Published:Updated:

அட்டை நம்மை கடிக்கும்போது அப்படியே பிடுங்கக்கூடாது... ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அட்டை நம்மை கடிக்கும்போது அப்படியே பிடுங்கக்கூடாது... ஏன்?
அட்டை நம்மை கடிக்கும்போது அப்படியே பிடுங்கக்கூடாது... ஏன்?

ஒரு காட்டைப் பராமரிக்க யானை, புலி போன்ற பேருயிர்களின் பங்கு மிக முக்கியம். அதுபோல அந்தக் காட்டுக்கு வருபவர்களை மிரட்டும் இதை காட்டின் அரண் என்றுகூடச் சொல்லலாம். அந்த அரண்தான் அன்று காடேறிக் கொண்டிருந்த எங்களைப் பாடாய்ப் படுத்தியது.

ங்காங்கே திட்டுத் திட்டாக அடர்த்தியான சோலைக் காடுகள். திரும்பிய திசையெங்கும் புல்வெளிக் காடு. நினைத்தால் பெய்யும் மழை. பஞ்சு போல நீரை உறிஞ்சிக் கொண்டு எந்நேரமும் ஈரமாகவே இருக்கும் நிலம். இதெல்லாம் இருந்தால் அந்த இடம் எப்படியிருக்கும்! 

பல்லுயிர்ச்சூழல் மிகுந்து காணப்படும். அதிலும் சிற்றுயிர்களின் பன்மை அங்கு அதிகமாகவே இருக்கும். பறவைகளுக்குப் பஞ்சமே இருக்காது. காட்டு மாடுகளின் சொர்க்கமாக அது இருக்கும். திரும்பிய திசையெங்கும் காணப்படும் ஊசிப் புல், கருணைக் கீரை, பட்டைப் புல் போன்ற பல்வகையான ருசியான புற்களை மேய்ந்துகொண்டு, மெத்தென்ற புல் மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டு ராச வாழ்க்கை வாழும். ஆம், காட்டு மாடுகளுக்கு அது சொர்க்கம்தான். 

ஆனைமலை புலிகள் காப்பக எல்லைக்கு உட்பட்ட ஒரு மலையை ஏறிக் கொண்டிருந்த சமயம், ஒரே இடத்தில் சுற்றியும் அருகருகே கிட்டத்தட்ட பதினாறு காட்டு மாடுகள் படுத்து ஓய்வெடுத்த தடங்கள் தெரிந்தன. புற்கள் நன்கு நசுங்கி மாடுகளின் அளவுக்கு ஏற்ப இடைவெளி ஏற்பட்டிருந்தது. அதுவே அவற்றின் ஒய்யாரமான உறக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பாம்புகளுக்குச் சொல்லவே வேண்டாம். மழை பெய்து முடித்தவுடன் வெளியே வரும் தவளைகளைத் தேடித் தேடி ருசிக்கத் துடியாய் துடிக்கும். இவை அனைத்துமே அழகுதான். ஆனால், அதைவிட அழகான ஒரு விஷயம் மழைக்காட்டுக்கு உண்டு. அழகானது என்பதைவிட அதுதான் அந்தக் காட்டுக்கு அரண் என்றுகூடச் சொல்லலாம். 

அட்டை நம்மை கடிக்கும்போது அப்படியே பிடுங்கக்கூடாது... ஏன்?

ஒரு காட்டைப் பராமரிக்க யானை, புலி போன்ற பேருயிர்களின் பங்கு மிக முக்கியம். அதுபோல அந்தக் காட்டுக்கு வருபவர்களை மிரட்டும் இதை, காட்டின் அரண் என்றுகூடச் சொல்லலாம். அந்த அரண்தான் அன்று காடேறிக் கொண்டிருந்த எங்களைப் பாடாய்ப் படுத்தியது. அவற்றைச் சொல்லிக் குற்றமில்லை. கைக்கு எட்டிய தூரத்தில் சுவைமிக்க உணவை வைத்துவிட்டுச் சாப்பிடவே கூடாதென்று கைகளைக் கட்டிக்கொண்டு யார்தான் அமர்ந்திருப்பார்! அப்படித்தான், நாங்கள் கடந்துசென்ற பாதையில் நீக்கமற நிறைந்திருந்த அட்டைகளும் அடங்கியிருக்க முடியாமல் எங்கள் ரத்தத்தைக் குடிக்க மண்ணிலிருந்து வெளியேறத் தொடங்கின. பொதுவாக அட்டைகள், அவற்றைக் கடந்து செல்லும் உயிரினத்தின் உடல் சூடு அல்லது வியர்வையை உணர்ந்து நெருங்கிவந்து ஒட்டிக்கொள்ளும். 

