Published:Updated:

ஞாயிற்றுக்கிழமை மட்டன் சால்னா!

Mannar Jawahar

ஞாயிற்றுக்கிழமை மட்டன் சால்னா!

ஞாயிற்றுக்கிழமை மட்டன் சால்னா!

ஞாயிற்றுக்கிழமை மட்டன் சால்னா!

Published:Updated:
Mannar Jawahar
ஞாயிற்றுக்கிழமை மட்டன் சால்னா!

ண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர், தன் ஊரான பாலமேடு குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை மட்டன் சால்னா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது பாலமேடு. 60 ஆண்டுகளுக்கு முன் ஊரின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே வெறும் 800 பேர்தான். பாலமேடு என்றதும் உடனே ஞாபகத்துக்கு வருவது  மஞ்சமலை ஆறுதான். எங்கள் ஊரின் நடுவில் பாய்ந்த அந்த ஆற்றில் பெரும்பாலான நாட்களில் நீர் வரத்து இருக்காது. ஆற்றின் ஒரு கரையில் ஆதிக்கச் சாதியினரும் இன்னொரு பக்கம் தலித் மக்களும் வசித்துவந்தார்கள். தெருக்கள் சாதியின் பெயரால் பிரிக்கப்பட்டு இருந்தன. இப்போது அந்தத் தெருக்களின் பெயர்களில் சாதி ஒழிந்து விட்டது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குச் சற்றும் குறையாத கம்பீரம் உடையது, பாலமேடு ஜல்லிக்கட்டு. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மஞ்சமலை ஆற்றங்கரையில் ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்கான தயாரிப்புகள் அலாதியானவை. மாடுகளுக்குக் கொம்பை நன்றாகச் சீவிவிட்டு, அடர் வண்ணத் துணி ஒன்றை ஆட்டி முட்டவைத்து பயிற்சி கொடுப்பார்கள். நடுவில் போனால் ஆள் அம்பேல்தான்.

மின்சாரம் கிராமங்களுக்கும் வரத் தொடங்கி இருந்த காலம். எங்கள் கிராமத்தில் குண்டு பல்பு மாட்ட வந்த நாளில் ஊரே பரபரப்பாக இருந்தது. எதை எதையோ முடுக்கிவிட்டு, மஞ்சள் நிறத்தில் பல்பு ஒளிர்ந்தபோது, நாங்கள் போட்ட கூச்சல் இன்னமும் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

டென்ட் கொட்டகையில் அடித்துப் பிடித்து 20 அணா கொடுத்து, மணலில் உட்கார்ந்து படம் பார்த்த அனுபவங்கள் அற்புதமானவை. 75 காசு கொடுத்தால் நாற்காலியில் உட்காரலாம். ஆனால், நண்பர்களோடு படுத்துக்கொண்டே  படம் பார்த்த சுகமான அனுபவம் எங்கள் தலைமுறைக்கு மட்டுமே கிடைத்த சுகமான அனுபவம். அப்படிப் பார்த்த 'நானும் ஒரு பெண்’, 'காவல் தெய்வம்’ போன்ற படங்கள் இன்னமும் மனதுக்குள் பசுமை மாறாமல் நிழலாடுகின்றன. மாரியம்மன் கோயில் திருவிழா கொண்டாட்டங்கள் பரவசம் கொடுப்பவை. அப்போது எங்களுக்குக் கொடுக்கப்படும் தினையும் தேனும் கலந்த தினைமாவின் இனிப்பும், பிசுபிசுப்பும் இன்னமும் நாக்கில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. கும்மி அடித்துப் பாடும் பெண்களின் வளையல் ஓசை வருடங்கள் கடந்தும் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மட்டன் சால்னா!

பாலமேடு என்றாலே முருங்கை மரங்கள் நிறைந்து இருக்கும்.  அப்போது சென்னைக்கே நிறைய முருங்கைக் கீரைகளை ஏற்றுமதி செய்தார்கள். எங்கள் ஊரின் பிரபலமான இன்னொரு உணவு... கேப்பைக் களி. அதை நன்றாகக் கரைத்து பச்சை மிளகாயோடு நறுக்கென்று தொண்டைக்குள் இறக்கும்போது உண்டாகும் காரமும், எங்கள் அன்னைமார்களின் அன்பும் திரும்ப வராதவை. எங்கள் ஊர் கிராமம் என்பதால் சனிக்கிழமை சந்தை கூடும். அன்றைக்கு மட்டுமே கிடைக்கும் காரச்சேவு, சீனிச்சேவு, ஜீராபோளிக்காக, சந்தையைச் சுற்றிச் சுற்றி வருவோம். அப்போது எங்கள் ஊரில் இருந்த ஒரே ஹோட்டல் ராமு பரோட்டாக் கடை. அங்கே ஞாயிற்றுக் கிழமை மட்டும் மட்டன் சால்னா கிடைக்கும். அதற்காகப் பெரிய வரிசையில் தூக்குவாளிகளோடு காத்து இருப்பார்கள் மக்கள். வால்வு ரேடியோவைத் திருகி அதில் இரவு 10 முதல் 11 மணி வரை கேட்ட இசைப் பாடல்கள் எல்லாமே ஆனந்த ராகம்தான்.

என் கிராமத்தில் கிணறுகள் மட்டுமே நூற்றுக்கு மேல் இருந்தன. அதில் தண்ணீர் 10, 15 அடியில் நிரம்பி இருக்கும். அதில் அடிமண் எடுப்பது தொடர்பாக, பந்தயம் வைப்போம். சேந்தமங்கலம் வரை வயல்வெளிகளின் ஊடாக நடந்துபோகும்போது, வழி எங்கும் வளர்ந்து நிற்கும் புளிய மரங்கள் ஆயிரம் கதை சொல்லும். 800  பேரோடு இருந்த என் ஊர், இன்றைக்கு 15 ஆயிரம் பேரோடு பெருகி நிற்கிறது. ஆனாலும் அன்றைக்கு எங்களுக்குள் இருந்த நேசமும், மண்ணோடு ஒட்டி வாழ்ந்த வாழ்வும், கிணறும், மஞ்சமலை ஆற்றின் நினைவுகளும் இப்போதைய தலைமுறைக்கு வாய்க்காமல் போனது காலத்தின் சுழற்சிதான். வேறென்ன சொல்ல?''

ஞாயிற்றுக்கிழமை மட்டன் சால்னா!
ஞாயிற்றுக்கிழமை மட்டன் சால்னா!

பூ.கொ.சரவணன்
படங்கள்: பா.காளிமுத்து, ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism