Published:Updated:

காங்கிரஸின் தோல்விக்கு வித்திட்டதா `புராஜெக்ட் சக்தி'? புதிய சர்ச்சை!

`மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம்?' இந்தக் கேள்விக்கு விடையாக இதுவரை எத்தனையோ கருத்துகளும் விளக்கங்களும் வந்துவிட்டன. அந்த விடைகள் அனைத்தும் இதுவரை கைநீட்டியது கட்சித் தலைவரான ராகுல் காந்தியையும் கட்சியின் நடவடிக்கைகளையும் மட்டுமே. ஆனால், தற்போது அவர் தவிர்த்து இன்னொருவரின் மீது தோல்விக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிடிக்ஸ் விங்கின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி. எதனால் இந்தக் குற்றச்சாட்டுகள்?

காங்கிரஸின் தோல்விக்கு வித்திட்டதா `புராஜெக்ட் சக்தி'? புதிய சர்ச்சை!
காங்கிரஸின் தோல்விக்கு வித்திட்டதா `புராஜெக்ட் சக்தி'? புதிய சர்ச்சை!

டந்தவருடம் இறுதியில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். இந்த மூன்று மாநிலங்களிலும் முதலமைச்சர் பதவிக்காக, கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும்போட்டி நிலவியது. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத். ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட், சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல், சரண்தாஸ் மஹந்த், டி.எஸ்.சிங் டியோ மற்றும் தம்ரத்வாஜ் சாஹு. இந்தக் கடும்போட்டிகளை எல்லாம் கடந்து, இறுதியில் ஒவ்வொரு மாநிலமாக முதலமைச்சர்களைத் தேர்வுசெய்து அறிவித்தார் காங்கிரஸ் ராகுல்காந்தி. இந்தத் தேர்வில் ராகுல்காந்தியின் செயல்பாடுகளுக்கு அடுத்து அதிகம் செய்திகளில் இடம்பெற்ற ஓர் அம்சம், `சக்தி ஆப்'. காங்கிரஸ் தலைமை, தன் ஆதரவாளர்களுடன் நேரடியாக உரையாட உருவாக்கப்பட்ட ஒரு வசதிதான் இது. இதன்மூலமாக தொண்டர்கள் மத்தியிலிருந்து வந்த கருத்துகளை வைத்துதான் முதலமைச்சர்களை ராகுல் முடிவு செய்ததாக அப்போது கூறப்பட்டது. தற்போது அதே `சக்தி', புதிய சர்ச்சைகளுக்கும் காரணமாகியிருக்கிறது. 

கடந்த மே மாதம் 23-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகின. இதற்கடுத்த சில தினங்கள் கழித்து ``காங்கிரஸ் கட்சியின் `புராஜெக்ட் சக்தி', ராகுல் காந்தியைத் தவறாக வழிநடத்திவிட்டது. இதைவைத்துக் கொண்டு ராகுல் எடுத்த முடிவுகளாலும், வகுத்த பிரசார உத்திகளாலும்தான் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. இந்த புராஜெக்ட் சக்தியின் மூலம் இணைந்தவர்கள் பலரும் போலியாகச் சேர்க்கப்பட்டவர்கள்." என முதல் திரியைப் பற்றவைத்தது HuffingtonPost என்ற ஆங்கில இணையதளம். அதற்கடுத்து நேற்றுமுன்தினம் இதுகுறித்து விரிவாகச் செய்தி வெளியிட்ட எகானாமிக் டைம்ஸ் நாளிதழும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தது. ``இதன்மூலம் அதிகமான போலி பயனாளர்கள் சேர்க்கப்பட்டது அந்தக் கட்சிக்கு எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. மேலும், இந்த சக்தியின் பயனாளர்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளும் கட்சிக்கு எதிராக அமைந்தன. டேட்டா அனலிடிக்ஸ் விங்கின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தியின் தவறான வியூகங்களே இதற்குக் காரணம்." எனக் குற்றம்சாட்டியது அந்தக் கட்டுரை. இதுதவிர Sunday Guardian Live தளத்தில் வெளியான செய்தி, இன்னுமே அதிகமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ``புராஜெக்ட் சக்தியின் மூலம் பெறப்பட்ட தகவல்களை பிரவீன், ராகுலிடம் அளிக்கவில்லை. மேலும், பிரவீன் வகுத்த வியூகங்களால் எப்படியும் 164 முதல் 184 இடங்கள் வரை வென்றுவிடுவோம் என நம்பிக்கொண்டிருந்தார் ராகுல். ஆனால், எதுவுமே நடக்காமல் போய்விட்டது. இந்தத் தேர்தல் முழுக்க பிரவீன் சக்கரவர்த்தியால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்" என்றது அந்தச் செய்தி. இதற்கெல்லாம் பொதுவாக விளக்கமளித்த பிரவீன் சக்கரவர்த்தி, ``இந்தக் குற்றச்சாட்டுகள் அத்தனையுமே முழுப் பொய். என்னைக் குறித்தும், எங்கள் டேட்டா அனலிடிக்ஸ் அணி குறித்தும் எழுதப்பட்ட அனைத்து விஷயங்களும் தவறானவை. நாங்கள் தொடர்ந்து எங்கள் பணியைத் தொடர்ந்து வழக்கம்போலச் செய்யப்போகிறோம்." என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு சர்ச்சைகளுக்குக் காரணமாக புராஜெக்ட் சக்தி என்பது என்ன?

