Published:Updated:

``வயசு 100... காலை 5 மணிக்கு மேல தூங்கினதில்லை... ஆரோக்கியத்துக்கு என்ன காரணம்னா..!" - `யோகா' நானம்மாள் #InternationalDayofYoga

நானம்மாள்

``90 வருஷத்துக்கும் மேல யோகா செய்றேன். எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து காலையில 5 மணிக்கு மேல நான் தூங்கினதில்லை."

``வயசு 100... காலை 5 மணிக்கு மேல தூங்கினதில்லை... ஆரோக்கியத்துக்கு என்ன காரணம்னா..!" - `யோகா' நானம்மாள் #InternationalDayofYoga

``90 வருஷத்துக்கும் மேல யோகா செய்றேன். எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து காலையில 5 மணிக்கு மேல நான் தூங்கினதில்லை."

Published:Updated:
நானம்மாள்

90 வயதுக்குப் பிறகு ஒருவரின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்குமா. அதற்கு நிகழ்கால உதாரணம், கோயம்புத்தூரைச் சேர்ந்த நானம்மாள். 10 வயதுக்கு முன்பே யோகா கற்க ஆரம்பித்தவர், தான் கற்ற கலையைப் பல லட்சம் பேருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். 90 வயதுக்குப் பிறகு, இவரின் திறமைக்குப் பெரிய அங்கீகாரங்கள் கிடைக்கத் தொடங்கி, கடந்த பத்தாண்டுகளில் நானம்மாள் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். சர்வதேச யோகா தினத்தையொட்டி, நானம்மாளின் வெற்றிப் பயணத்தை அறிந்துகொள்வோம். 

``விவசாய வேலைகளை முடிச்சுட்டு, வீடு திரும்பியதும் என் தாத்தாவும் பாட்டியும் குளிப்பாங்க. அப்புறம் பாய் விரிச்சு, அதில் யோகா செய்வாங்க. அவங்ககிட்டதான் நானும் யோகா கத்துக்கிட்டேன். என் குடும்பத்துல பலரும் யோகா செய்வாங்க. அதில் என் அம்மா முக்கியானவங்க. ஒருநாள், சிலநாள் யோகா பண்ற பழக்கம் எங்களுக்கில்லை. தினம் தவறாம யோகா செய்வோம். அப்படித் தொடர்ச்சியா யோகா செய்து, என் அம்மா 107 வயசு வரை ஆரோக்கியமா வாழ்ந்தாங்க. அவங்க வழித்தோன்றலான எனக்கும் அதே வைராக்கியம்தான்.  

90 வருஷத்துக்கும் மேல யோகா செய்றேன். எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து காலையில 5 மணிக்கு மேல நான் தூங்கினதில்லை. வயித்துல கழிவுகளைத் தங்கவெச்சு, நீண்டநேரம் தூங்குவதாலதான் உடலில் நோய்க் கிருமிகள் பரவுது. நான் காலையில எழுந்ததுமே முதல் வேலையா காலைக் கடனை முடிச்சுடுவேன். பிறகு, வேப்பங்குச்சியில பல் துலக்கிட்டு, ஒரு டம்ளர் சீரகத்தண்ணியைக் குடிப்பேன். பிறகு, யோகா பயிற்சியை ஆரம்பிச்சிடுவேன். இதுவரை எந்த உடல்நலப் பிரச்னைக்கும் நான் ஆஸ்பத்திரிக்குப் போனதில்லை. ஆங்கில மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தினதில்லை. தினம் தவறாம யோகா செய்வது, இயற்கை மருத்துவம் மற்றும் நாட்டு வைத்திய முறைகளைக் கடைப்பிடிப்பதுதான் என் ஆரோக்கியத்துக்குக் காரணம்." - 100 வயதானாலும், நானம்மாள் கூறும் வார்த்தைகள் தெளிவான குரலில் ஒலிக்கின்றன. வீரியமிக்க அந்த வார்த்தைகள் வியப்பையும் ஆச்சர்யத்தையும் கூட்டிக்கொண்டே செல்கிறது.

``வயசு 100... காலை 5 மணிக்கு மேல தூங்கினதில்லை... ஆரோக்கியத்துக்கு என்ன காரணம்னா..!" - `யோகா' நானம்மாள் #InternationalDayofYoga

நானம்மாளுக்கு 6 பிள்ளைகள், 12 பேரக் குழந்தைகள் மற்றும் 11 கொள்ளுப் பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். இவரின் குடும்பத்தில் 63 பேர் யோகா ஆசிரியர்கள். அவர்கள் எல்லோருக்கும் நானம்மாள்தான் குரு. 

