Published:Updated:

கர்ஜிக்கும் நீர்வீழ்ச்சி… சிறைப்பிடிக்கும் பசுமை… வால்பாறை பயண அனுபவம்!

கர்ஜிக்கும் நீர்வீழ்ச்சி… சிறைப்பிடிக்கும் பசுமை… வால்பாறை பயண அனுபவம்!

அற்புதமான இயற்கை அழகு எனக்கு ஒருபோதும் சலிப்பூட்டியதில்லை என ஜான் பெர்கின்ஸ் சொல்கிறார். உங்களுக்கு எப்படி?

கர்ஜிக்கும் நீர்வீழ்ச்சி… சிறைப்பிடிக்கும் பசுமை… வால்பாறை பயண அனுபவம்!

அற்புதமான இயற்கை அழகு எனக்கு ஒருபோதும் சலிப்பூட்டியதில்லை என ஜான் பெர்கின்ஸ் சொல்கிறார். உங்களுக்கு எப்படி?

Published:Updated:
கர்ஜிக்கும் நீர்வீழ்ச்சி… சிறைப்பிடிக்கும் பசுமை… வால்பாறை பயண அனுபவம்!

உலகில் இன்பமயமான விஷயங்களில் ஒன்று, பயணம் போவது!

– வில்லியம் ஹாஸ்லிட்

சென்னை அண்ணாசாலையில் ஏழு சிக்னல்களைக் கடந்து அலுவலகம் செல்லும் எனக்கு, சிவப்பு என்பது தடுத்து நிறுத்திக் காத்திருக்க வைக்கும் வண்ணமாகவே பழகியிருந்தது. ஆனால், இந்தச் சிவப்பு எங்களை வரவேற்றது. ஆம், அடர் சிவப்பு நிறப் பூக்களை ஏந்தியபடி வரவேற்றன பொள்ளாச்சி - வால்பாறை சாலையோர மரங்கள். அந்த வரவேற்பில் அன்றைய காலை மிகுந்த உற்சாகமாகவே எனக்கு விடிந்தது.

கர்ஜிக்கும் நீர்வீழ்ச்சி… சிறைப்பிடிக்கும் பசுமை… வால்பாறை பயண அனுபவம்!

நீண்ட ஏற்ற இறக்கம்கொண்ட அந்தச் சாலையில், கடல் அலைகளில் மிதந்து செல்லும் படகைப்போல எங்கள் வாகனம் சென்றது. வழியில் சாலையோர இளநீர்க்கடையில் சற்று இளைப்பாறிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். சில மணி நேரப் பயணத்தில் உயரமாக வளர்ந்த வனமரங்களின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்ட சில கடைகளும் ஆங்காங்கே மக்கள் கூட்டமும் வாகனங்களும் தென்பட்டன. சாலையின் இடதுபுறம் ஆலமர விழுதுகளுக்கு இடையே `நல்வரவு ஆழியார் அணைப் பூங்கா’ என எழுதப்பட்ட நீலநிற நுழைவாயில். உள்ளே சென்றோம். அணையின் உயரமான கரையின் மீது போடப்பட்ட சாலையில் நின்று பார்க்கும்போது பசுமையான மலைகளும், அதன் அடியில் பரந்து விரிந்து கிடந்த அணையின் நீர்ப்பரப்பும், செழிப்பான தென்னைமரங்களும்... ரம்மியமான காட்சி! சுகமான ஒரு மனநிலை தொற்றிக்கொள்ள அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.

கர்ஜிக்கும் நீர்வீழ்ச்சி… சிறைப்பிடிக்கும் பசுமை… வால்பாறை பயண அனுபவம்!

சமவெளியில் பெரும்பாலும் கோணல்கள் இல்லாத அந்தச் சாலை, மலையின் மீது தன்னை வளைத்து நெளித்துக்கொண்டது. அடர்ந்த காடுகளின் இடையே பல கொண்டை ஊசி வளைவுகளைக்கொண்ட சாலையில் எங்கள் வாகனம் சென்றுகொண்டிருந்தது. இரைச்சல் குறைந்து அமைதி பரவியது. 9-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள அந்தக் காட்சி முனை, மழையால் மலையில் வழிந்தோடிய ஆழியாறு அணையின் நீர்த்தேக்கத்தைக் காட்டியது. சாலை ஓரங்களில் வனவிலங்குகளின் படங்களை ஏந்திய ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தட்டிகள், வளைவுகளில் `ஒலி எழுப்பவும்’ என்ற நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புத் தட்டிகள். எங்கள் வாகனம் மேலேறத் தொடங்கியது. வீசிய காற்றில் ஈரப்பதம், சூரிய ஒளியல் குளிர், மலை பாறைகளின் மீது போர்த்தப்பட்ட பச்சைப் போர்வைபோல் தேயிலைத் தோட்டங்கள். அந்தச் சூழல் மனதை லேசாக்கியது. இறுகிய பிடியிலிருந்து விடுபட்ட உணர்வு வால்பாறையை அடைந்தோம். அங்கு உள்ள மாசற்ற தெளிவான கூழங்கல் ஆற்றில் குளித்துவிட்டு, மாலை வேளையில் வால்பாறை வீதிகளில் சுற்றித் திரிந்தோம்.


அற்புதமான இயற்கை அழகு,
எனக்கு ஒருபோதும் சலிப்பூட்டியதில்லை.


– ஜான் பெர்க்கின்ஸ்


உயரமான கட்டடங்களால் நிறைந்த குறுகிய வானம்கொண்ட நகர வீதிகளில், நிரந்தரமற்ற இலக்கை நோக்கி ஓடும் மனிதர்களை அங்கே காண முடியவில்லை. அவர்கள் வானம் பெரிது. நெருக்கிய கட்டடங்களுக்குள் யாரும் வாழவில்லை. வீசும் காற்றில் விஷமில்லை. திரையரங்குகளோ, மால்களோ இல்லை. பொழுதைப்போக்க அவர்களுக்கு அந்தச் சூழல் போதும். பச்சை, அம்மக்களின் வாழ்வை முழுமையாக ஆக்கிரமித்த வண்ணம். அது அவர்கள் நிராகரிக்க முடியாத இயற்கையின் அன்புக் கட்டளை! அங்கே இயற்கையிடம் நவீனம் தோற்றுப்போயிருந்தது. அவர்கள் வாழ்கிறார்கள்.

கர்ஜிக்கும் நீர்வீழ்ச்சி… சிறைப்பிடிக்கும் பசுமை… வால்பாறை பயண அனுபவம்!

இரவு அங்கே தங்கி மறுநாள் காலை வால்பாறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பாலாஜி கோயிலுக்குச் சென்றோம். உயரமான மலைகளுக்கு நடுவே அமைதியான சூழலில் அமைந்துள்ள அழகான இடம். பிறகு அங்கிருந்து தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே போடப்பட்ட குறுகிய சாலையின் வழியாக எங்கள் பயணம் தொடர்ந்தது. சிறிது தூரத்தில் இடதுபுறம் மலைகளுக்கு இடையேயான பள்ளங்களை நிரப்பிய அகலமான ஆறு எங்களோடு பயணித்தது. சில மணி நேரத்தில் சோலையாறு அடைந்தோம். அங்கே மலைகளுக்கு இடையே காட்டாற்றைச் சிறைபிடித்து பிரமாண்டமாக நின்றது சோலையாறு அணை. பிரமிப்போடு பயணத்தைத் தொடர்ந்தோம். சில கி.மீ தொலைவில் சோதனைச் சாவடி, அதைக் கடந்து கேரள வனப்பகுதிக்குள் நுழைந்தோம். 

கர்ஜிக்கும் நீர்வீழ்ச்சி… சிறைப்பிடிக்கும் பசுமை… வால்பாறை பயண அனுபவம்!

அங்கே தேயிலைத் தோட்டங்கள் இல்லை. பல தலைமுறைகளைக் கடந்து விண்ணுயர வளர்ந்து நிற்கும் மரங்களைக்கொண்ட அடர்ந்த காடுகள் அவை. அந்த முல்லை நிலக் காடுகள் சூரிய ஒளியை முழுமையாக உள்ளே அனுமதிக்கவில்லை. அது ஓரிரு நாளில் பௌர்ணமி காணவிருக்கும் வளர்பிறை இரவைப்போல குளிர்ந்த காட்சியை அளித்தது. பயணம் தொடர்ந்தது. சிறிது தூரத்தில் சாலையோரங்களில் நிறைய வாகனங்கள், மக்கள் கூட்டம், பெரும் நீர்வீழ்ச்சியின் ஒலி. அதிரப்பள்ளியை அடைந்தோம். மூங்கில் மரங்களால் அமைக்கப்பட்ட அழகிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றோம். ஒரு நதி உயரமான மலைப்பாறையைக் கடந்து பெரும்பள்ளத்தில் விழும் பிரமாண்டமான காட்சி. அந்தக் காட்டில் அது கர்ஜித்துக்கொண்டிருந்தது. அதன் ஓசை, அந்தப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. இயற்கை, தன்னுள் எத்தனையோ அற்புதங்களை ஒளித்துவைத்துள்ளது. அவற்றைத் தேடிப் பயணிப்போம்!