...  அனிமேஷனில் அசத்தும் மோடி!

சலபாசனமும் முதுகு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தரும். குறிப்பாக, முதுகுத் தண்டுவடத்தில் L 4, L 5 பகுதியில் பிரச்னை உள்ளவர்களுக்கும், தசைப்பிடிப்புச் சிக்கல் உள்ளவர்களுக்கும் இது நல்ல பலன்தரும். செரிமானப் பிரச்னைகள் தீர்ந்து நல்ல பசி எடுக்கும். ஆனால், இதயக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும் கர்ப்பிணிகளும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. வீடியோக்கள் மூலம் நாம் அதன் அத்தியாவசியத்தை அறிந்துகொள்ளலாம். ஆனால், நேரடியாக ஒரு ஆசிரியரிடம் பயின்று அதன் பிறகு ஆசனங்களைச் செய்வதே சரியானது" என்றார் அகில் ஷர்மிளா.

Vikatan