``ஒருகட்டத்துல யோகா சொல்லிக்கொடுப்பதே என் பிரதான வேலையாகிடுச்சு. தொடர்ந்து யோகா செய்வதால், என் உடல் ஆரோக்கியமா இருக்குது. அதனாலதான் என் ஆறு குழந்தைகளையும் சுகப்பிரசவத்தில் பெத்தேன். ஆனா, இன்னைக்குப் பெரும்பாலான பெண்கள் ஒரு குழந்தையைக்கூட ஆபரேஷன் செஞ்சு பெத்துக்கிற நிலை இருக்குது. இதுலயே இன்றைய இளைஞர்களின் உடல்நிலை ஆரோக்கியமா இல்லைனு தெரிஞ்சுக்கலாம். எனக்கு மட்டுமல்ல... என் குடும்பத்துல எல்லாப் பெண்களுக்கும் சுகப்பிரசவமே நடந்திருக்கு. தலைகீழா நின்னு செய்யக்கூடிய சிரசாசனத்தை வழக்கமா செய்வேன். அதனால என் நினைவாற்றல் மற்றும் கண் பார்வை நல்லாவே இருக்குது." - ஆச்சர்யங்களை அடுக்கிக்கொண்டே செல்லும் நானம்மாள், இதுவரை 1,600 யோகா ஆசிரியர்களை உருவாக்கியிருக்கிறார்

ஒருநாள் பயிற்சி முதல் நீண்டநாள் தொடர் பயிற்சி கொடுத்தது என இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு யோகா கற்றுக்கொடுத்திருக்கிறார். தினமும் யோகா செய்வதுடன், பயிற்சி கொடுப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக யோகா சொல்லிக்கொடுக்கிறார். 

``வயசு 100... காலை 5 மணிக்கு மேல தூங்கினதில்லை... ஆரோக்கியத்துக்கு என்ன காரணம்னா..!" - `யோகா' நானம்மாள் #InternationalDayofYoga

இவரின் உணவு முறைகள் குறித்து கேட்கையில், ``சளி பிடிச்சா துளசி இலைச் சாற்றில் சிறிது நாட்டுத் தேன் கலந்து குடிப்பேன். வாரம்தோறும் நிலவேம்பு கசாயம் குடிப்பேன்; உணவில் பாகற்காய் சேர்த்துக்கொள்வேன். இதனால் எனக்குக் காய்ச்சல் தொந்தரவு ஏற்படுவதில்லை. மீறிக் காய்ச்சல் வந்தால், வேப்பிலையை ஊறவைத்த நீரில் குளிப்பேன். தவிர வேப்பிலை சாற்றில் தேன் கலந்து குடிப்பேன். இதனால் காய்ச்சல் சரியாகிவிடும். பிரண்டை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணி, வெந்தயம், முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவேன். சிறுதானியங்களை வறுத்து அரைச்சு அதுல செய்ற கஞ்சிதான் தினமும் என் காலை உணவு.

மதியத்துக்கு ஒரு வகை கீரையோடு சாப்பாடு. இரவுல ஒரு வகை பழமும் ஒரு டம்ளர் பாலும்தான். இதுக்கு நடுவுல டீ, காபி எதுவும் குடிக்க மாட்டேன். எண்ணெய்யில் பொறிச்ச எதையும் சாப்பிட மாட்டேன். சர்க்கரை சேர்த்துக்க மாட்டேன். கருப்பட்டி, நாட்டு வெல்லம்தான். சிறுதானிய பலகாரங்களைச் சாப்பிடுவேன்." - தன் ஆரோக்கியத்துக்கான காரணங்களை உற்சாகத்துடன் கூறுகிறார், நானம்மாள். இவர், பல வெளிநாடுகளுக்கும் சென்று யோகா கற்றுக்கொடுத்திருக்கிறார். யோகா கலையை பெரும்பாலானோருக்குப் பயிற்றுவித்ததுக்காக, பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவற்றில், நாரி சக்தி புரஸ்கார் விருது மற்றும் பத்மஶ்ரீ விருதுகள் முக்கியமானவை.  

``எல்லோரும் யோகா கத்துக்கிட்டு, அதைத் தினமும் செய்துவந்தால் ஆரோக்கியமா வாழலாம். வாழ்க்கை முழுக்க யோகா செய்யணும். சாகும் கடைசி நிமிடம் வரை ஆரோக்கியமா இருக்கணும். யாருக்கும் தொந்தரவு கொடுக்காம இயற்கையா என் உயிர் போயிடணும். இதுதான் என் ஆசை" - வைராக்கியத்துடன் கூறி புன்னகைக்கிறார் நானம்மாள். 

வாழ்த்துகள் பாட்டி!