Published:Updated:

இரவில் மீன் பிடித்திருக்கீர்களா? இரவாடிகள்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லும்!

இரவில் மீன் பிடித்திருக்கீர்களா? இரவாடிகள்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லும்!
இரவில் மீன் பிடித்திருக்கீர்களா? இரவாடிகள்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லும்!

யார் அதிக மீன்களைப் பிடிக்கிறார்களோ அவருக்கு உணவின்போது இரண்டு மீன்கள் கூடுதல் என்று எங்களில் மூத்தவர் கூறியதும் அன்றைய இரவின் மீன் பிடித்தல் ஒரு போட்டியாக மாறியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

80-ஸ் மற்றும் 90-ஸ் கிட்ஸ்களுக்கு ஏரி, குளங்களில் மீன் பிடித்த அனுபவங்கள் நிறைய இருக்கும். நானும் ஒரு 90-ஸ் கிட் என்பதால் எனக்கும் ஓரளவுக்கு அந்த அனுபவங்கள் உள்ளன. நாம் வளர வளர நகரங்களும் வளர்ந்தன. நம்மைச் சுற்றியிருந்த, நாம் நீந்தி விளையாடிய, மீன் பிடித்துச் சாப்பிட்ட, பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்து வளர்க்க முயன்ற மீன்கள் என்று அனுபவங்கள் நிறைந்த பெட்டகத்தைப் பரிசளித்த குளங்களும் ஏரிகளும் நகர வளர்ச்சிக்குப் பலியாகின. 

அன்றிரவு அந்த ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தபோது, சிறு வயதில் நீர்நிலைகளைத் தேடித் தூண்டிலைக் கையிலேந்தி அண்ணன்களோடு அலைந்த நினைவுகள் நிழலாடத் தொடங்கின. உடனிருந்த நண்பர், தன் தூண்டிலில் சிக்கிவிட்ட ஒரு மீனைச் சட்டென்று மேலே இழுக்கவே, அதோடு சேர்த்து நானும் நினைவாற்றிலிருந்து கரையேறினேன். 

களக்காடு முண்டந்துறையில் அமைந்துள்ள ஐந்தலை பொதிகைக்கு மலையேற்றம் சென்றுவிட்டு அன்று மாலை இருட்டிய சமயத்தில்தான் கீழே இறங்கியிருந்தோம். காரையார் ஆற்றைக் கடந்து அழைத்துச் செல்லவேண்டிய படகு அடுத்த நாள் காலைதான் வரும். அதனால் அதன் கரையோரத்திலேயே இரவுநேரத் தங்கல். குழுவினர் அனைவருக்குமே மீன் பிடிக்க வேண்டுமென்று ஒத்த சிந்தனை தோன்றியது. நல்லவேளையாக உடன்வந்திருந்த நண்பர் ஒருவர் நார்க்கயிற்றுச் சுருள் ஒன்றையும் சில தூண்டில் முட்களையும் வைத்திருந்தார். சில மீட்டர் நீளத்துக்கு என்ற வாக்கில் ஆளுக்கொன்றாக நார்க்கயிற்றைத் துண்டித்தோம். ஆளுக்கொரு தூண்டிலைக் கையிலெடுத்து அந்தக் கயிற்றில் கட்டிக்கொண்டு ஆற்றங்கரையில் பழுதாகிக் கிடந்த இரண்டு தோணிகளில் வரிசைகட்டி அமர்ந்தோம். 

இரவில் மீன் பிடித்திருக்கீர்களா? இரவாடிகள்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லும்!

என்னுடன் அமர்ந்திருந்தவருக்கு முதல் கெளிறு பிடிபட்ட போதுதான் நினைவாற்றிலிருந்து மேலேறியிருந்தேன். அதே மயக்கத்தோடு தூண்டிலை அதன் வாயிலிருந்து பிடுங்க முயலவே கையைக் கிழித்துக் கொண்டேன். மனிதர் சிரித்துக்கொண்டே சொன்னார், "நான்தான் கெளிறுன்னு சொன்னேனே!" அப்போதுதான் நினைவுக்குவர அசடு வழியச் சிரித்துவிட்டு இருவரும் அடுத்த மீனுக்குக் காத்திருக்கத் தொடங்கினோம். 

