Published:Updated:

அகரத்தில் ஓர் ஏகலைவன்!

அகரத்தில் ஓர் ஏகலைவன்!

திருவண்ணாமலையில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்து இருக்கும் அழகான கிராமம் செ.அகரம். அங்குதான் இருக்கிறது அந்தக் குடத்தில் இட்ட விளக்கு இல்லை... சூரியன். அவர் பெயரும் சூரியபகவான்தான். சூரியனின் கதையை அவர் சொற்களிலேயே கேட்போம்.

அகரத்தில் ஓர் ஏகலைவன்!
##~##

''ரொம்ப ஏழ்மையான குடும்பம் சார் என்னோடது. திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் இப்போ பி.பி.ஏ. செகண்ட் இயர் படிக்கிறேன். 12 வயசில் அப்பா ஜெட்லி படங்களுக்குக் கூட்டிட்டுப் போவாரு. நான் தீவிரமான ஜெட்லி ரசிகன் ஆயிட்டேன். 12 வயசிலேயே நிஞ்சாக் செய்ய ஆரம்பிச்சுட்டேன். ப்ளஸ் டூ படிக்கும்போது வீட்டின் வறுமையால் மேற்கொண்டு படிக்க முடியலை. குழந்தைத் தொழிலாளி ஆயிட்டேன்.

ஹிட்டாச்சி ஆப்பரேட்டரா இருந்த என்னை கம்பெனியில் கன்னியாகுமரிக்கு மாத்திட்டாங்க. என்னை இந்த வேலைக்குக் கூட்டிட்டுப் போன மாமா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டார். எனக்கு என்ன பண்றதுனு தெரியலை. மூணுமாசம் பித்துப் பிடிச்ச மாதிரி அலைஞ்சேன். 'எப்படியாவது திரும்பப் படிக்கப் போகணும்’னு மனசுல உறுதியா தோண ஆரம்பிச்சுது. ஆனா என்ன பண்றது, எங்கே இருந்து தொடங்குறதுனு ஒண்ணும் புரியலை. என்னோட நிலையைப் புரிஞ்சுக்கிட்ட நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டாங்க. இதோ... இப்போ பி.பி.ஏ. செகண்ட் இயர் வரைக்கும் வந்துட்டேன்.

ஆனா, தற்காப்புக்கலைகள் மேல எனக்கு இருந்த ஆர்வம் கொஞ்சமும் குறையலை. 2008-ல் என்னோடு வேலை பார்த்த அண்ணன் ஒருத்தர் சிலம்பம்பற்றிப் பேசினாரு. 'சிலம்பம்னா என்னண்ணே?’னு கேட்டேன். 'சிலம்பம்பற்றித் தெரியாத நீ எல்லாம் தமிழனா?’னு நெஞ்சுல உறைக்கிற மாதிரி கேட்டார். அப்புறம் அவரே எனக்குச் சிலம்பம் கத்துக்கொடுத்தாரு. நானும் டி.வி-யில, இன்டர்நெட்ல பார்த்தும் இன்னும் புதுசா என்னென்ன இருக்குனு கத்துக்கிட்டேன். சிலம்பம் மட்டுமில்லை, குங்ஃபூ, ஜிம்னாஸ்டிக், யோகா, கராத்தே, நடனம், நீச்சல்னு பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். ஆனா, எனக்கு எதுக்குமே மாஸ்டர் கிடையாது. எதையுமே முறைப்படி கத்துக்கிட்டதும் இல்லை.

அகரத்தில் ஓர் ஏகலைவன்!

இணையம் மூலமா, புத்தகங்கள் மூலமாக் கத்துக்கிட்ட விஷயங்களை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்குறேன். மாலை 5 மணியில் இருந்து 7 மணி வரைக்கும் சிலம்பத்தில் ஆரம்பிச்சு ஜிம்னாஸ்டிக் வரைக்கும் கத்துக்கொடுக்கிறேன். 15 பேர் என்கிட்டே கத்துக்கிறாங்க. ஆனா, இந்தக் கலைகளை ஓரளவுக்குத் தெரிஞ்சுக்கிட்டேனே தவிர, அடுத்தடுத்தக் கட்டத்துக்கு எப்படிப் போறதுனு தெரியாமத்தான் அகரத்திலேயே முடங்கிக்கிடக்கறேன். நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்கினேன். ஆனால், மாநில அளவுக்கு எப்படிப் போறதுனு தெரியலை.

எது எப்படியோ, இப்போ நான் ஒரு குழந்தைத் தொழிலாளி இல்லை. இங்கே படிக்கிற 15 பேருக்கு மாஸ்டர். இது ஓர் உயரம்னா இன்னும் நான் மேலே மேலே போக வேண்டிய ஏராளமான உயரங்கள் இருக்கு. போவேன்!'' - அழுத்தம் பதிகிறது சூரியபகவான் வார்த்தைகளில்.

அகரத்தில் ஓர் ஏகலைவன்!
அகரத்தில் ஓர் ஏகலைவன்!

ரா.ராபின் மார்லர்

அடுத்த கட்டுரைக்கு