Published:Updated:

பெண் காவலர், ஆண் சமையல் கலைஞர்... மகாராஷ்டிர பாடநூல் கழகம் அசத்தல்!

இரண்டாம் வகுப்புக்கான பாடநூலில், பெண் காவலரையும் ஆண் சமையல் கலைஞரையும் பிரசுரித்து பாலின ஸ்டீரியோடைப்களை உடைத்துள்ளது 'பால்பாரதி'.

பெண் காவலர், ஆண் சமையல் கலைஞர்... மகாராஷ்டிர பாடநூல் கழகம் அசத்தல்!
பெண் காவலர், ஆண் சமையல் கலைஞர்... மகாராஷ்டிர பாடநூல் கழகம் அசத்தல்!
பெண் காவலர், ஆண் சமையல் கலைஞர்... மகாராஷ்டிர பாடநூல் கழகம் அசத்தல்!

'அப்பாவுக்கு நான்கு, அம்மாவுக்கு மூன்று' என்று சொல்லும் ரைம்கள், இளவரசன் காப்பாற்றக் காத்திருக்கும் இளவரசிகள் பற்றிய ஃபேரி டேல்கள், 'நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா, சமையலறையில் இருந்த அம்மாவிடம்' என்று விவரிக்கும் கதைகள் என, குழந்தைகளுக்கு நம் பாடங்களும் புத்தகங்களும் காட்டு உலகம் ஆண்மயமானதாகவே இருக்கிறது. கரும்பலகையான அவர்களின் மனங்களில், 'ஆண்கள் பெரிய வேலைகளுக்குச் செல்வார்கள், பெண்கள் வீட்டை கவனித்துக்கொள்வார்கள்' என்று முதல் எழுத்து எழுதப்படுகிறது. இப்படி, 'ஆண்கள் பலமானவர்கள், பெண்கள் பலவீனமானவர்கள்' என்ற எண்ணம் பள்ளியில்கூட வலுப்படுத்தப்படும் நிலையில், ஆண், பெண் சமத்துவத்தை பின் அவர்களிடம் எப்படி, எப்போது வலியுறுத்துவது?

இந்நிலையில், சமுதாயத்தில் நிகழ்த்த விரும்பும் எந்தவொரு மாற்றத்துக்கான முதல் புள்ளியையும், குழந்தைகளிடத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பதை உணர்ந்த மகாராஷ்டிர மாநிலத்தின் பள்ளி பாடநூல் கழகமான 'பால்பாரதி(Balbharati)' எடுத்திருக்கும் முயற்சி, வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. குழந்தைகளின் பாட புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களிலும், கருத்துகளிலும் ஆண் - பெண் சமத்துவத்தை நிறுவியுள்ளதுடன், பெண்களை திறன்மிக்க பாலினமாகக் காட்சிப்படுத்தி அவர்களுக்கான மரியாதையை வழங்கியுள்ளது. 

இரண்டாம் வகுப்புக்கான பாடநூலில், பெண் காவலரையும் ஆண் சமையல் கலைஞரையும் பிரசுரித்து பாலின ஸ்டீரியோடைப்களை உடைத்துள்ளது 'பால்பாரதி'. 'ஆண்களுக்கான வேலை என்று எதுவும் இல்லை, எல்லா வேலைகளையும் பெண்களாலும் செய்ய முடியும். மேலும், சமையல் வேலை என்பது ஆண்களும் பகிர்ந்துகொள்ள வேண்டியது' என்பதை நூறு வார்த்தைகளில் சொல்வதைவிட வலிமையாக உணர்த்துகிறது இந்தப் புகைப்படம். மேலும், ஆணும் பெண்ணும் அடுத்தடுத்து அமர்ந்து காய்கறிகளை நறுக்கும் படம், டிராஃபிக் கான்ஸ்டபிளாகவும் டாக்டராகவும் பெண்களின் படங்கள், வீட்டில் துணிகளை அயர்ன் செய்யும் ஆணின் புகைப்படம் என, பல படங்களையும் ஆண் - பெண் சமம் என்பதை பிஞ்சு நெஞ்சங்களில் இயல்பாகப் பதியவைக்கும் விதமாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியுள்ளது 'பால்பாரதி'.

பெண் காவலர், ஆண் சமையல் கலைஞர்... மகாராஷ்டிர பாடநூல் கழகம் அசத்தல்!

'பால்பாரதி'யின் இயக்குநர் சுனில் பிடிஐயிடம், 'சமூக மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் குழந்தைகளுக்குச் சொல்லக்கூடிய கருவி இந்தப் புத்தகங்கள்தாம் என்பதை மனதில்வைத்து  புதிய பாடல்நூல்களை உருவாக்கினோம்' என்று கூறியிருக்கிறார். ஆசிரியர்களும் இதை வரவேற்றுள்ளனர். 

இனி ஹீரோக்களுக்கு சம விகிதத்தில் ஷீரோக்களும் உருவாவார்கள்! இந்த மாற்றத்தைத்தான் கல்வியாளர்களும் கல்விச் செயற்பாட்டளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏனெனில் கல்வி என்பது பாலின, பொருளாதார, நிற, உருவ அடையாளப் பேதமற்ற வகையில் உருவாக்க வேண்டியது அவசியம். அதைப் படிக்கும் மாணவர்களில் இந்தப் பிரிவுகளில் உள்ளவர்கள் ஒரு வகுப்பில் பலர் இருப்பார்கள். உதாரணமாக, கறுப்பு நிறத்தைக் கொண்டவர்களைக் கேலி செய்யும் விதமாக பாடம் எழுதப்பட்டிருந்தால், அந்த வகுப்பில் உள்ள கறுப்பு நிற மாணவர்கள் உளவியலாகப் பாதிப்படைவார்கள். அதேபோலத்தான் பெண்களுக்கான வேலை இதுதான் எனவிருக்கும்போது, அதைப் படிக்கும் ஆண் பிள்ளைகளின் மனத்தில் அது ஆழமாகப் பதிந்துவிடும், அவர்கள் பெரியவர்களானதும், சமையல் உள்ளிட்ட வேலையை, பெண்களிடமிருந்து பகிர்ந்துகொள்ளாதிருப்பது குறித்து எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாதவர்களாக இருப்பார்கள். இந்தச் சூழலை நீட்டிக்கச் செய்வதா கல்விக் குழுவின் வேலை. அதற்கு மாறாக, மகாராஷ்டிரா கல்வித் திட்டத்தில் உருவாக்கியுள்ள மாற்றம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியான செயல்திட்டம். அது நம் நாடு முழுக்க பரவ வேண்டும் என்பதே கல்விச் சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்பு. 

Vikatan