அன்று அங்குக் குழுமியிருந்த அனைவருமே கிட்டத்தட்ட 90-களின் காலத்திற்கே மீண்டும் சென்றுவிட்டோம் என்று சொல்வது பொருந்தும். மீண்டும் மீன் பிடிக்கப் போகிறோம் என்ற ஆவலே அனைவரையும் குழந்தைகளாக்கிவிட்டது. அதனால் குழந்தைப்பருவம் ஞாபகம் வர, நினைவாற்றில் மூழ்கத் தொடங்கினேன். அந்தச் சமயத்தில்தான் அருகிலிருந்த நண்பர் கெளிறு மீனைப் பிடித்து மேலே இழுத்தார். என்னதான் சிறுவயதில் மூத்த அண்ணன்மார்களோடு குளங்களுக்குச் சென்றிருந்தாலும் அப்போதுகூட இரவு நேரங்களில் இப்படிக் கும்மிருட்டில் மீன் பிடிக்க அமர்ந்ததில்லை. 

பகல் நேரங்களில், மீன் தூண்டிலில் சிக்கி விட்டால் தூண்டிலில் ஏற்படும் சலசலப்பும் மெல்லிய இழுவையும் நமக்குக் காட்டிக் கொடுக்கும். அதோடு ஓரளவுக்குத் தெளிந்த நீரில் சில சமயங்களில் மேலே வரும் மீன்கள் நம் கண்ணுக்கே தெரியும், படக்கென்று மேலே இழுத்துவிடுவோம். ஆனால், இரவுநேரங்களில் உணர்வுகளுக்கு மட்டுமே வேலை. கண்களுக்கு எந்த வேலையுமில்லை. எந்தவிதத் தடியும் இல்லாமல் வெறுமனே நார்க்கயிற்றில் தூண்டிலை மட்டும் கட்டி, அதில் மண்புழுவைச் செருகி ஆற்றுக்குள் வீசிவிட்டுக் காத்திருக்க வேண்டும். கயிற்றைப் பிடித்திருக்கும் விரல்களில் மெல்லிய அதிர்வையோ அசைவையோ உணர்ந்தாலும் அடுத்த நொடியே மேலே இழுத்துவிட வேண்டும். 

மீன் ஏதும் சிக்குகிறதா என்று தூண்டில் மீதே கவனம் செலுத்திக் காத்திருந்தேன், காத்திருந்தேன், காத்துக் கொண்டேயிருந்தேன். அகப்பட்ட உணர்வு ஏற்பட்ட சமயங்களில் மேலே இழுத்த போதெல்லாம் ஒன்றும் சிக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. மீனைப் பிடிக்கத் தூண்டிலில் மண் புழுவைச் செருகி முள் தெரியாமல் முழுதாக மறைத்து நீருக்குள் வீசிவிட்டு நான் காத்திருந்தேன். சிக்கியதுபோல் உணர்வு வர மேலே இழுத்தால், தூண்டில் மட்டுமே இருக்கும். மீனும் இருக்காது, முள்ளோடு செருகி வைத்திருந்த மண் புழுவும் இருக்காது. மண் புழுவை வைத்து அதை ஏமாற்ற நான் காத்திருந்தால், நேக்காகப் புழுவைச் சாப்பிட்டுவிட்டுத் தப்பித்து மீன்கள் என்னை ஏமாற்றி விடுகின்றன. 

இரவில் மீன் பிடித்திருக்கீர்களா? இரவாடிகள்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லும்!

என்னருகே அமர்ந்திருந்த நண்பர் இந்த வித்தையில் கைதேர்ந்தவராக இருந்தார். அவர் தூண்டிலை வீசிய சில நிமிடங்களிலேயே இரண்டு கெளிறுகளையும் ஒரு தேளியையும் பிடித்துவிட்டார். கெளிறு மீன் மேற்பகுதி சிறிது கருத்தும் அடிப்பகுதி நல்ல வெந்நிறத்திலும் இருக்கும். அதைக் கெழுது, கெளுத்தி என்றும் அழைப்பார்கள். அதன் பக்கவாட்டில் கூர்மையான முட்கள் நீட்டிக் கொண்டிருக்கும். வாய்க்குள்ளிருந்து தூண்டிலை வெளியே எடுக்கையில், எச்சரிக்கையோடு இல்லையென்றால் கையைக் கிழித்துக் கொள்வோம். அப்படித்தான் அவர் பிடித்த முதல் கெளிறு என் கையைப் பதம் பார்த்தது. தேளி, கெளிறு மீனைவிடக் கொஞ்சம் பெரியதாக இருக்கும். உருவத்தில் கிட்டத்தட்ட அதைப் போலவேதான். நிறம் நல்ல கருஞ்சாம்பல் நிறத்திலிருக்கும். 

