Published:Updated:

ஆதலினால் காதல் செய்வீர்!

அழகிய பெரியவன்

''காதல் திருமணம் செய்த தம்பிகளைப் 'புரட்சியாளர்கள்!’ என்று விளித்து வாழ்த்துவது என் வழக்கம். இருவேறு மதங்களைச் சேர்ந்த காதல் இணையருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, என் நண்பன் ஒருவன் வழக்கில் சிக்கிக்கொண்டான். அவனையும், அவர்கள் இருவரையும் மீட்பதற்குக் கடுமையாய்ப் போராட வேண்டி இருந்தது. எதற்கெடுத்தாலும் அரிவாளைத் தூக்குகிற தென்தமிழகத்துச் சமூகத்தின் பெண் ஒருத்தியைக் காதலோடு கூட்டிவந்துவிட்டான் உறவுக்காரரில் ஒருவன். அவர்கள் மீது ஒரு கீறல்கூட விழாமல் காத்து, காவல் நிலையத்திலேயே சுமுகமாகப் பேசி முடித்தோம். நினைக்க நினைக்க இப்படிப் பல சம்பவங்கள் கடந்துபோகின்றன. ஒவ்வொன்று பதறவைப்பவை. ஒவ்வொன்றோ மயிலிறகாய் வருடுபவை.

ஆதலினால் காதல் செய்வீர்!
##~##

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15 அன்று நான் நாளேடுகளைக் கவனமாகப் பார்ப்பேன். நாடு முழுவதிலும் காதலர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்று அவற்றில் பதிவாகி இருக்கும். வேலூர் கோட்டை வளாகத்தில் சந்திக்கவரும் காதலர்களை விரட்டுவதுதான் பிப்ரவரி 14 அன்று காவலர்களின் பிரதான வேலை. சமூகக் கெடுபிடிகளோடு இன்று அரசுகளும், மதக் கருத்தியல்களும்கூட காதலர்களுக்கு எதிராகச் சேர்ந்துகொண்டன. சில ஆறுதல்களும் இல்லாமல் இல்லை. 'கௌரவக் கொலைகளை நிகழ்த்தும் சாதி பஞ்சாயத்துகளின் தீர்ப்புச் செல்லாது’ என, அறிவிக்க மைய அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவரப்போவதாகச் சொல்லி இருக்கிறது!

மேலை நாடுகளைப்போலக் காதல் குறித்து ஒரு திறந்த மனநிலை இந்தியாவில் வாய்க்கப்பெறவில்லை. அண்மையில் நடந்துமுடிந்த சென்னை புத்தகக் காட்சியில், எழுத்தாளர் சந்திப்புக்காகச் சென்று இருந்தேன். அன்று காதல் குறித்து ஆதரவாகக் கருத்துச் சொன்னதற்காக, பெரியவர் ஒருவர் என்னிடம் கடுமையாக விவாதித்தார்.

'சாகுந்தலை’ முதல் பல்வேறு இலக்கிய நூல்களைச் சொல்லி, 'காதல், தோல்வியில்தான் எப்போதும் முடியும், அது மனிதத் தன்மைக்கு எதிரானது (Inhumane)’ என்றார். வடநாட்டு இலக்கியங்கள் வேறு. காதலும், வீரமும்தான் தமிழ் மரபு. அவை இரண்டும் தமிழரின் இரு கண்கள். காதலர் உடன் போவது எமக்கு உடன்பாடு! பழந்தமிழ் இலக்கியங்கள் காதலைப் போற்றுகின்றன. 'சாதியத்தைக் கருவறுக்க ஓர் அருமையான மருந்து, காதல்’ என்கிறார் அம்பேத்கர்.

ஆதலினால் காதல் செய்வீர்!

உண்மையான காதல் புரட்சிகரமானது. அது தன்னம்பிக்கை உடையது. நேர்மறையாகச் சிந்திப்பது. மதம், மொழி, சாதி, பொருளாதார நிலை, அழகு, இன்னபிறவற்றை எல்லாம் காதல் ஒருபோதும் பார்ப்பதே இல்லை. காதல் தடைகளை மீறப் பார்க்கிற காட்டாறு. காதல் உயிர்ப் பயம் அற்றது. நான் அண்மையில் கேள்விப்பட்ட இருவேறு காதல் சம்பவங்கள் என்னைப் பதற்றத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தின.