காங்கிரஸின் தோல்விக்கு வித்திட்டதா `புராஜெக்ட் சக்தி'? புதிய சர்ச்சை!

பெரும்பாலானோர் நினைப்பதுபோல `சக்தி' என்பது ஓர் ஆப் அல்ல; (ஆனால், ஐந்து மாநில தேர்தல்களின் போது இது ஆப் என்றே குறிப்பிடப்பட்டதால், கட்டுரையின் தொடக்கத்தில் அப்படி இடம்பெற்றுள்ளது) மாறாக, கட்சித் தலைவரான ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டனும் நேரடியாக உரையாடுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் சேவைதான் இந்த `சக்தி'. காங்கிரஸ் தொண்டர்கள் இதைப் பயன்படுத்த ஸ்மார்ட்போன் வைத்திருக்கவேண்டிய அவசியம் கூட இல்லை. காரணம், இணையமும் தேவையில்லை. பிறகு எப்படி இது இயங்குகிறது? 

காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் இந்த `சக்தி' சேவை மூலமாக புதிய காங்கிரஸ் ஆதரவாளர்களை இதில் இணைக்கவேண்டும் என்பது அவர்களுக்கான அசைன்மென்ட். இத்தனை பேரை இணைக்கவேண்டும், இவ்வளவு நாள்களுக்குள் இணைக்கவேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. இதில் ஒரு புதிய ஆதரவாளரை, ஒரு நிர்வாகி இணைக்கவேண்டும் என்றால் அந்த ஆதரவாளரின் மொபைல் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இரண்டும் தேவை. உதாரணமாக உங்களை நான் இணைக்கிறேன் என்றால், உங்களுடைய மொபைலை வாங்கி உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, அதோடு எனக்கான Referal எண்ணையும் இணைத்து சக்தி சேவைக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவேண்டும். இப்படி அனுப்பியதும் உங்களின் மொபைல் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் இரண்டும் காங்கிரஸ் டேட்டா விங்கின் டேட்டாபேஸில் பதிவாகிவிடும். இந்த டேட்டா, மாவட்டம் வாரியாக, நகரம் வாரியாக, தொகுதி வாரியாக எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு சேமிக்கப்படும். எனவே, உங்கள் நகரத்திலோ அல்லது தொகுதியிலோ காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றால் உங்களுடைய மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் வரும். உங்கள் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய வருகிறார் என்றால் அவரது குரலில், வாய்ஸ் மெசேஜூம் வரும். இப்படிக் கட்சியின் செய்திகள் உங்களை வந்து சேர்வது மட்டுமல்ல; உங்களின் செய்திகளும் கட்சிக்குச் சென்றடையும். எப்படி? 

காங்கிரஸின் தோல்விக்கு வித்திட்டதா `புராஜெக்ட் சக்தி'? புதிய சர்ச்சை!

உதாரணமாக உங்கள் தொகுதியில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது எனில், உங்களிடம் போன் கால் மூலம் கருத்துகேட்கப்படும். உங்கள் தொகுதியின் வேட்பாளராக யார் நிறுத்தப்படவேண்டும் என்பதை அந்த காலில் பதிவுசெய்யலாம். உங்கள் தொகுதி குறித்த விவாதங்கள் வரும்போது, இதுபோல `சக்தி' திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளும் கவனத்தில் கொள்ளப்படும். மேலே நாம் பார்த்த முதலமைச்சர் தேர்வுகளும் இப்படித்தான் நடந்தன. இதுதான் புராஜெக்ட் சக்தியின் நோக்கம். 2017 முதலே சோதனை செய்யப்பட்டுவந்த இந்த `சக்தி' சேவைக்கு 2018-ல்தான் முழுவடிவம் கொடுத்தது காங்கிரஸ். அதன் பொறுப்பாளராகவும், காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிடிக்ஸ் விங்கின் தலைவராகவும் பிரவீன் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டார். 2018-லிருந்து 2019 தேர்தல் முடிவுகள் வரும்வரைக்குமே இதில் புதிதாகப் பயனாளர்கள் சேர்க்கப்பட்டுக் கொண்டே இருந்தனர். இதுவரையிலும் சுமார் 75 லட்சம் முதல் 80 லட்சம் பயனாளிகள் வரை இதில் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. இப்படிச் சேர்க்கப்படும் ஒவ்வொரு பயனாளரின் எண்ணிக்கையும் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள ராகுல்காந்தியின் அறையில், ஒரு பெரிய திரை மூலம் காட்டப்படும். ராகுல்காந்தி, பிரவீன் சக்கரவர்த்தி... இந்த இருவர்தான் `சக்தி' திட்டத்தின் சாரதிகள். தற்போது இந்த புராஜெக்ட் சக்தி சர்ச்சையில் சிக்கியிருப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இதில் சேர்க்கப்பட்டுள்ள பயனாளர்களின் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் போலியானவர்கள் என்பது. இரண்டாவது, இந்தப் பயனாளர்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளே தேர்தலில் காங்கிரஸுக்குத் தோல்வியைப் பரிசளித்தன என்பது. இந்த இரண்டும் உண்மையா எனத் தெரிந்துகொள்ள காங்கிரஸ் ஐ.டி.விங் வட்டாரத்தில் விசாரித்தோம்.

காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றிய முக்கிய பிரமுகர்கள் இருவர் கூறுகையில், ``ராகுல்காந்தி கட்சித் தலைவரான பின்பு கொண்டுவந்த முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்று. காங்கிரஸின் கடைக்கோடி தொண்டர் ஒருவருடன் நேரடியாக உரையாட வேண்டும் என்ற விருப்பத்தில் உருவானதுதான் இந்த சக்தி. ஆனால், இது நடைமுறைப்படுத்தப்பட்டதில் நிறையவே சிக்கல்கள் எழுந்தன. பலருக்கும் இதில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக இதை நிர்வாகிகள் பலர் தங்களுடைய பலத்தைக் காட்டும் ஒரு முயற்சியாக மாற்றிவிட்டனர். ஒரு தொகுதியில் நான் 10,000 பேரை சேர்த்தால், என்னுடைய பலம் நேரடியாக கட்சித் தலைமைக்குத் தெரியவரும்; கட்சியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் எனப் பலரும் நம்பினர். இதனால் அவர்கள் நிஜமான காங்கிரஸ் ஆதரவாளர்களைப் புதிதாகச் சேர்ப்பதற்கு பதில் தங்கள் நண்பர்களையே இதில் சேர்த்துவிட்டனர். இன்னும் சிலர் அறிமுகம் அற்ற நபர்களையும் கும்பல் கும்பலாகச் சேர்த்துவிட்டனர். இதில் உண்மையான நபர்களைக் கண்டுபிடிப்பது என்பதே சவாலாகிப் போனது. அவர்களை கிராஸ்செக் செய்வதற்கான வழிகளும் இல்லை. இறுதியில் இந்த `சக்தி' திட்டம் கொண்டுவந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விட்டது. உண்மையில் இது சரியாக நிறைவேற்றப்பட்டிருந்தால் நல்ல திட்டமாக இருந்திருக்கும். தேர்தல் நேரத்திலும் சரியாகக் கைகொடுத்திருக்கும்.

இந்தப் பிரச்னைகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் டேட்டா விங்கைச் சார்ந்தவை மட்டுமே. ஆனால், இதோடு கட்சியின் ஒட்டுமொத்த தோல்வியையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது. இந்த விஷயத்தில் பிரவீன் சக்கரவர்த்தியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது, ரஃபேல் விவாகரத்தை வைத்து பிரசாரத்தை வடிவமைத்தது அவர்தான், அது பொதுமக்கள் மத்தியில் எடுபடாமல் போனதால்தான் ராகுல் தோற்றுவிட்டார் என்பது. உண்மையில் தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் டேட்டா விங்கை மட்டுமே அடிப்படையாக வைத்து திட்டமிடப்படுவதில்லை. அவை இன்னும் பல அணிகளோடு ஆலோசிக்கப்பட்டே வடிவமைக்கப்பட்டன. பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் அதில் இருந்தனர். இத்தனைக்கும் இந்த புராஜெக்ட் சக்தி தொடங்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் தேர்தலைச் சந்தித்திருக்கிறோம். எங்களுக்கான கால அளவு மிகக்குறைவு. எனவே, மொத்த தேர்தல் தோல்விக்கும் பிரவீன் சக்கரவர்த்தியைக் குற்றம்சாட்டுவது எப்படிச் சரியாகும்? அதற்கான காரணங்களை வேறுவிதமாகத்தான் அலசவேண்டும்." என்றனர்.

காங்கிரஸின் தோல்விக்கு வித்திட்டதா `புராஜெக்ட் சக்தி'? புதிய சர்ச்சை!

இந்தப் போலி பயனாளர் குற்றச்சாட்டுகள் குறித்தும், தேர்தல் தோல்வி குறித்தும் காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிடிக்ஸ் விங்கின் தமிழகப் பொறுப்பாளரான டி.செல்வத்திடம் கேட்டோம். ``புராஜெக்ட் சக்தி என்பது எங்கள் தொண்டர்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் வைத்திருக்கும் வசதி. இது முதல்கட்டம் மட்டும்தான். இன்னும் பல புதிய வழிமுறைகளை நாங்கள் ஏற்படுத்தப்போகிறோம். இதன்மீது இப்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அடிப்படை ஆதாரமற்றவை. காரணம், காங்கிரஸ் கட்சியின் சார்பில் எந்தவொரு தலைவரும், எந்தவொரு நிர்வாகியும் இதை அதிகாரபூர்வமாகக் கூறவில்லை. எனவே, இந்தத் திட்டம் செயல்படுவது பிடிக்காமல் அல்லது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மீது அவதூறு ஏற்படுத்துவதற்காக சிலர் செய்யும் காரியமாகத்தான் இதைச் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.

இந்த `சக்தி'யில் அதிக ஆதரவாளர்களைச் சேர்ப்பதன் மூலமாக நிர்வாகிகளுக்கு எந்தவொரு பதவியும் தரப்படுவதில்லை. மாறாக Reward-கள் மட்டுமே வழங்குகிறோம். இதன்படி, ஒரு நிர்வாகி அதிக பயனாளரைச் சேர்த்தால் அவருக்கு ராகுல் காந்தியின் கையொப்பமிட்ட ஒரு சான்றிதழும் அவரைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பும் தரப்படும். அவ்வளவுதான். மேலும், இதில் சேர்க்கப்படும் ஆதரவாளர்கள் அப்படியே கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அதற்கடுத்து தொடர்ந்து அவர்கள் எப்படி கட்சியின் செய்திகளுக்கு மொபைலில் பதிலளிக்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொண்டுதான் அவரை மதிப்பிடுவோம். எனவே போலி பயனாளர் என்றால் இந்த முதல் கட்டத்திலேயே எங்களுக்குத் தெரிந்துவிடும். தெலங்கானாவில்கூட ஒரு நிர்வாகி மிகக் குறைந்த காலத்தில் அதிகளவிலான பயனாளர்களை முறைகேடாகச் சேர்த்தார். அதை உடனே கண்டுபிடித்து நீக்கிவிட்டார்கள். எனவே பயனாளர்களை உறுதிப்படுத்துவது கடினமான விஷயமல்ல. 

இந்த வசதி எங்களுக்குப் பலவிதத்தில் உறுதுணையாகத்தான் இருந்தது. தொகுதியில் நேரடியாகக் கட்சியின் செய்திகளைக் கொண்டு சேர்க்கவும் அவர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்கவும் உதவியது. உதாரணமாக, உங்கள் தொகுதியில் எந்த காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என 'சக்தி'யின் மூலமாகவே கணக்கெடுப்பு நடத்தி, அதை டெல்லிக்கு அனுப்பினோம். மற்றபடி தேர்தல் தோல்விக்கு இதை பழிசொல்வதெல்லாம் சரியல்ல; காங்கிரஸ் எவ்வளவு பெரிய கட்சி? அது இந்த ஒரு திட்டத்தை மட்டுமா வைத்து முடிவெடுக்கும்? இதெல்லாம் தற்போது கிளப்பிவிடும் தேவையில்லாத சர்ச்சைகள்." என்றார்.

தோல்விக்கான பழியை தானே முன்வந்து `தலைமை' ஏற்காதவரை, இப்படித் தேவையற்ற குற்றச்சாட்டுகள் ஒருவர் மீது ஒருவராக இடம் மாறிக்கொண்டுதான் இருக்கும். 

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead