Published:Updated:

ஆதலினால் காதல் செய்வீர்!

ச.தமிழ்ச்செல்வன்

காதல் என்றாலே தாஜ்மஹால் அல்லது லைலா மஜ்னு கதைகள்தான் எல்லோருடைய நினைவுக்கும் வந்துவிடுகிறது. ராஜா வீட்டுக் காதல்கள் என்பதால், பேச்சு எப்போதுமே ஓவராகத்தான் எழுந்துவிடும். சினிமா நட்சத்திரங்களின் காதல்கள் ஊடகங்களின் தயவால் உலகம் எங்கும் பேச வைக்கப்படுவது உண்டு. ஆனால், எளிய மக்களின் எத்தனையோ காதல்கள் யாராலும் பேசப்படாமல், காலத்தினூடே கடந்துபோய்க்கொண்டு இருக்கும்.

ஆதலினால் காதல் செய்வீர்!
##~##

காதல் பற்றி யோசிக்கும்போது என் நினைவுக்கு வரும் இரண்டு காதல் மன்னர்கள், எங்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மதுரை வீரனும், முத்துப்பட்டனும். கி.பி.1634-ஐ ஒட்டிய ஒரு காலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் அவர்கள். திருமலை நாயக்கரின் ஆட்சிப் பகுதியில் இருந்த ஒரு பாளையக்காரர் ஆன பொம்மண நாயக்கரின் மகள் பொம்மியைக் காதலித்து, அதாவது ஒரு நாயக்க மன்னனின் மகளை அருந்ததியர் ஆன மதுரை வீரன் காதலித்து, அவளைச் சிறை எடுத்து காந்தர்வ மணம்புரிந்து திருச்சிக்கு 'ஓடிப்போய்’ திருச்சிப் பாளையக்காரர் விஜயரங்க சொக்க லிங்க நாயக்கரின் படைத் தளபதியாகி வாழ்க்கை நடத்தினார்கள். என்றா லும் காதலுக்கு எதிராகச் சாதியும் அந்தஸ்தும் செய்த சதியால், மதுரைவீரன் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டுக் கொலையுண்டான். சாதி மீறிய  காதலுக்காகக் கொல்லப்பட்ட அவனையும் அவனுடைய காதலிகள் பொம்மி மற்றும் வெள்ளையம்மாளையும் சேர்த்துச் சிலையாக்கி மதுரை வட்டார மக்கள் சாமியாக வணங்கினார்கள். மதுரைவீரன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெளியே (கிழக்குக் கோபுரச் சுவரை ஒட்டி) இப்போதும் இருக்கிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சாதி மீறிக் காதலித்த தும் அந்தக் காதலர்களை ஆதிக்கவாதிகள் கொன்றாலும் மக்கள் சாமியாக வழிபடுவதும் என, தென் மாவட்ட மக்கள் காதலுக்கு மரியாதை செய்கிறவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஆதலினால் காதல் செய்வீர்!

எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற நாட்டார் தெய்வம் சொரிமுத்தையன். சிங்கம்பட்டி ஜமீன்தாரின் ஆளுகையின் கீழ் உள்ள கோயில். பாபநாசத்துக்கு மேலே அமைந்து உள்ள இந்தக் கோயிலுக்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். அதில் உள்ள ஒரு தெய்வம்தான் முத்துப்பட்டன். இவனும் மதுரைவீரன் காலத்தை ஒட்டி வாழ்ந்த ஒரு மனிதன்தான்.

ஆதலினால் காதல் செய்வீர்!

கேரளத்துப் பிராமணர்கள் ஆன பட்டர்கள் வம்சத்தைச் சேர்ந்தவன் முத்துப்பட்டன். இளம் வயதிலேயே வர்ணாசிரம எதிர்ப்பு உணர்வு கொண்டு இருந்த அவன், பெற்றோரோடும் உடன்பிறந்த அண்ணன்மாரோடும் சண்டையிட்டு வெளியேறியவன். ஆரியங்காவு, கொட்டாரக்கரா தாண்டி மேற்குத்தொடர்ச்சி மலைப்பாதையில் இந்தப் பக்கம் வந்தவன், வழியில் இரு பெண்களைக் கண்டு மயங்கிக் காதல்கொள்கிறான். அந்தப் பெண்கள் அக்கா தங்கையான பொம்மக்காவும் திம்மக்காவும் ஆவர். அவர்கள் அருந்ததியர் குலத்தைச் சேர்ந்த  வாலப்பகடை என்பவரின் புதல்விகள். காதலர்கள் மூவரும் பெண்களைப் பெற்ற வாலப்பகடையிடம் போகிறார்கள். வாலப்பகடை, ''பிராமணப் பையனுக்கு எப்படி நான் பெண் கொடுக்க முடியும்?'' என்று மறுக்கிறார். காதலுக்காகப் பூணூலை அறுத்து எறிந்து செருப்புத் தைக்கும் வேலைசெய்து, கறி சாப்பிட்டுப் பழகி, அருந்ததியராகவே மாறி, 'இப்ப என்ன சொல்றீங்க?' என்று நாற்பது நாளில் வந்து நிற்கிறான் முத்துப்பட்டன். (ஜெயம் ரவி, த்ரிஷா, பிரபு நடித்த 'உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்’ படம் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!). வாலப்பகடை தன் மக்களை இப்போது மனநிறைவோடு திருமணம் செய்து கொடுக்கிறான். ஆனால், ஆதிக்கச் சாதியினர் இந்தத் திருமணத்தை ஏற்கவில்லை. அவர் பொறுப்பில் இருந்த மாடுகளைக் களவாண்டு, வம்பிழுத்து கத்தியால் குத்தி முத்துப்பட்டனைக் கொலை செய்கிறார்கள். சாதி மீறிக் காதலித்த குற்றத்துக்காகக் கொல்லப்பட்ட முத்துப்பட்டனை, நெல்லைச் சீமையின் எளிய மக்கள் சாமியாக்கி வழிபட்டு வருகிறார்கள். அவர் வேட்டைக்குப் போகும்போது முள் தைக்காமல் இருக்க அவருக்குச் செருப்பும், களவாட வந்தவர்களோடு சண்டை போட வல்லயம் என்னும் ஆயுதமும் செய்து போடுவதாக வேண்டிக்கொண்டு, நேர்த்திக்கடனாகச் செருப்பும் வல்லயமும் செய்து போடுகிறார்கள். பாபநாசத்தில் அவருடைய கோயிலுக்கு வெளியே குவிந்துகிடக்கும் செருப்புகளும் வல்லயமும் நெல்லைச் சீமை மக்கள் காதலுக்குச் செய்த மரியாதை அல்லவா?

ஆதலினால் காதல் செய்வீர்!

தாஜ்மஹால் மாதிரி கோடிகளைக் கொட்டி காதலைப்  போற்ற  எளிய மக்களுக்கு வசதி இல்லை. ஆனால், செருப்பு செய்துபோட முடி யும். ஒவ்வொரு செருப்பும் ஒரு தாஜ்மஹால்தானே? ஒன்பது குழந்தைகள் பெற்ற எம் அன்புத் தாய்  மும்தாஜுக்காக, ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை நாம் வணங்குவோம். அதேசமயம் எங்கள் ஏழை மக்களின் காதல் சின்னங்களையும் போற்றிப் பாடவும் இந்தக் காதலர் தினத்தில் உறுதி ஏற்போம்!

படம்: எல்.ராஜேந்திரன்

அடுத்த கட்டுரைக்கு