Published:Updated:

யானை வேட்டையைக் காட்டிக்கொடுப்பதா...? - கொல்லப்பட்ட 500 பாறு கழுகுகள்! #Shocking

க.சுபகுணம்
யானை வேட்டையைக் காட்டிக்கொடுப்பதா...? - கொல்லப்பட்ட 500 பாறு கழுகுகள்! #Shocking
யானை வேட்டையைக் காட்டிக்கொடுப்பதா...? - கொல்லப்பட்ட 500 பாறு கழுகுகள்! #Shocking

ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள போட்ஸ்வானா என்ற நாட்டில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பாறு கழுகுகள் (Vultures) விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன. 

போட்ஸ்வானா வனவிலங்கு சரணாலய வனத்துறை இந்தப் பாறு கழுகுகள் எப்போது கொல்லப்பட்டன என்ற விவரங்களை வெளியிடவில்லை. மூன்று யானைகள் தந்தத்திற்காக அங்கு வேட்டையாடப்பட்டுள்ளன. தந்தம் எடுக்கப்பட்ட பிறகு அந்த யானைகளின் சடலங்களில் கலக்கப்பட்ட விஷம்தான் இந்தக் கொலைக்குக் காரணமென்று தெரியவந்துள்ளது.  

யானை வேட்டையைக் காட்டிக்கொடுப்பதா...? - கொல்லப்பட்ட 500 பாறு கழுகுகள்! #Shocking

வேட்டையாடி, தனக்குத் தேவையான உறுப்புகளை எடுத்துக்கொண்ட பின்னர் சடலங்களில் இந்த மாதிரி விஷம் கலந்துவிட்டுச் செல்வது ஆப்பிரிக்க நாடுகளில் வாடிக்கையாகி வருகிறது. பொதுவாக ஓர் உயிரினம் இறந்துவிட்டாலோ அல்லது இறக்கும் தறுவாயில் இருந்தாலோ, பாறுகள் அந்த உயிரினத்திற்கு மேலே வானத்தில் வட்டமிட்டுக்கொண்டே இருக்கும். வேட்டைக்காரர்கள் யானைகளை வேட்டையாடிய பிறகு அவர்கள் தந்தத்தை எடுக்கும்வரை அவை வானத்தில் வட்டமிட்டுக்கொண்டே அவர்கள் செல்லும்வரை காத்திருக்கும். அவர்கள் சென்றபிறகு இறந்த யானையின் சடலத்தைச் சாப்பிடத் தொடங்கும். அவை இப்படியாக வானத்தில் வட்டமிடுவதால், காட்டுக்குள் ஏற்படும் மரணங்களைத் தெரிந்துகொள்வது வனத்துறைக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது. அதன்மூலம் சம்பவ இடத்திற்கு வரும் வனத்துறையால் வேட்டைக்காரர்களும் சிக்கிக்கொள்கிறார்கள். 

யானை வேட்டையைக் காட்டிக்கொடுப்பதா...? - கொல்லப்பட்ட 500 பாறு கழுகுகள்! #Shocking

இதனாலேயே வேட்டையாடப்பட்ட யானையின் சடலத்தில் விஷத்தைக் கலந்துவிடுகிறார்கள் வேட்டைக்காரர்கள். அதன்மூலம் தாங்கள் வேட்டையாடும் காட்டில் அவை சுத்தமாக இல்லாமல் செய்துவிட்டால் நிம்மதியாக வேட்டையாடலாம் என்பதே அவர்களின் நோக்கம். இதே நோக்கத்திற்காகச் சமீபத்தில் வேட்டையாடப்பட்ட மூன்று யானைகளுடைய சடலங்களில் விஷம் கலக்கப்பட்டன. அதனால், அவற்றைச் சாப்பிட்ட இரண்டு ஆளிப் பருந்துகள் (Tawny eagles) உட்பட 537 பாறு கழுகுகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளன. அதில் 468 வெண்முதுகுப் பாறுகள் (white-backed vultures) இறந்துள்ளன. இவை, சர்வதேச இயற்கைப் பாதுகாப்பில் சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அழியும் விளிம்பிலிருக்கும் பாறு இனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக 17 வெண்தலைப் பாறு (white-headed vultures),  28 ஹூடட் என்ற வகைப் பாறு (hooded vultures) இறந்துள்ளன. இவையும் ஆபத்தான நிலையிலிருக்கும் பறவை இனங்கள்தான். 

யானை வேட்டையைக் காட்டிக்கொடுப்பதா...? - கொல்லப்பட்ட 500 பாறு கழுகுகள்! #Shocking

ஆப்பிரிக்காவில் யானைகள் வேட்டை தொடர்ந்து அதிகமாகி வருகின்றது. 2017-2018 ஆண்டுவரை மட்டுமே 400 யானைகள் அதன் உடல் பாகங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள க்ரூகர் தேசியப் பூங்காவிலும்கூட (Kruger National Park) விஷம் கலந்த யானையின் சடலத்தைச் சாப்பிட்ட 100 பாறு கழுகுகளும் இரண்டு சிங்கங்களும் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Vikatan