பகல் சமயங்களில் பிடிபடும் மீன்களைப் போலவே இரவு நேரங்களில் பிடிபடக்கூடிய இரவாடி மீன்களும் இருக்கின்றன என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன். கெளிறு, விலாங்கு, வாழை, தேளி போன்றவை பகல் சமயங்களிலும் சில சமயங்களில் இரவாடிகளாகவும் இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் சிக்கலாம். ஒவ்வொருவரும் தலா நான்கைந்து மீன்களைப் பிடித்தால் அன்றைய இரவு உணவுக்கு மீன் குழம்பே சமைக்கலாம் என்ற நிலை. யார் அதிக மீன்களைப் பிடிக்கிறார்களோ அவருக்கு உணவின்போது இரண்டு மீன்கள் கூடுதல் என்று எங்களில் மூத்தவர் கூறியதும் அன்றைய இரவின் மீன் பிடித்தல் ஒரு போட்டியாக மாறியது. நீண்ட நேரம் காத்திருந்த என் தூண்டிலில் ஒரு மீன் சிக்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு என் கையால் பிடித்துள்ள முதல் மீன். வெண்மை கலந்த பிங்க் நிறத்திலிருந்த அது கடலில் வாழும் பன்னா மீன் போலவே இருந்தது. ஒரே வேறுபாடுதான். பன்னா அளவில் பெரியதாக இருக்கும். இது என் உள்ளங்கையைவிடச் சற்றுக் குறைந்த அளவுதான் இருந்தது. 

நண்பர்களிடம் விசாரித்தேன். எங்களுடன் மலையேற்றம் வந்திருந்த காணி பழங்குடியினத்தைச் சேர்ந்த மூத்த மனிதர், "இதன் பெயரும் பன்னாதான். இது ஆற்றுப் பன்னா வகை" என்று கூறினார். அதைக் கூறியவரின் முகத்தில் ஆச்சர்ய ரேகை படர்ந்தது. அதன் காரணத்தைக் கேட்டபோது, "பன்னா, பகல் நேரத்தில் உலவும் மீனாயிற்றே. இது எப்படி இந்த நேரத்தில் பிடிபட்டது என்றுதான் ஆச்சர்யமாக இருந்தது" என்று கூறினார். உடனே எனக்கொரு சந்தேகம், "பகலில் உலவும் என்றால் இரவில் என்ன செய்யும்?" 

இரவில் மீன் பிடித்திருக்கீர்களா? இரவாடிகள்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லும்!

"இரவில் ஆற்றோரங்களில் அல்லது குளத்தோரங்களில் அமைதியாக அசையாமல் நின்று தூங்கும்" என்றார். மீண்டும் ஒரு சந்தேகம் தோன்றியது, "என்ன மீன்கள் தூங்குமா! இமைகளே இல்லாத மீன்கள் எப்படித் தூங்கும்? ஆமாம், முதலில் மீன்களுக்கு இரவு பகல் தெரியுமா!" 

"ஏன் தூங்காது. தூங்குவதற்கு இமைகள் வேண்டுமா என்ன! கரையோரங்களில் அசையாமல் நிற்கும் மீன்களைப் பார்த்திருக்கிறீர்களா! அவை அனைத்துமே அசையாமல் நின்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் தூங்குவதாகக் கூறுகிறோம். தூக்கம் என்பதே ஓய்வுதானே. அதிகபட்சமாக மீன்கள் 9 முதல் 10 மணிநேரம் வரைகூட இந்த மாதிரி ஓய்வெடுக்குமாம். கெளிறு, தேளி போன்ற மீன்கள் பகல் வேளையில் ஆற்றின் ஆழத்திற்குச் சென்றுவிடும். அங்கு கும்மிருட்டாக இருப்பதால் அங்கே ஓய்வெடுத்துக் கொள்ளும். இரவில் மேலே வந்து ஆங்காங்கே நீர்மட்டத்திற்கு மேலே சுற்றும் பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடும்" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க நான் இடைமறித்தேன், "அப்படியென்றால் இவ்வளவு நேரமாக அவை நீருக்கு மேலே தவ்வித் தவ்விக் குதித்துக் கொண்டிருந்தது பூச்சி வேட்டைக்காகத் தானா!" 

இரவில் மீன் பிடித்திருக்கீர்களா? இரவாடிகள்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லும்!

"ஆம், அதேபோல் பன்னா போன்ற மீன் வகைகள், பாண்டி மீன் போன்றவை பகலில் உலவும்; உணவும் தேடும். இரவில் ஓய்வெடுக்கும். அவற்றுக்கும் ஓய்வு தேவையல்லவா! அதனால்தான் இது எப்படி இந்நேரத்தில் பிடிபட்டது என்ற சந்தேகம் வந்தது" என்று விளக்கினார். நாங்கள் மீன்பிடிக்கத் தொடங்கிய சமயத்தில் ஒரே இடத்தில் அதிகமான தூண்டில்களை மண் புழுக்களோடு நீரில் வீசியதால் பல இரவாடி மீன்கள் ஒரே இடத்தில் கூடத் தொடங்கிவிட்டன. ஒருவேளை அதனால் ஏற்பட்ட சலனம் அந்தப் பன்னா மீனையும் தொந்தரவு செய்திருக்கலாம், அந்தச் சமயத்தில் அதன் கண்ணில்பட்ட புழுவைப் பிடிக்க முயன்று என் தூண்டிலில் மாட்டியிருக்கலாம் என்று அதுகுறித்துப் பேசுகையில் எங்களுக்குள் ஓர் 'அனுமான'த்திற்கு வந்தோம். அதைத் தொடர்ந்து மீன்பிடிப் படலமும் தொடர்ந்தது. 

அடுத்ததாக என் தூண்டிலில் மாட்டியது பூந்தி மீன். மற்றவர்களுக்குப் பொறை மீன், கெளிறு, தேளி என்று தொடர்ச்சியாக மாட்டிக் கொண்டிருந்தது. ஆனால், எனக்கு இந்தமுறை மாட்டியதும் புதிதாகத்தானிருந்தது. அப்படியே கடல் வாழ் மீன் வகையான உழுவை மீன் மாதிரியே கட்டை விரல் அளவில் இருந்தது. அது புட்டு போல் மென்மையாக்கவும் சுவையாகவும் இருக்கும். ஒருவேளை இதுவும் அப்படித்தானோ என்று தோன்றவே கேட்பதற்காக மூத்தவரைப் பார்க்கத் திரும்பினேன். மனிதருக்குப் புரிந்துவிட்டது, "ஆம், இதுவும் சாப்பிட மிருதுவாகத்தானிருக்கும்" என்று கூறினார். 

இரவில் மீன் பிடித்திருக்கீர்களா? இரவாடிகள்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லும்!

இப்படியாக இரவுநேர மீன் பிடித்தல் அன்றைய இரவுச் சாப்பாட்டுக்கு பொறை மீன், கெளிறு, பூந்தி, வாழை, தேளி, விலாங்கு, பன்னா என்று பல மீன் வகைகளைக் காரையார் கொடையளித்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. எனக்குப் பிடித்தது என்னவோ பூந்திதான். பிடிபட்ட மீன்கள் இரவுச் சாப்பாட்டுக்கு மட்டுமின்றி அடுத்த நாள் காலை உணவுக்கும் தாக்குப்பிடிக்கவே, ஒரு வாரம் காட்டுப் பயணத்தை முடித்துவிட்டு இறங்கிய எங்களுக்குக் கிட்டத்தட்ட அந்தக் காடே விருந்தளித்து வழியனுப்புவது போன்ற உணர்வு ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை மீன் பிடிக்கும் வாய்ப்பளித்த காரையார் ஆற்றுக்கு நன்றி சொல்லியவாறு, பகல் பொழுது தொடங்கும் சமயத்தில் வந்து சேர்ந்த படகில் ஆற்றைக் கடந்து இறங்கத் தொடங்கினோம். 

மறுகரைக்குச் சென்று இறங்கும்போது ஏக்கத்தோடு காரையாரின் அக்கரையிலிருந்த காட்டையே பார்த்தவாறு நின்றிருந்தேன். பசி தீர உணவளித்த அன்னை, "பத்திரமாகப் போய் வா" என்று அன்போடு வழியனுப்புவது போன்றதோர் உணர்வு.

ஆம், காடுதான் நம் தாய். பூமியின் அனைத்து உயிரினங்களுக்குமான மூதாய்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு