Published:Updated:

ஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்!

ஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்!

வாயில் பாதி விழுங்கிய மண் புழுவின் மீதி உடல் வெளியில் நீட்டிக்கொண்டிருக்க, புற்களுக்குள் தலை மட்டும் இருந்தது. அதன் உடல் அமைப்பை நன்றாகக் கவனித்துப் பார்த்தபோது இதுவரை நேரடியாகப் பார்க்காத பாம்பு என்பது மட்டும் புரிந்தது.

ஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்!

வாயில் பாதி விழுங்கிய மண் புழுவின் மீதி உடல் வெளியில் நீட்டிக்கொண்டிருக்க, புற்களுக்குள் தலை மட்டும் இருந்தது. அதன் உடல் அமைப்பை நன்றாகக் கவனித்துப் பார்த்தபோது இதுவரை நேரடியாகப் பார்க்காத பாம்பு என்பது மட்டும் புரிந்தது.

Published:Updated:
ஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்!

பாம்புகள் என்றுமே தனி ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. உலகிலுள்ள பாம்பு வகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சிறப்பைக் கொண்டவை. அவற்றின் உடலமைப்பு, நிறம், வாழ்வியல், தன்மை என்று பல விஷயங்களில் அவை வேறுபடுகின்றன. இன்னமும் நம் கண்களுக்குப் புலப்படாத பல வகைகள் இருக்கலாம் என்ற கருத்து ஊர்வனவியல் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது. அப்படியொரு பாம்பு வகைதான் ஷீல்டு டெயில்டு (Shield-tailed snakes) பாம்புகள். 

ஆனைமலைக்கு மலையேற்றம் சென்றிருந்த சமயம், அப்படியொரு அரிய வகையைச் சேர்ந்த பாம்பைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. நாங்கள் கிளம்பியபோதே நல்ல மழை. மழையிலேயேதான் மலையேறத் தொடங்கினோம். மலையேற்றம் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே மழையும் நின்றுவிட்டது. மெல்ல இளவெயில் படரத் தொடங்கிய சமயம். காட்டு மாடு பயணித்து ஏற்படுத்திய சிறிய காட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்தோம். அப்போதுதான் அதைப் பார்த்தேன். பார்ப்பதற்கு மண்ணுளிப் பாம்பு மாதிரியே இருக்கும் அது, மண்புழுக்களை அதிகமாக விரும்பிச் சாப்பிடக்கூடியது. பாதையிலேயே சுமார் 12 சென்டிமீட்டர் நீளத்துக்குப் படுத்திருந்தது. தலை அருகிலிருந்த புற்களுக்குள் புதைந்திருந்தது. பார்த்தவுடன் மண்ணுளிப் பாம்பு குட்டியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் மெல்ல புற்களை விளக்கினேன். தலையையும் பார்த்து என்ன வகை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? 
 
ஷீல்டு டெயில்டு பாம்புகள் அனைத்தின் உணவுப் பட்டியலிலும் மண்புழுக்கள் பொதுவானவைதாம். அதை நான் பார்க்கும்போதுகூட ஒரு மண்புழுவை ஆசையாகச் சுவைத்துக் கொண்டுதானிருந்தது. 

ஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாயில் பாதி விழுங்கிய மண் புழுவின் மீதி உடல் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கப் புற்களுக்குள் தலை மட்டும் இருந்தது. அதன் உடல் அமைப்பை நன்றாகக் கவனித்துப் பார்த்தபோது இதுவரை நேரடியாகப் பார்க்காத பாம்பு என்பது மட்டும் புரிந்தது. ஆனால், எங்கோ பார்த்திருந்த நினைவு. இதன் பெயரைச் சிந்தித்துக்கொண்டே அதன் உடலமைப்பை நோட்டம் விட்டேன். வயிற்றுப் பகுதியில் அதிகமான செதில்களுடன் இருந்த அதன் இரண்டு பக்கமும் தலைக்குக் கீழே சிறிய மஞ்சள் கோடு நீண்டிருந்தது. அதேபோன்ற மஞ்சள் நிறக் கோடு வால் பகுதியிலும் இரண்டு பக்கமும் நீண்டிருந்தது. உணவு உண்டுகொண்டிருந்த வேளையில் அதைத் தொந்தரவு செய்வது இயற்கைக்கு விரோதமானது. ஆகவே, அதை அப்படியே விட்டுவிட்டுக் காத்திருக்க நினைத்தோம். ஆனால், அது வேறு மாதிரியாக நினைத்திருக்க வேண்டும். 

அநேகமாக, நான் ஏற்படுத்திய சலசலப்பில் எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். பார்க்கத் தொடங்கி சுமார் 3 நிமிடங்கள் இருக்கும். மண் புழுவை விழுங்கியதும் புற்களுக்குள் புகுந்து மறைந்துவிட்டது. பார்த்தது ஷீல்டு டெயில் என்ற வகையைச் சேர்ந்த பாம்பு இனம்தான். ஆனால், அது எந்த வகை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. 

ஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்!

Photo Courtesy: V.J.Jins

இந்த இனத்தை முதலில் கண்டுபிடித்தவர்.

மலையேற்றம் முடித்து இருப்பிடம் வந்து சேர்ந்தோம். வந்ததிலிருந்து அதே நினைவுதான். அது என்ன வகைப் பாம்பாக இருக்குமென்று தெரிந்துகொள்ள மனம் துடித்தது. ஆனால், நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இணைய வசதியோ கைப்பேசிக்கான நெட்வொர்க்கோ கிடைக்காது. பாம்புகள் குறித்த கையேடுகளிலும் நாங்கள் பார்த்த பாம்பு என்ன வகை என்பது தெரியவில்லை. அது ஷீல்டு டெயில் வகையைச் சேர்ந்ததுதான் என்று தெரிகிறது. ஆனால், அதில் எந்தத் துணை இனத்தைச் சேர்ந்தது என்று தெரியவில்லை. காலையில் கிளம்பும்போது நன்றாக மழை பெய்துகொண்டிருந்ததால் கைப்பேசி, ஒளிப்படக்கருவி என்று எதையுமே எடுத்துச் செல்லவில்லை. அதை ஓர் ஒளிப்படம் எடுத்து வைத்திருந்தாலாவது பின்னர் தேடிப்பார்த்து உறுதி செய்திருக்கலாம். ஒருவேளை ஏதேனும் அரிய வகையாக இருந்தால் ஆவணமாகக்கூட இருந்திருக்கும். 

என் கெட்ட நேரம் அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. சரி, ஒளிப்பதிவுதான் செய்ய முடியவில்லை. அதைப் பற்றிய குறிப்புகளையாவது எழுதி வைப்போம் என்று முடிவு செய்தேன், "அடர் சாம்பல் மற்றும் பழுப்பு கலந்த நிறத்திலிருந்தது. நீளம் சுமார் 12 சென்டிமீட்டர். தலை ஓரளவுக்குக் கூர்மையாக இருந்தது. மிகச் சிறிய தலை, மிகச் சிறிய வாய்ப் பகுதி. அதன் தலைக்குக் கீழே பக்கவாட்டில் இரண்டுபுறமும் சிறிய மஞ்சள் கோடு இருந்தது. அதேபோல் வால் பகுதியின் பக்கவாட்டிலும் அதேபோல இரண்டு கோடுகள். பார்க்கையில் மண்புழுவைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டிருந்தது. பாதி மண்புழுவை விழுங்கிய சூழலில்தான் நான் அதைப் பார்த்தேன். நேரம் சுமார் 11.30 இருக்கும். நன்றாக மழை பெய்து ஓய்ந்திருந்த நேரம். மலைப்பகுதியிலிருந்த பனி மூட்டங்களைத் தாண்டி ஓரளவுக்கு இளஞ்சூட்டைத் தரும் வெயில் படர்ந்திருந்த சமயம். கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டர் உயரத்தில் அது காணப்பட்டது." 

ஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்!

மூங்கில் சட்டித்தலையன் (Bamboo pit viper)

Photo Courtesy: Adhil C.V

குறிப்புகளைப் பத்திரப்படுத்திவிட்டு அடுத்த நாளைய பயணத்துக்காக ஆவலோடு காத்திருந்தேன். ஆவலுக்குக் காரணமும் இருந்தது. அடுத்த நாளும் அதே வழியாகத்தான் எங்கள் மலையேற்றம். ஆகவே, அடுத்த நாளாவது அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நப்பாசைதான். இருந்தும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், எங்களுக்கு எதிர்த்திசையில் சென்ற வேறோர் குழு மூங்கில் சட்டித்தலையனைக் (Bamboo pit viper) கண்டிருக்கிறார்கள். அதை உடன் சென்றிருந்த ஒரு கேரள இளைஞர் ஒளிப்படமும் எடுத்திருந்தார். ஆவலாகக் காத்திருந்த எனக்கோ மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது. 

சின்னச் சின்ன அளவில் அதிகமான செதில்களையுடைய இந்த சட்டித்தலையன், உடலின் மேற்புறத்தில் பச்சை நிறத்திலும் கீழ்புறத்தில் இளமஞ்சள் நிறத்திலும் இருப்பான். கொஞ்சம் மூர்க்கமான முன் கோவக்காரன்தான். எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுவிட்டால் யாராக இருந்தாலும் யோசிக்காமல் கடித்துவிடுவான். ஆனால், பெரிய அளவுக்கு ஆபத்தில்லை. நச்சுப் பாம்புதான் என்றாலும் அதன் நஞ்சு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. கடிபட்ட இடத்திலும் அதைச் சுற்றிய சிறிய வட்டமாகவும் தோல் கருகியதுபோல் தலும்பாகிவிடுமே தவிர உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு ஆபத்தில்லை. ஆனால், கடிபட்ட இடத்தில் வலி அதிகமாக இருக்கும். 

மூங்கில் சட்டித்தலையனின் கடியைப் பற்றிய பேச்சு வந்ததும் ஒருமுறை ஊர்வன ஆய்வாளர் ரமேஸ்வரன் அதுகுறித்துச் சொன்னது நினைவுக்கு வந்தது. குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்ததைத் தேடினேன், "பொதுவாகப் பாம்பின் நஞ்சு நமக்குள் இறங்குவது உடலில் ஊசி குத்துவது போல்தான் இருக்கும். கண்ணாடி விரியன், நாகம் போன்றவற்றின் நஞ்சு அதிக வீரியமுடையவை என்பதால் அவற்றின் தாக்கம் உடல் முழுவதும் இருக்கும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதுவே பச்சைப் பாம்பு கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி அதிகமாகவும் வீக்கமும் இருக்குமே தவிர வேறு பாதிப்புகள் இருக்காது. அவற்றின் இரையாகும் சிறு பறவைகள், ஓணான் போன்றவற்றைக் கொல்லும் அளவுக்கு அந்த நஞ்சுக்குத் திறன் இருந்தாலும் நமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதற்குக் காரணம் அந்தக் கடியின் தாக்கத்தை எதிர்கொள்ளும் திறன் நம் உடலில் இருப்பதுதான்." 

ஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்!

மூங்கில் சட்டித்தலையன் பாம்பு, சென்னை பாம்புப் பூங்காவில் (Chennai Snake Park)...

இப்போது மூங்கில் சட்டித்தலையன் தரப்புக்கு வருவோம். இவன் கொஞ்சம் வித்தியாசனமானவன். இவன் கடித்தால், கடிபட்ட இடத்தில் அந்த நஞ்சின் வீரியம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அதைத் தொடர்ந்து உடல் முழுக்கப் பயணிக்கும்போது அதன் வீரியம் குறைந்துவிடும். ஆகவே பாதிப்பும் இருக்காது. இந்த வகைப் பாம்புகளைப் பற்றிய ஆய்வும் அதிகமாக இல்லாததால், இதுகுறித்து மேலும் பல ஆழமான விவரங்கள் வெளிவராமலே இருக்கின்றன. 

இத்தகைய பாம்பைக் காணும் அரிய வாய்ப்பு எங்களுக்கு எதிர்த்திசையில் சென்ற குழுவுக்குக் கிடைத்தது பெரிய விஷயம்தான். இருப்பினும் அவர்களைவிட அரிய வகையைச் சேர்ந்த ஒன்றை நாங்கள் பார்த்துள்ளோம் என்ற என்னுடைய ஊகம் கிட்டத்தட்ட தவறவில்லை. கீழே வந்த பிறகு குறிப்புகளை வைத்துக்கொண்டு தேடியதில் நான் பார்த்தது என்ன வகைப் பாம்பு என்பதை ஓரளவுக்குத் தெரிந்துகொண்டேன். நாங்கள் பார்த்தது, கடந்த ஆண்டு மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய இனம். இது தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவின் மிக முக்கியமான ஊர்வனவியலாளரான மறைந்த முனைவர் சுப்பிரமணியம் பூபதியின் நினைவாகப் பூபதி'ஸ் ஷீல்டு டெயில்டு என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக எல்லைக்கு உட்பட்ட காப்புக் காட்டுக்குள் நான் பார்த்தது இந்தப் பாம்பாக இருக்கலாம் என்று 70 சதவிகிதத்துக்கும் அதிகமான உத்தரவாதத்தோடு கூறமுடிகிறது. ஆனால், அதன் ஒளிப்படம் எதையும் பதிவு செய்துவைக்க முடியாத காரணத்தால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. 

ஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்!

Photo Courtesy: V.J.Jins

இந்த வகைப் பாம்புகள் தாவர வேர்களுக்கு அடியிலோ புதர்களுக்கு அடியிலோ, மென்மையான ஈரப்பதமான மண்ணிலோ வாழக்கூடியவை. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வகையைப் பற்றிய ஆய்வுகள் இன்னும் முழுமையடையவில்லை என்பதால் இதுகுறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், இதுவரை அதிகமாக யார் கண்ணிலும் படாத ஓர் உயிரினம் நடந்துபோன பாதையிலேயே காட்சியளித்தது மறக்க முடியாத அனுபவம். பார்த்துச் சில நிமிடங்களே அதைக் கவனிக்க முடிந்ததால் உறுதியாகப் பூபதி'ஸ் ஷீல்டு டெயில்டு பாம்பைத்தான் பார்த்தேனா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இதுவரை கண்டுபிடிக்கப்படாத முழுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத பல ஷீல்டு டெயில்டு பாம்பு வகைகள் இருக்கின்றன என்பதால் இந்த வகைப் பாம்பு பற்றிய ஆய்வு முடிவுகள் வெளிவரும்வரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தப் பகுதியின் இயற்கை பொக்கிஷங்கள் இவை.

உலகில் பல உயிரினங்கள் இதுபோல், நமக்குத் தெரியாமலே இருக்கின்றன. அவற்றைப் பற்றித் தெரிய வர வர மேலும் பல ஆய்வுகளை நாம் தொடர்ந்து செய்யத் தொடங்குகிறோம். அந்த ஆய்வுகள் பல வினாக்களுக்கு விடையளிக்கின்றன. உயிரினப் பாதுகாப்பில் இதுபோன்ற பல ஆய்வுகள் முன்னுதாரணமாகவும் விளங்குகின்றன. அந்த வகையில் இதைப் பற்றிய ஆய்வுகளும் நமக்குத் தரப்போகும் விடைகளை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்கிறேன். ஏனெனில், ஓர் உயிரினத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அதைப் பார்ப்பதுதான் இதுவரை நடந்துள்ளது. முதல்முறையாக, அரிதாக ஒன்றைக் கண்களால் பார்த்துவிட்டு அதைப் பற்றிய ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். இது புதுவிதமான அனுபவம்தானே! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism