Published:Updated:

உடல் பருமன் தவிர்க்கும், மன அழுத்தம் விரட்டும் 6 எளிய யோகாசனங்கள் #InternationalYogaDay

உடல் பருமன் தவிர்க்கும், மன அழுத்தம் விரட்டும் 6 எளிய யோகாசனங்கள் #InternationalYogaDay
உடல் பருமன் தவிர்க்கும், மன அழுத்தம் விரட்டும் 6 எளிய யோகாசனங்கள் #InternationalYogaDay

மனத்தையும் உடலையும் ஒன்று சேர்ப்பதே யோகம். யோகாவை குறிப்பிட்ட வயதினர் மட்டும்தான் செய்யமுடியும் என்ற தவறான புரிதல்கள் இருக்கின்றன. எல்லாப் பருவத்தில் உள்ளவர்களும் யோகா செய்யலாம். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த ஆசனங்களைச் செய்யவேண்டும் என்கிற விதிமுறைகள் உண்டு. அதனை ஒரு யோகா மருத்துவரின் ஆலோசனையோடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது புகழ்பெற்ற பழமொழி. அந்தப் பழமொழியை நம்மில் பலரும் மறந்துவிட்டோம். நோயற்ற வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு, செல்வத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்க்கையில் நம்முடைய ஆரோக்கியத்துக்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சிகள் செய்வதில்லை. விளைவு உடல், மன ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுக்கிறோம். எதிர்காலத்துக்காக மருத்துவக் காப்பீடு எடுக்கிறோம். ஆனால், உண்மையான காப்பீடு என்பது இன்று உடல் ஆரோக்கியத்துக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவமே!

உடல் பருமன் தவிர்க்கும், மன அழுத்தம் விரட்டும் 6 எளிய யோகாசனங்கள் #InternationalYogaDay

இன்று சர்வதேச யோகா தினம். `ஒரு நாளில் இருபது நிமிடங்கள் ஒதுக்கி, எளிமையான யோகப் பயிற்சிகளை செய்துவந்தாலே உடலும் உள்ளமும் உறுதியாகும்’ என்கிறார் இயற்கை மருத்துவர் மற்றும் யோகா நிபுணர் யோ.தீபா 

``மனத்தையும் உடலையும் ஒன்று சேர்ப்பதே யோகம். யோகாவை குறிப்பிட்ட வயதினர் மட்டும்தான் செய்யமுடியும் என்ற தவறான புரிதல்கள் இருக்கின்றன. எல்லாப் பருவத்தில் உள்ளவர்களும் யோகா செய்யலாம். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த ஆசனங்களைச் செய்ய வேண்டும் என்கிற விதிமுறைகள் உண்டு. அதை ஒரு யோகா மருத்துவரின் ஆலோசனையோடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

மனம் அமைதி பெறும். வேலைகளை வேகமாகவும் துல்லியமாகவும் திறமையுடனும் செய்ய முடியும். தற்போதுள்ள இளைஞர்கள் பலரும் தங்களுடைய வேலையை அக்கறையோடும் கவனத்தோடும் செய்வதில்லை. தன்னால் திறமையாக வேலை செய்ய முடியாது என்றும் எதிர்மறையாகச் சிந்திக்கின்றனர். யோகப் பயிற்சியை மேற்கொள்ளும்போது நேர்மறை சிந்தனை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி சோர்வின்றி சுறுசுறுப்பாகவும் உடலை வைத்துக்கொள்ளும். பதற்றமின்றி வேலைகளைச் செய்யமுடியும். ஒரு விஷயத்தில் எந்த வகையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்கிற தெளிவும் கிடைக்கும். 

உடல் பருமன் தவிர்க்கும், மன அழுத்தம் விரட்டும் 6 எளிய யோகாசனங்கள் #InternationalYogaDay

நாம் செய்யும் வேலையின் ஒவ்வொரு அசைவுகளுமே ஆசனம்தான். காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கப்போகும்வரை செய்கிற ஒவ்வொரு காரியத்திலுமே யோகா ஒளிந்திருக்கிறது. அதை அறிந்துகொண்டு, கொஞ்சம் கவனம் செலுத்தினாலே போதும் முழுமையான பலன்களைப் பெறமுடியும். உதாரணத்துக்கு, நாம் குளிக்கும்போது தண்ணீரை வாளியிலிருந்து எடுக்கக் குனிகிறோம். அது உத்தானபாதாசனம். தண்ணீரைத் தலையில் ஊற்றிக்கொள்ளும்போது அது தாடாசனம். தியானம் செய்யும்போது உட்கார்ந்திருக்கும் நிலையானது வஜ்ராசனம்.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் யோகா செய்வதற்கு ஏது நேரம் என்று கேட்பவர்கள் கீழே கூறப்பட்டுள்ள ஆறு ஆசனங்களைச் செய்யலாம். இதற்கு ஆகும் நேரம் மிகக் குறைவே. சுமார் இருபது நிமிடம் ஒதுக்கி இதைச் செய்தால் போதும். யோகா செய்யும் இடம் காற்றோட்டமாகவும் இயற்கையான வெளிச்சம் பரவுக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகளை ஒதுக்கித், தளர்வான ஆடைகளை அணிந்து செய்யவேண்டியது அவசியம். 

உடல் பருமன் தவிர்க்கும், மன அழுத்தம் விரட்டும் 6 எளிய யோகாசனங்கள் #InternationalYogaDay

தாடாசனம்

நின்ற நிலையிலேயே எளிதாகச் செய்யக்கூடியது தாடாசனம். நேராக நின்றபடி மூச்சை உள்ளே இழுத்து, குதிகால்களையும் கைகளையும் ஒருசேர மேலே உயர்த்த வேண்டும். பிறகு மூச்சை விட்டுக்கொண்டே குதிகால்களையும், கைகளையும் கீழிறக்க வேண்டும். ஆசனத்தைச் செய்யும்போது பார்வையைக்  குறிப்பிட்ட ஒரு பொருளின்மீது குவிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது நம்முடைய தண்டுவடம் நன்கு வளையும். இந்த ஆசனம் எந்தவொரு வேலையையும் கவனத்தோடு செய்ய உதவிசெய்யும். உடல் சோர்வடையாது. தண்டுவடப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.

உடல் பருமன் தவிர்க்கும், மன அழுத்தம் விரட்டும் 6 எளிய யோகாசனங்கள் #InternationalYogaDayவஜ்ராசனம் 

குழந்தைகள் இயல்பாக உட்காரக்கூடிய ஆசனம் வஜ்ராசனம். கால்களை நீட்டி இயல்பாக உட்கார்ந்தபிறகு வலது காலை மடக்கி வலது தொடைக்குக் கீழேயும் இடது காலை மடக்கி இடது தொடைக்கு கீழேயும் வைத்து, முதுகை நேராக்கி இரு கைகளையும் கால் முட்டிகள் மீது வைக்க வேண்டும். கண்களை மூடி ஐந்து நிமிடம் மூச்சில் கவனத்தைச் செலுத்த வேண்டும். இதைச் செய்தால் உடல்வலி, மனஅழுத்தம் நீங்கும். அதேபோல அஜீரண கோளாறுகளைச் சரிசெய்யும். இந்த ஆசனத்தைச் சாப்பிட்ட பிறகும்கூட செய்யலாம்.

மர்ஜரியாசனம்

கால்களை நீட்டி இயல்பாக உட்கார்ந்த பின் வலது காலை மடக்கி வலது தொடைக்குக் கீழேயும் இடது காலை மடக்கி வலது தொடைக்கு கீழேயும் வைக்க வேண்டும். ஒரு அடி தூரத்துக்கு கைகளை முன்புறமாக சற்று தள்ளித்தள்ளி வைத்து (அதாவது குழந்தை தவழுவதுபோன்ற நிலை) மூச்சை இழுத்தவாறே தலையை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். பின்னர் மூச்சை விட்டபடியே தலையை கீழே தாழ்த்தி தாடையானது கழுத்தில் தொடச்செய்ய வேண்டும். இதைச் செய்யும் மார்பானது விரிவடையும். நெஞ்சுப் பகுதிகளிலுள்ள உறுப்புகள் வலுவடையும். தண்டுவட பிரச்னைகள் ஏற்படாமல் காக்கும்.

உடல் பருமன் தவிர்க்கும், மன அழுத்தம் விரட்டும் 6 எளிய யோகாசனங்கள் #InternationalYogaDayநவ்காசனம்

ஒரு படகு எந்த வடிவத்தில் இருக்குமோ அதுபோன்ற வடிவத்திலிருப்பதே நவ்காசனம். தரையில் செளகரியமாகப் படுக்க வேண்டும். கால்கள் இரண்டையும் சேர்த்து, கைகளை உடலோடு ஒட்டியிருக்குமாறு செய்ய வேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும்போது கைகளையும் கால்களையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இப்படிச் செய்யும்போது வயிற்றில் ஓர் அதிர்வு ஏற்படும். இது வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடலை ஃபிட்டாக வைக்கும். மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். 

உத்தானபாதாசனம்

நேராக நின்று மூச்சை உள்ளே இழுக்கும்போது கைகளை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். மூச்சை விடும்போது கைகளை முன் பக்கமாகக் கொண்டுவந்து தரையைத் தொட வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்க உதவுவதோடு உடல் உறுப்புகளில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். மூட்டுகள், தசைகளை உறுதியாக்கும். இந்த ஆசனத்தைச் செய்யும்போது இதனுடன் சேர்த்து மற்றொரு ஆசனத்தையும் செய்வது அவசியம். அது அர்த்தசக்ராசனம்.

உடல் பருமன் தவிர்க்கும், மன அழுத்தம் விரட்டும் 6 எளிய யோகாசனங்கள் #InternationalYogaDay


அர்த்தசக்ராசனம்

நேராக நின்று மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பின்னர் மூச்சை விடும்போது கைகளைப் பின்பக்கமாகக் கொண்டுசென்று இடுப்பில் வைக்க வேண்டும். எந்தளவுக்கு உங்களால் முடியுமோ அந்தளவுக்குச் செய்ய வேண்டும். 
மேற்கண்ட ஆறு ஆசனங்களையும் தினமும் இருபது நிமிடங்கள் செய்துவந்தால் உடல்நலனும் மனநலனும் மேம்படும்” என்கிறார் யோ.தீபா.  

அரசு யோகா மருத்துவக் கல்லூரியில் காலை 10 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் 6 மணி வரையும்  பொதுமக்களுக்கு இலவசமாக யோகா கற்பிக்கப்படுகிறது. இதில் வரும்முன் காப்போம் அடிப்படையில் நோயின்றி வாழ்வதற்கான யோக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு