Published:Updated:

"நீ தான் எனக்குப் புள்ள மாதிரி!"

"நீ தான் எனக்குப் புள்ள மாதிரி!"

''பெத்தப் பிள்ளைங்க இவங்களைக் கைகழுவி விட்டுட்டாங்க... ஆனா இவங்க, பிள்ளைகளுக்கு அவமானம்னு நெனச்சு அவங்களைக் காட்டிக்கொடுக்க மறுக்குறாங்க'' தன்னிடம் அடைக்கலமாய் வந்திருக்கும் பாட்டிமார்களின் கதையைச் சொல்கிறார் விண்ணரசி மல்லிகா.

"நீ தான் எனக்குப் புள்ள மாதிரி!"
##~##

கிராமப்புற ஒடுக்கப்பட்ட பெண்கள் முன்னேற்றத்திற்காக, காரைக்குடியில் 'டிராப்ஸ்’ தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார் விண்ணரசி மல்லிகா. பெண்களுக்காக இவர் நடத்தும் 'அருள் மலர்’ முதியோர் இல்லத்தைத் தெரியாத தொண்டுள்ளங்கள் இருக்க முடியாது. ''பத்து வருஷத்துக்கு முன்னாடி, ஒடுக்கப்பட்ட பெண்கள் முன்னேற்றத்திற்காக, மகளிர் குழுக்களை அமைக்கும் பணியில் இருந்தப்ப, நிறைய இடங்களில் ஆதரவற்ற தாய்மார்களைப் பார்த்தேன். அதில் சிலருக்குச் சொந்த பந்தங்கள் இல்லை; சிலருக்கு இருந்தும் இல்லாத நிலை. இவங்களுக்காக ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். 2002-ல் அதற்காக ஆரம்பித்ததுதான் இந்த முதியோர் இல்லம்.

"நீ தான் எனக்குப் புள்ள மாதிரி!"

முதல்ல அஞ்சு பேரை மட்டும் வெச்சு இல்லத்தை ஆரம்பிச்சோம். ஒருநாள் காலை... இல்லத்தின் வாசலில் வயசான ஒரு அம்மா வந்து முடங்கிக் கிடந்தாங்க. பதறிப்போய் அவங்களை உள்ளே தூக்கிக் கொண்டு வந்தோம். அவங்களால பேசவே முடியலை. நாலஞ்சு நாள் போனதும் அவங்களாவே பேச ஆரம்பிச்சாங்க. சொந்த பந்தங்கள் கைகழுவி விட்டதால, கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்க லாம்னு ராமேஸ் வரத்துக்குப் போயிருக்காங்க அந்தம்மா. கடலில் இறங்கப் போன நேரத்துல, சிலர் பார்த்து காப்பாத்தி ஊருக்கு அனுப்பி வெச்சிருக்காங்க.

திருச்சி பஸ்ல ஏறினவங்க காரைக்குடி பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி திக்குத் தெரியாம நின்னு இருக்காங்க. அவங்க மேல பரிதாபப்பட்ட ஆட்டோக்காரர் ஒருத்தர் ஆட்டோவுல ஏத்தி எங்க இல்லத்துல கொண்டாந்து இறக்கிவிட்டுட்டு சத்தமில்லாமப் போயிட்டார். இப்படி தற்கொலை வரைக்கும் போய் திருப்பிவிடப்பட்ட நான்கு பேர் இப்போது எங்கள் இல்லத்தில் இருக்குறாங்க. தங்களோட சோகத்தைச் சொல்லும் இவங்க, எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் ஊரையோ சொந்த விவரங்களையோ சொல்றது இல்லை. சில பேருக்கு தெரிஞ்சா எங்கே திருப்பி அனுப்பிருவோமோங்கிற பயம். சில பேருக்குத்  தங்களோட பிள்ளைகளை அவமானப்படுத்த வேண்டாமேங்கிற பெருந்தன்மை. அதுக்காகச்

"நீ தான் எனக்குப் புள்ள மாதிரி!"

சொந்தப் பெயரை மறைச்சு மாத்திக்கூட சொல்வாங்க. இப்போ இல்லத்துல இருக்குற எட்டுப் பேரும் என் தம்பி அருள்பாண்டியனிடம் என்னைக் காட்டிலும் பாசமாய் இருப்பாங்க. அதற்கும் ஒரு காரணம் இருக்கு'' சஸ்பென்ஸ் வைக்க, தொடர்கிறார் அருள்பாண்டியன். ''2004-ல் எங்கள் இல்லத்தில் இருந்த பாட்டி ஒருத்தங்க திடீர்னு இறந்துட்டாங்க. இங்கு நடந்த முதல் சாவுங்குறதால, உடனடியாக என்ன செய்றதுனு எங்களுக்குத் தெரியலை. சுடுகாட்டில் இந்து

"நீ தான் எனக்குப் புள்ள மாதிரி!"

சாஸ்திரப்படி இறுதிச் சடங்குகளைச் செய்தோம். அங்க, 'கொள்ளி வைக்க ஆண்கள் யாராவது இருந்தா வாங்க’னு  மயானத் தொழிலாளி சொன்னார். நாங்க கிறிஸ்டியன். இருந்தாலும் 'நான் கொள்ளி வைக்கிறேன்’னு சடங்கு செஞ்சு கொள்ளி வெச்சேன். இந்த விஷயம் மத்த பாட்டிகளுக்கும் தெரிஞ்சிருச்சு. அதில் இருந்து 'தம்பி... நான் செத்துட்டேன்னா என் மகன் வரமாட்டான்.  நீ தான் எனக்குப் புள்ள மாதிரி இருந்து எல்லாக் காரியத்தையும் செய்யணும்’னு என்கிட்ட சொல்லி வெச்சிருக்காங்க. இன்னும் சிலபேரு, தனக்குப் பிடிச்ச சேலை, தின்பண்டங்களைச் சொல்லி, 'நான் கண்ணை மூடிட்டேன்னா இதையெல்லாம் எனக்கு வாங்கி வெச்சு படைப்பியா?’னு கேட்டுக்குவாங்க. சில பாட்டிங்க இறந்ததும் அவங்க சொன்னதையெல்லாம் வாங்கி வெச்சு படைச்சிருவேன். இதுவரை ஏழு பேருக்குக் கொள்ளி வெச்சிருக்கேன். முதல் தடவை என்னவோ மாதிரியா இருந்தது. இப்போ இதை ஒரு சேவையாவே செய்யப் பழகிட்டேன்'' என்கிறார் நெகிழ்ச்சியாய்.

உறவுகளால் அறுத்துவிடப்பட்ட உயிர்களுக்கு நிஜ உறவாய் நிற்கிறார்கள் விண்ணரசியும் அருள் பாண்டியனும்!

"நீ தான் எனக்குப் புள்ள மாதிரி!"

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

அடுத்த கட்டுரைக்கு