மழைக்காடுகளில் வெகு சாதாரணமாகக் காணப்படும் இந்த அட்டைகள் அவ்வளவு ஆபத்து இல்லையென்றாலும் பலராலும் ஒருவித பயத்தோடேதான் பார்க்கப்படுகின்றன. மழைக்காடுகளில் புதிதாக மலையேறிச் செல்பவர்கள் புலி, யானை போன்றவற்றுக்கு அச்சப்படுகிறார்களோ இல்லையோ நிச்சயமாக அட்டைகளுக்கு அஞ்சாமல் இருக்கமுடியாது. ஓர் அட்டை நம் உடலில் ஒட்டிக்கொண்டால் சுமார் இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை நம் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கும். ஆனால், அதில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவை அப்படியொன்றும் அளவுக்கு அதிகமாக ரத்தத்தைக் குடித்து ரத்த வங்கி தேடிச் செல்லும் அளவுக்கு நம்மை வைக்காது. 

மலையேறிக் கொண்டிருந்தவன் ஓரிடத்தில் இளைப்பாற அமர்ந்தேன். பாறை வழியாக ஊற்றெடுத்த மிகச் சிறிய நீரூற்று அது. நீர் ஊற்றெடுத்த பாறையின் மீதுதான் அமர்ந்திருந்தேன். அமர்ந்ததற்குக் காரணமும் இருந்தது. நீண்டநேரமாக வலதுபக்கப் பாதத்தில் பல இடங்களில் நறுக் நறுக்கென்று ஏதோ கடிப்பதுபோன்ற உணர்வு. நேரம் செல்லச் செல்ல அந்த உணர்வு வலியாக மாறிக் கொண்டிருந்தது. அதனால் கால்களைப் பரிசோதிக்கவே அமர்ந்தேன். உடன் வந்திருந்தவர்களும் அமர்ந்தார்கள். அந்த வலிக்குக் காரணம் அட்டைகள்தானென்று ஷூவைக் கழட்டப் போகும்போதே தெரிந்துவிட்டது. கால்சட்டையை மேலே தூக்கியதும் சாக்ஸுக்கு மேலே இரண்டு அட்டைகள் ஒரே இடத்தில் அருகருகே ஒட்டிக் கொண்டிருந்தன. எத்தனை நேரமாக என் ரத்தத்தைப் புசித்துக் கொண்டிருந்தன என்று தெரியவில்லை. இரண்டுமே தம் சராசரி எடையைவிடச் சுமார் மூன்று மடங்கு பெருத்திருந்தன. அட்டைகளைப் பிடுங்கியெறிய அவற்றுக்கு நெருப்பூட்ட வேண்டுமென்று கேள்விப்பட்டுள்ளேன். அதை முன்னிட்டே கிளம்பும்முன் லைட்டரை எடுத்து வைத்திருந்தேன். அதற்குக் கொஞ்சம் அருகில் நமக்குச் சூடு வெகுவாகத் தெரியாத தொலைவில் வைத்து நெருப்பு மூட்டினால் சூடு தாங்காமல் மடிந்து விழும் என்று நண்பர் கூறியிருந்தார். அந்த லைட்டரைக் கையில் எடுத்தேன். 

உடன் வந்திருந்த நபர் தடுத்தார். அவர் தடுத்ததன் காரணத்தைக் கேட்டறிந்தபோது கொஞ்சம் திடுக்கென்றுதான் இருந்தது. அட்டைகளைச் சூடேற்றுவதும் கைகளாலேயே பிடுங்கி எறிவதும் கூடாது. அப்படிச் செய்தால், அவை அதுவரை குடித்துக் கொண்டிருந்த ரத்தத்தை அப்படியே துப்பிவிட்டு இறந்து கீழே விழுமாம். அவற்றின் எச்சில் கலந்த ரத்தம் மீண்டும் நம் உடலிலேயே சேர்ந்தால் அது தொற்றுகளுக்கு வழி வகுக்கலாம். அவற்றைப் பிரித்தெடுக்கையில் அப்படி நடக்காமல் இருக்க உப்புதான் சிறந்த தீர்வு அல்லது மூக்குப்பொடியைத் தூவலாம். அட்டைகளின் மீது உப்பு தூவினால் உடலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக, அங்கிருந்து போனால் போதுமென்று அதை நகர வைக்கும். அதனால், நம் ரத்தத்தைக் குடிப்பதை நிறுத்தித் தாமாக வாயை எடுத்துக்கொண்டு சுருண்டு கீழே விழுந்துவிடும். சில சமயங்களில் எரிச்சல் தாங்காமல் உயிரிழக்கவும் செய்யும். ஆனால், நெருப்பு ஏற்படுத்தும் அளவுக்கு திடீர் சிகிச்சை இருக்காது என்பதால் நமக்கு ஆபத்தில்லை. தடுத்த காரணத்தைத் தெளிவுபடுத்திக்கொண்டே மனிதர் தான் கொண்டுவந்த உப்புப் பையைப் பிரித்துக் கொடுத்தார். அவர் சொன்னதுபோலவே உப்பு தூவியதும் மென்மையாய் துவாரத்திலிருந்து மூன்று தாடைகளையுடைய தன் வட்டமான வாயைத் தானே எடுத்துக்கொண்டு சுருண்டு கீழே விழுந்தன. 

அட்டை நம்மை கடிக்கும்போது அப்படியே பிடுங்கக்கூடாது... ஏன்?

அட்டைகள் இரண்டும் விழுந்ததுதான் தாமதம், அந்தத் துவாரங்கள் வழியாக ரத்தம் பீறிட்டுக்கொண்டு நிற்காமல் வெளியேறத் தொடங்கியது. அது அப்படித்தான். அட்டை கடித்தால் ரத்தம் அவ்வளவு சீக்கிரத்தில் நிற்காது. அவை நம் உடலைத் துளைத்தவுடன் ரத்தம் குடிக்கத் தொடங்கும்முன் தன் எச்சிலை உடலுக்குள் செலுத்தும். அதன் எச்சிலில் ரத்தம் உறையாமல் பார்த்துக்கொள்ளும் பேக்டீரியா இருக்கும். ஏப்பமிடுவதுபோல் செய்து அந்த பேக்டீரியாவோடு சேர்த்துத் தன் எச்சிலை வெளியே துப்பும். அதனால் கசியத் தொடங்கும் ரத்தம் அவ்வளவு சீக்கிரத்தில் உறையாது. அட்டையும் தேவையான அளவுக்குக் குடித்துவிட்டுச் செவ்வனே கீழே விழுந்துவிடும். ஒருவேளை அதன் விருந்தை நாம் இடைமறித்துப் பிடுங்கிவிட்டாலும் நம் உடலில் அது ஏற்படுத்திய துவாரத்தில் அந்த பேக்டீரியா இருப்பதால் நீண்ட நேரத்திற்கு நிற்காமல் ரத்தம் வந்துகொண்டேயிருக்கும். 

அப்படிக் கசிந்துகொண்டிருந்த ரத்தம் வழிந்து சாக்ஸ் வழியாகக் கீழிறிங்கிக் கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் ரத்தக்கரை படிந்துகொண்டிருந்த சாக்ஸைக் கழட்டினால், உள்ளே மேலும் பல அட்டைகள் மதிய விருந்தைப் புசித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டே கழட்டினால், மேலே இருந்த இரண்டோடு சேர்த்து மொத்தம் பதினொரு அட்டைகள். கெண்டைக்காலுக்கு மேலே ஆங்காங்கே வழிந்துகொண்டிருந்த ரத்தத்தைப் பஞ்சு வைத்து எவ்வளவு துடைத்தாலும் நிற்கப்போவதில்லை. மலையேற்றத்தை முடித்துக் கீழிறங்கிய பிறகுதான் அந்தக் காயங்களைக் கவனிக்க முடியும். அதுவரை ரத்தம் வந்துகொண்டேதான் இருக்கவேண்டும். அதுவாக நின்றால்தான் உண்டு. அட்டைகள் கடித்தால் சராசரியாகச் சுமார் பத்து மணிநேரம்வரை உறையாமல் கசிந்துகொண்டேயிருக்கும். கடி வாங்கிச் சில மணிநேரங்களுக்கு அப்படிக் கசிந்த ரத்தம் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக உறையத் தொடங்கியது. 

எத்தனை அட்டைக்கடிகளை வாங்கினாலும் அவற்றால் அஞ்சத்தக்க ஆபத்துகள் எதுவும் நமக்கு நேர்ந்துவிடப் போவதில்லை. அவை அப்படியொன்றும் ஒருவர் வந்து ரத்த தானம் கொடுக்கும் நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லப் போவதுமில்லை. ஆகவே, அதை நாங்கள் பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை.

இப்படியாக அன்று பல சமயங்களில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மலையேறிச் சென்று பல அட்டைகளுக்கு ரத்த தானம் செய்துவிட்டுக் கீழிறங்கினோம். வேடிக்கை என்னவென்றால், அன்றுதான் உலக ரத்த தான தினம் என்பது நாங்கள் அவற்றுக்கு ரத்த தானம் செய்து முடித்து வந்த பின்புதான் தெரியவந்தது. 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு