Published:Updated:

மெட்ராஸ் காட்டன்... ஆப்பிரிக்க கறுப்பின வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர்! ஏன்?

ஆப்பிரிக்காவில் அதன் பயன்பாடு அதிகமாகத் தொடங்கியவுடனே அதன் விலையும் அதிகமானது. எந்த அளவுக்கு அதிகமானது என்றால், நெய்யப்பட்ட மெட்ராஸ் ஆடைக்கு நிகர் ஒரு மனிதர்.

மெட்ராஸ் காட்டன்... ஆப்பிரிக்க கறுப்பின வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர்! ஏன்?
மெட்ராஸ் காட்டன்... ஆப்பிரிக்க கறுப்பின வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர்! ஏன்?

மெட்ராஸ் பருத்தி ஆடைகள் உலகளவில் பிரபலமான ஆடைகளில் ஒன்று. அதுவும் 1950-களில் மேற்கத்திய வெள்ளையர்களின் விருப்பமிகு ஆடையாகத் திகழ்ந்தன மெட்ராஸ் ஆடைகள். இதை வணிகமயப்படுத்தியதன் மூலமாக உலகிலுள்ள பல ஆடை வடிவமைப்பாளர்கள் மத்தியில் முதன்மைத் தேர்வாக இது நின்றது. உலக வணிகம் மூலமாக, மற்ற ஆடை வகைகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் நின்றது மெட்ராஸில் உற்பத்தியான மென்மையான பருத்தி ஆடைகள். 

பல வண்ணங்களைப் பயன்படுத்திப் பல்வேறு வடிவங்களில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளுக்காக 18, 19-ம் நூற்றாண்டுகள் முதலே இந்தியாவைச் சுற்றி மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வட்டமிட்டன. இன்றைய சென்னையைச் சுற்றியிருந்த கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தம் கைகளாலேயே அவற்றை நெய்தார்கள். அவை மெட்ராஸ் கிளாத், மெட்ராஸ் ஆடை என்ற பெயரில் உலகம் முழுக்கப் பிரபலமானது. இந்த ஆடைகள் நடுத்தர மற்றும் அதைவிடக் குறைவான வருமானத்தைப் பெறுபவர்கள் வாங்கும் அளவுக்கு எளிமையானவையாக இருந்துள்ளன. நம் சென்னையில் நெய்யப்பட்ட துணிகள் கறுப்பினக் கலாசாரத்திலும் அவர்களின் வரலாற்றிலும் பெரும்பங்கு வகித்தது என்றால் உங்களால் நம்பமுடியுமா! நம்புங்கள், நம் மெட்ராஸ் பருத்தி தன்னுள் உலகளவில் பிரபலமாக மட்டும் இருந்திருக்கவில்லை. அது தன்னுள் பல ரத்தக்கறைபடிந்த வரலாறுகளையும் அடக்கி வைத்துள்ளது. 

மெட்ராஸ் காட்டன்... ஆப்பிரிக்க கறுப்பின வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர்! ஏன்?

இந்த ஆடைகள் 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் கண்களுக்குத் தெரியும் முன்னரே, 14-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க சாம்ராஜ்யங்களுக்குள் நுழைந்துவிட்டன. வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு வணிகர்கள் மூலமாக ஆப்பிரிக்காவுக்குள் நுழைந்த இந்த ஆடைகளுக்கு அங்கு அதிக கிராக்கி இருந்தது. எடை குறைவான, அணிந்தவாறு அனைத்து வேலைகளையும் இடைஞ்சலின்றி செய்துகொள்ள வசதியாக இது இருந்தது. அதனால், இந்த ஆடைகள் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலமாகத் தொடங்கின. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளப் பழகியிருந்தார்கள். இதன் பயன்பாடு அதிகமானதால், இந்தத் துணிகளுக்கு அதிக விலை வைத்து விற்கத் தொடங்கினார்கள் ஆப்பிரிக்க மற்றும் மத்தியக் கிழக்கு வணிகர்கள். 

வடக்கு ஆப்பிரிக்காவில் அது பிரபலமாகிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்களிடமிருந்த இதைப்பற்றித் தெரிந்துகொண்டார்கள் போர்த்துகீசிய வணிகர்கள். அதன்பிறகு, மேற்கு ஆப்பிரிக்காவுக்குப் போர்த்துகீசிய வணிகர்களால் விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் மெட்ராஸ் ஆடைகள் மிகவும் பிரபலமாகின. 17-ம் நூற்றாண்டின் வணிக வரலாற்றில் மிகவும் மதிப்பு வாய்ந்த சரக்குகளில் ஒன்றாக இந்தப் பருத்தி ஆடை புகழ்பெறத் தொடங்கியது. ஆப்பிரிக்காவிலிருந்த உள்ளூர் வணிகர்களின் யார் கையிலாவது இந்தப் பருத்தி ஆடை இருந்தால் போதும். அதை மட்டும் வைத்தே அவர்களால் நிறைய சரக்குகளை வாங்க முடிந்தது. அந்தச் சரக்குகளை மீண்டும் கொண்டு சென்று மேற்கத்திய வணிகர்களிடம் அதிக விலைக்கு விற்றார்கள். மேற்கத்திய வணிகர்கள்கூட மெட்ராஸ் ஆடைக்கு மாற்றாகத் தங்கம், உப்பு, பால் போன்ற பொருள்களை வாங்கும் அளவுக்கு அந்த ஆடைக்கு மதிப்பு இருந்தது.  

மெட்ராஸ் காட்டன்... ஆப்பிரிக்க கறுப்பின வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர்! ஏன்?

18-ம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் மிகப் பெரியளவில் திடீர் செல்வந்தர்களாக மாறிய போர்த்துகீசிய, ஆப்பிரிக்க வணிகர்களை அந்த அளவுக்கு உயர்த்திவிட்டதில் மெட்ராஸ் பருத்தி ஆடைக்குப் பெரும் பங்குண்டு என்று சொல்லலாம். அதிலிருந்த பல்வேறு நிறங்களால் ஈர்க்கப்பட்டு, அதைப் பல செல்வந்தர்கள் வாங்கத் தொடங்கினார்கள். அந்தக் காலகட்டத்தில் அடிமை வர்த்தகம் அதிகமாகியிருந்த காரணத்தால் ஆப்பிரிக்காவிலிருந்து ஏற்றுமதியான அடிமைகள் வழியாக அது கரீபியன் போன்ற பகுதிகளுக்கும் சென்றது. நைஜீரியாவைச் சேர்ந்த இக்போ இனத்தவர்கள் இந்த ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவர்களை அடிமையாகப் பிடித்துச் சென்று விற்பனை செய்த ஆங்கிலேயர்கள் வழியாகக் கரீபியன் பகுதிக்கும் இந்த ஆடைகள் சென்று சேர்ந்தன என்கிறார் வரலாற்றாசிரியர் பால் கிராஸ்க். அங்கும் அந்த மக்கள் இந்த ஆடையைத் தொடர்ச்சியாக, விடுமுறை மற்றும் விழா நாள்களில் அணிந்துகொள்ளத் தொடங்கினார்கள். 

மெட்ராஸ் ஆடைகள் பிரபலமாகிக்கொண்டிருப்பதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரைப் பயன்படுத்தி லாபம் பார்க்க நினைத்தார்கள். மெட்ராஸ் ஆடைகளின் போலிகளைத் தயாரித்துச் சந்தையில் கலந்துவிட்டு அதன்மூலம் லாபம் பார்த்தனர்.  ஆப்பிரிக்காவில் அதன் பயன்பாடு அதிகமாகத் தொடங்கியவுடனே அதன் விலையும் அதிகமானது. எந்த அளவுக்கு அதிகமானது என்றால், நெய்யப்பட்ட மெட்ராஸ் ஆடைக்கு நிகர் ஒரு மனிதர்.  

மெட்ராஸ் காட்டன்... ஆப்பிரிக்க கறுப்பின வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர்! ஏன்?

அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கப் பெண்கள் தலைமுடியை மறைக்கக் கட்டியிருக்கும் மெட்ராஸ் காட்டன்.

இதன் மதிப்பு அதிகமானவுடன் இதை அடிமை வர்த்தகத்தில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். 19-ம் நூற்றாண்டின் ஆப்பிரிக்க மற்றும் மேற்கத்திய அடிமை வியாபாரிகள் கையில் இது அதிகமாகப் புழங்கத் தொடங்கியது. அன்றைய மெட்ராஸில் நெய்யப்பட்ட ஒரு கைக்குட்டை, அங்கிருந்து லண்டனுக்குச் செல்கின்றது. அந்தக் கைக்குட்டையை லண்டனிலிருந்த ஓர் ஆங்கிலேயர் ஓர் அடிமையை வாங்கப் பயன்படுத்தியிருக்கிறார். 1866-ல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஓர் அடிமையை வாங்கப் பயன்படுத்தப்பட்ட அந்தக் கைக்குட்டை பிரிட்டனில் பிரெடன் என்ற பகுதியிலுள்ள ஹாரிஸ் அருங்காட்சியகத்தில் இன்றளவும் இருக்கிறது. மெட்ராஸ் ஆடையில் நெய்யப்பட்ட ஒரேயொரு கைக்குட்டையைப் பயன்படுத்தி மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஓர் அடிமையை வாங்கும் அளவுக்கு அதன் மதிப்பு இருந்துள்ளது. 

ஆப்பிரிக்காவில் பலரையும் செல்வந்தர்களாக மாற்றிய இந்த மெட்ராஸ் காட்டன், கலாசார ரீதியிலும் மேற்கு ஆப்பிரிக்காவில் முக்கியத்துவம் பெற்றது. நைஜீரிய இக்போக்கள் மற்றும் கானா, செனகல், கேமரூன் போன்ற பகுதிகளில் வாழ்ந்த இதர சிறிய பூர்வகுடி சமூகங்கள் மத்தியில் திருமண நிகழ்வுகளின்போது அணியத்தக்க பெருமைமிகு ஆடையாக இது இருந்துள்ளது. இக்போ இனத்தின் ஒரு துணை இனமான, கலாபாரி குழு இந்த ஆடையை வாழ்க்கைத் தத்துவத்தோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார்கள். இது கருவறை முதல் கல்லறை வரை செல்லும் வாழ்க்கைப் பாதையை இந்த ஆடை உணர்த்துவதாகக் கூறியுள்ளார்கள். அதனால், இந்த ஆடையை இறுதிச் சடங்குகளிலும் பயன்படுத்தியுள்ளார்கள். 

அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களில், அதிலும் கரீபியன் மற்றும் தெற்கு அமெரிக்காவின் சில பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களின் ஆடைப் பழக்கத்திலும் இது மிக முக்கியமான ஒன்றாக இருந்துள்ளது. கரீபியன் பகுதியில் வாழ்ந்த கறுப்பினப் பெண்கள், வெள்ளை இனப் பெண்களைப்போல் கூந்தலைச் சுதந்திரமாக விடக்கூடாது. அந்தக் கொடுமையை அனுபவித்த பெண்கள் தங்கள் கூந்தலை மறைக்க மெட்ராஸ் ஆடையைத்தான் பயன்படுத்தியுள்ளார்கள். காலப்போக்கில், எடை குறைவான மென்மையான ஆடைகளை அணிவதன் மூலம் அவர்கள் வியர்வையால் அவதிப்படாமல் கறுப்பின மக்களால் அதிக நேரம் உழைக்க முடிகிறது என்பதைத் தெரிந்துகொண்டார்கள். ஆகவே அதன் பயன்பாடு அடிமைச் சமூகமாக இருந்த மக்கள் மத்தியில் அதிகமானது. காலப்போக்கில் அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட பல வணிகர்களும் அந்த ஆடைகளை ஊக்குவிக்கத் தொடங்கினார்கள். 

இன்றளவும் மெட்ராஸ் ஆடை கரீபியனில் வாழும் அந்த மக்கள் மத்தியில் முக்கியமான ஆடையாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் தம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின்போது அந்தப் பாரம்பர்ய ஆடையைத்தான் அணிகிறார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட அடிமைகளைப் பற்றிய பல வரலாற்று விளக்கவுரைகளின்போதும் மெட்ராஸ் ஆடைகளைப் பற்றிய பேச்சும் வராமல் இருந்ததில்லை. இன்று, தமிழகத்திலிருந்து பயணித்த மெட்ராஸ் ஆடை உலகம் முழுவதும் சுற்றி ஆப்பிரிக்கக் கறுப்பின வரலாற்றில் தவிர்க்க முடியாத முத்திரையாகப் பதிந்து நிற்கிறது. 

Vikatan