இருவேறு சமூகங்களைச் சேர்ந்த காதலர்கள் அவர்கள். பெண்ணின் வீடு பெரிய விவசாயக் குடும்பம். இளைஞனோ அந்த நிலங்களில் வேலை செய்யும் ஒரு விவசாயக் கூலி ஆள். இருவரும் ஓடிப்போகும் இரவில் பிடிபட்டுவிட்டார்கள். தன் கண் எதிரில் அடித்து உதைக்கப்படும் காதலனைக் காணச் சகிக்காமல் அந்தப் பெண் தன் நிலத்தின் கிணற்றில் விழுந்து இறந்துபோனாள். இளைஞன் மீதோ கற்பழிப்பு வழக்குப் பொய்யாகப் போடப்பட்டது. பல ஆண்டுகள் வழக்குக்காக அலைந்தபின், தீர்ப்பு நாளில் அவன் பூச்சிமருந்து குடித்துவிட்டான். ஒவ்வொருமுறை கேட்கின்றபோதும் என்னைப் பதறச் செய்யும் சம்பவம் இது.

இன்னொன்றைக் கேட்டபோதோ மகிழ்ச்சிப் பொங்கியது. அகதி முகாமில் இருக்கும் பெண் ஒருத்தியை ஒரு தலித் இளைஞன் காதலித்துவந்தான். இதை அறிந்த அந்தப் பெண்ணின் அக்காள் கணவன், காதலை ஏற்கத் தயார் இல்லை. தமிழ்நாட்டுத் தமிழர் ஆன அவர் இதை எதிர்த்ததற்குக் காரணம், சாதி! உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு, மற்றவற்றை எல்லாம் அங்கேயே விட்டுவிட்டு வந்த ஈழத் தமிழச்சியை மீண்டும் சாதியின் பிடியில் அமிழ்த்தப்பார்க்கிறார் தமிழ்நாட்டுத் தமிழர்! அந்தப் பெண் தன்னுடைய மாமனின் பேச்சைக் கேட்கவில்லை. தோழர்களின் உதவியோடு நடந்தது திருமணம்!

ஆதலினால் காதல் செய்வீர்!

காதல் இன்று மெள்ளமெள்ள மாறிவருவதாகவும்கூடத் தோன்றுகிறது. வயல் வேலைகள் குறைந்து காணாமல் போய்விட்டன. இந்த மரபார்ந்த வேலைத் தளங்களில் வளர்ந்த காதல், இன்று நவீனம் ஆகிவிட்டது. இன்று எங்கள் பக்கம் வளர்ந்துவரும் தொழில்கள் ஆன காலணித் தொழிற்சாலைகளிலேயும், ஆயத்த ஆடைப் பணிமனைகளிலும், நோக்கியா கைப்பேசி உதிரி பாகத் தயாரிப்புத் தொழிலகங்களிலும், கட்டுமானப் பணியிடங்களிலும் காதல்கள் வளர்கின்றன. பேருந்துகள் காதலர் வாகனங்கள் ஆகிவிட்டன. கைப்பேசிகளில் காதலர்கள் தங்களுடைய மனநிலைகளை பரிமாறிக்கொள்ளும் பொருட்டு, திரைப்பாடல்களை பொது இடங்களிலும் தயக்கம் இன்றி ஒலிக்கச் செய்கின்றனர். ரகசியக் காதலர், குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்கின்றனர். திரைப்படங்களும், தொலைக்காட்சியும், இணையதளங்களும் கற்றுத்தரும் தகவல்களால் தூண்டப்பட்டும் காதல்கள் நிகழ்கின்றன. இன்¬றைய இளையோர்கள் இடையே தூண்டப்படும் காதலே (Stimulated Love) அதிகமாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

காலம் மாறினாலும் சூழல் மாறினாலும் தொழில் மாறினாலும் காதல் மட்டும் மாறாமல் தொடர்ந்தபடி இருக்கிறது. காதல் ஒரு மானுட உணர்வு. அது ஒரு பொதுமொழி!'

ஓவியங்கள்: எஸ். இளையராஜா

அடுத்த கட்டுரைக்கு