Published:Updated:

``ஓர் உயிர்காக்க நடந்த பலமணிநேரப் போராட்டம்!” - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்

"நீங்க நல்லபடியா இந்தப் பணியைச் செய்துமுடிங்க. நாங்க துணை இருக்கோம்” என்றார். விளச்சேரி ஹோம் உரிமையாளருக்கு இதைச்சொல்லி லீகல் பாதுகாப்பு உறுதிப்பட்டிருப்பதைத் தெரியப்படுத்தினோம். 

``ஓர் உயிர்காக்க நடந்த பலமணிநேரப் போராட்டம்!” - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்
``ஓர் உயிர்காக்க நடந்த பலமணிநேரப் போராட்டம்!” - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்

‘இப்போவெல்லாம் மனிதநேயமே இல்லைங்க...’ என அவ்வப்போது நாம் தூவிச் செல்கின்ற வார்த்தைகளைத் தவிடுபொடியாக்கும் வகையில் சிலர் எங்கேனும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மதுரையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை. நமக்குக் கிடைத்த அனுபவத்தை அப்படியே பகிர்கிறோம்...

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணி: தல்லாகுளம் போலீஸ் கான்ஸ்டபிளிடம் இருந்து வந்த அழைப்பைத் தவறவிட்டிருந்தோம். 

மாலை 5.09 மணி: மீண்டும் அவரை அழைத்தோம். அவர் நம்மிடம் சொன்னவை: “சார், அவுட்போஸ்ட்ல டூட்டி, எனக்கு. அங்க ஒரு பாழடைஞ்ச கட்டடத்துக்குக் கீழே மூன்று நாளா ஒரு வயசான கிழவி கிடக்கிறது. நான்கூட யாரோ தண்ணியடிச்சிட்டுதான், கிடந்திருப்பாங்கன்னு இத்தனை நாளா விட்டுட்டேன். இன்றைக்கு நல்லா பக்கத்தில் போய் பார்த்ததும்தான் தெரிஞ்சது. நாலு நாளும் சாப்பிடலை; பசிக்குதுன்னு சைகை காட்டினாங்க. சாப்பிட வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தேன். அவங்களை எப்படியாச்சும் முதியோர் ஹோம்ல சேர்க்கணும் உதவி பண்றீங்களா?” என்றார். உடனடியாக உள்ளூர் பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்களுக்குச்  செய்தியைச் சொல்லி, லாபநோக்கமற்ற நல்ல ஹோம்களைப் பற்றி விசாரித்தபடியே அவுட்போஸ்ட் நோக்கி விரைந்தோம்.

மணி 5.24: அங்கே அந்தக் கான்ஸ்டபிள் இருந்தார். கைகாட்டிய திசையில் சென்று எட்டிப்பார்த்தோம். கட்டடத்தின் மொத்த அழுக்கும் தூசியும் படிந்து கிடக்க, கூனிக்குறுகி மிரண்ட பார்வையோடு படுத்துக்கிடந்தார் அந்த மூதாட்டி. நாம் பேசியதற்குத் துளியும் எதிர்வினை இல்லை. மெதுமெதுவாக அசைந்த அவரின் கைகள் வயிற்றுக்கும் வாய்க்கும் போய்ப்போய் வந்தன. மேலும், அவருக்குப் பசி இருந்திருக்கும்போல. குடிக்கத் தண்ணீர் கேட்டார். கேன் தந்தோம். எல்லாமே அப்படியே கிடந்தது; அவரால் எதையும் எடுத்து உண்ணவோ, அருந்தவோ முடியவில்லை.

``ஓர் உயிர்காக்க நடந்த பலமணிநேரப் போராட்டம்!” - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்

மணி 5.31: மதுரையில் இயங்கிவரும் தன்னார்வ அமைப்பின் நண்பர் ஒருவர் மூலம் விளாச்சேரியில் இயங்கும் ஒரு முதியோர் இல்லத்தைத் தொடர்புகொண்டு, விவரங்களைத் தெரிவித்தோம். அந்த ஹோமின் உரிமையாளர் நம்மிடம் சொன்னது: “சார். இன்றைக்கு சண்டே. அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. சமூகநல வாரியத்துக்குத் தகவல் அளித்து முறைப்படிதான் ஹோமுக்குக் கொண்டுவர முடியும். இல்லாட்டி நிறைய ஆதரவற்றவங்க இருக்கிற இந்த ஹோமுக்குப் பிரச்சனையாகிடும். அதனால நான் சொல்ற யோசனையைப் பண்ணுங்க. 108-க்குச் சொன்னீங்கன்னா, அவங்க ஜி.ஹெச்சுக்குக் கொண்டுபோய் வெச்சுப் பார்த்துப்பாங்க. நாங்க நாளைக்கு வந்து எங்க ஹோமுக்கு எடுத்துக்குவோம்” என்றார்.

மணி 5.46: அவர் தந்த யோசனைப்படி 108-க்குத் தொடர்புகொண்டோம். ஸ்பாட்டிலிருந்து குறைந்தபட்சம் 9 கி.மீ தூரத்தில் வண்டிகள் உள்ளன. அருகில் இல்லை என்றார்கள், 108 சேவை மையத்தில். ‘சரி’ என்றோம். ஆனால், அந்த நேரத்தில் எந்த ஆம்புலன்ஸும் வருவதற்குத் தயாராக இல்லை என்பது தெரிந்தது. அத்தனையும் வெவ்வேறு அவசரங்களில் நின்றுகொண்டிருந்தன.

மணி 5.55: நம்பிக் காத்திருக்க முடியாது. மாற்று ஏற்பாடு அவசியம் என மீண்டும் விளாச்சேரி ஹோமைத் தொடர்புகொண்டோம். நிலைமையைப் புரிந்துகொண்டவர், உடனடியாக ஏற்பாடுகள் செய்யச் சம்மதித்தார். அவர் வரமுடியாத சூழல். "மருத்துவர்கள் கைவசம் இல்லை. ஆம்புலன்ஸ் இருக்கிறது, டிரைவருக்கு விடுமுறை. இத்தனையையும் தான் சமாளித்துக் கொள்வதாகவும் லீகல் சப்போர்ட்டுக்காக இப்போது வழிசெய்ய வேண்டும்" என்றார். 

``ஓர் உயிர்காக்க நடந்த பலமணிநேரப் போராட்டம்!” - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்

மணி 6.22: இதனிடையே, பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, ஒருவழியாகச் செல்லூரிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அந்த மூதாட்டியைப் பரிசோதித்த பெண் மருத்துவர், “பாட்டிம்மா உடம்புக்கு ஒண்ணுமில்லை. பசின்னுதான் சொல்றாங்க. உடம்புக்கு ஒண்ணும் செய்யாதபோது நாங்க கொண்டுபோனா டாக்டர் எங்களைத்தான் திட்டுவாரு. இப்படியே விட்டா உயிர்ப் பிரச்னைதான். ஆனா, நாங்க ஒண்ணும் பண்ண முடியாதே சார்” என்றார். வேறு இடத்தில் அவசரத் தேவை இருந்ததால் 108-ஐத் திரும்ப அனுப்பிவிட்டோம்.

மணி 7.11: நல்லவேளையாக, அதற்குள் விளாச்சேரி ஹோம் தயாராகிவிட்டிருந்தது. ஹோம் நிர்வாகி ஒருவர் பொறுப்பெடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் டிரைவர், டாக்டர், செவிலியர்கள் அனைவரின் விடுமுறையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து, அவசர அவசரமாக ஆம்புலன்ஸில் அவர்களை அழைத்துவந்தார் ஹோம் நிர்வாகி. டாக்டர், வேறோர் சிகிச்சையில் இருந்ததால் சற்று தாமதம் ஏற்பட்டிருந்ததாகத் தகவல் வந்தது.

இப்போது லீகல் பாதுகாப்புக்கான ஏற்பாட்டுக்காகத் தல்லாகுளம் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விவரம் சொன்னோம். 

மணி 7.21: தல்லாகுளம் சட்டம்- ஒழுங்கு காவல் உதவி ஆணையர் அசோகன் இணைப்பில் வந்தார். அவர் சொன்னது, “ரொம்ப நல்ல காரியம், பிரதர். நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம். இந்த மீட்புல செயல்பட்டுக்கிட்டு இருக்கிற யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராம பார்த்துக்கிறது எங்களோட பணி. உடனே ஆபீஸர்களை அனுப்பி வைக்கிறேன். நீங்க நல்லபடியா இந்தப் பணியைச் செய்துமுடிங்க. நாங்க துணை இருக்கோம்” என்றார். விளாச்சேரி ஹோம் உரிமையாளருக்கு இதைச் சொல்லி லீகல் பாதுகாப்பு உறுதிப்பட்டிருப்பதைத் தெரியப்படுத்தினோம். 

மணி 7.24: போலீஸ் வேனில் கான்ஸ்டபிள்கள் வந்திறங்கினர். விசாரித்துத் தகவல்களை உறுதிசெய்தனர். 

மணி 7.32: விளாச்சேரி ஆம்புலன்ஸ் ஸ்பாட்டை வந்தடைந்தது. பாட்டியைப் பரிசோதித்த செவிலியர்கள், அவரை நடக்க வைத்து ஆம்புலன்ஸ் ஏற்ற முயன்றனர். முடியவில்லை. ஸ்டெரச்சரைத் தூக்கிக்கொண்டு வந்ததும் மிரண்டுபோன பாட்டி, வருவதற்கு அடம்பிடித்தார். மருத்துவர்கள் கெஞ்சி, காவல்துறை பயமுறுத்தி அதட்டி, பரிந்துபேசி எனப் பலவித முயற்சிகள் செய்தார்கள்.

மணி 7.54: கடைசிக் கட்டமாக, அவரது பிடிவாதத்தைக் கட்டுப்படுத்தி, தளர்த்தி 20 நிமிடப் போராட்டத்துக்குப் பின்னர் அந்தப் பாட்டியை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

மணி 7.56: பாட்டி மீட்கப்பட்ட செய்தியை அந்த கான்ஸ்டபிளைத் தொடர்புகொண்டு சொன்னோம். ‘மனநிறைவா இருக்கு, சார்’ என்ற அவரின் குரல், லேசாகக் கம்மியது!

மறுநாள் ஹோமில் விசாரித்தோம். "தலையெல்லாம் புண்ணுங்க. முடிவெட்டி, குளிக்க வச்சு, புண்ணுக்கு மருந்து போட்டோம். மாசக்கணக்கா அநாதையா திரிஞ்சிருக்காங்க. அதிக நாள்களா அங்க கெடந்ததால கொஞ்சம் மனநலம் பாதிச்சிருக்கு. டிரீட்மென்ட் தந்தா குணமாகிடுவாங்க" என்றார், அந்த நிர்வாகி. நான்கு நாள்கள் கழிந்ததும் அவரிடம் பேசினோம். "பாட்டிக்கு நோய்த்தொற்று பரிசோதனை நடந்தது. எந்தப் பிரச்னையும் இல்லை. தனிப்படுக்கையில இருக்காங்க. கொஞ்சம், கொஞ்சமா குணமாகிட்டு வர்றாங்க. தனக்கு நாலு பிள்ளைகள் இருக்கிறதாகவும் அட்ரஸ் ஏதும் தெரியாதென்றும் சொல்றாங்க!" என்றார்.

நின்ற இடத்திலேயே ஓர் உயிரைக் காக்க அறிவியல் வளர்ச்சி போதுமானதாக இருக்கிறது. ஆனால், மனிதநேயத்தைக் காக்க எந்த அறிவியல் வளர்ச்சியும் தேவைப்படுவதில்லை. வேண்டியதெல்லாம் தெளிந்த உணர்வும் நிறைந்த அன்புமே!

Vikatan