கிருஷ்ணதேவராயர் ஒருமுறை தெனாலிராமனிடம் `மனிதனின் நிம்மதியான தருணம் எது?' என்று கேட்டாராம். தெனாலிராமன் அதற்கு, ‘‘அரசே ஏன், எதற்கு என்று கேட்காமல் நன்றாகச் சாப்பிட்டு, நிறைய தண்ணீர் குடித்துவிட்டு, நான் சொல்லும்வரை ஓர் அறையில் இருங்கள்’’ என்று சொன்னார். அரசரும் சரியென்று சொல்லி ஓர் அறைக்குள் அடைபடுகிறார். அந்த அறையில் கழிப்பறை வசதி கிடையாது. நேரம் ஆக, ஆக அரசருக்கு இயற்கை உபாதை வயிற்றை உதைக்கிறது. பொறுக்கவே முடியாமல் கதவைத் தட்டுகிறார். தெனாலிராமன் வெகுநேரமாகக் கதவைத் திறக்கவில்லை. நேரம் செல்லச் செல்ல, கோபத்தின் உச்சிக்குச் சென்ற அரசர், கடுமையாகச் சத்தம்போட்டபின்னரே கதவைத் திறந்துவிட்டார் தெனாலி ராமன். கதவைத் திறந்த அடுத்தநொடி அரசர் வேகமாகக் கழிவறையை நோக்கி ஓடினார். இயற்கை உபாதையைக் கழித்த அரசர், ‘‘அப்பாடா!’’ என்று நிம்மதிப்பெருமூச்சோடு வெளியே வந்தவரிடம் தெனாலிராமன் கேட்டாராம், ‘‘அரசே! இப்போது தெரிகிறதா நிம்மதியான தருணம் எது என்று?".
இயற்கை உபாதைகளை உரிய நேரத்தில் வெளியேற்ற முடியாவிட்டால் உலகின் எந்த அழகும் சுவையும் கண்ணுக்குத் தெரியாது; புலனுக்கும் புரியாது. உண்ணாமல், உடுத்தாமல் ஏன் தண்ணீர்கூடக் குடிக்காமல் சிறிது காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், இயற்கை உபாதையைக் கழிக்காமல் ஒரு கணத்தைக்கூடக் கடப்பது கடினம். உறைவிடம் இல்லாமல்கூட வாழ்ந்து விடலாம். கழிப்பிடம் இல்லாமல் வாழ்வது எவ்வளவு துயரம் என்பதைப் பெருநகர மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.
ஒரு சில கிராமங்களில் இன்றைக்கும் கழிப்பறை இல்லாத இல்லங்கள் எத்தனையோ இருக்கின்றன. வயல்வெளி, காடு, கரை, கண்மாய் எனத் திறந்தவெளிகளைப் பயன்படுத்தும் மக்கள், இந்தியாவில் தற்போதும் பல லட்சம் பேர் வாழ்கிறார்கள். ஆனால், பெருநகர வாழ்க்கை என்று வந்துவிட்டால் கழிப்பறை இல்லாமல் ஒருநாளைக்கூடக் கழிக்கமுடியாது. இதற்காகத்தான் மக்கள் கூடும் இடங்களிலும், ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்புகளிலும் அரசே பொதுக்கழிப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளது. அது ஓர் அரசின் கடமையும்கூட. ஆனால் அந்தக் கழிப்பிடங்களின் நிலை இப்போதைய சூழலில் எப்படியிருக்கின்றன என்று பார்த்தால்...ஐயகோ, மிகவும் பரிதாபம்...!
பொதுக்கழிப்பறைகள்...
சிங்காரச் சென்னையை எடுத்துக்கொள்வோம்...பிரமாண்ட கட்டடங்கள், பெரிய பெரிய மால்கள், அகன்ற சாலைகள், மெட்ரோ ரயில் என எத்தனையோ பெருமைகள் இந்தப் பெருநகரத்துக்கு இருக்கின்றன. ஆனால், இந்த மாநகரின் சுத்தமும், சுகாதாரமும் மிகப்பெரும் கவலைக்கிடமாக இருக்கின்றன. அதிலும் பொதுக்கழிவறைகள் அனைத்துமே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டிய நிலையில்தான் இருக்கின்றன.
சென்னையில் 866 இடங்களில் 6,641 பொதுக்கழிவறைகள் இருக்கின்றன. மேலும், ஈ-டாய்லெட் 200 இடங்களிலும், அதுபோல் வாடகைக் கழிவறைகள் 160 இடங்களிலும் உள்ளன. இந்தப் பொதுக்கழிவறைகளைப் பராமரிப்பதற்கென்று தமிழக அரசு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. உதாரணமாக, ஒவ்வொரு ஈ-டாய்லெட்டுக்கும் மாதாந்திர பராமரிப்புச் செலவாக 2,000 ரூபாயும், ஒவ்வொரு வாடகைக் கழிவறைக்கும் 4,000 ரூபாயும் ஒதுக்குகிறது அரசு.

இது தொடர்பாக சென்னையில் 40-க்கும் மேற்பட்ட பொதுக்கழிவறைகளில் நாம் நேரடியாக களஆய்வை மேற்கொண்டோம். அப்போது கிடைத்த தகவல்களின் தொகுப்புதான் இந்தக்கட்டுரை.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களிலும் பிரதான பிரச்னையாக இருப்பது கழிப்பிட வசதி இல்லாததுதான். ஆண்கள் பெரும்பாலும் எவ்வித சங்கடமும் இல்லாமல் சாலையோரத்தில் நின்று சுவர்களில் சிறுநீர் கழித்து, படம் வரைந்துவிட்டுப் போய் விடுகின்றனர். பெண்களின் நிலைமைதான் படுமோசம். பெரிய வணிக நிறுவனங்கள், மால்களுக்குப் போனால் பிரச்னையில்லை. பஸ் ஸ்டாண்ட், கடை வீதிகள், மார்க்கெட் என்று எங்கே போனாலும் கழிப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரும் சிரமம். கழிப்பிடமிருந்தாலும் பூட்டிக் கிடக்கும். இல்லாவிடில் போகவே முடியாத அளவிற்கு மோசமானதாக இருக்கும். பராமரிப்பு என்பதே கொஞ்சமும் இல்லாவிட்டாலும் காசு வசூலிப்பதில் கரெக்டாக இருக்கிறார்கள் கான்ட்ராக்டர்கள்.
1,190 பேருக்கு ஒரு கழிவறை!
சென்னையில் குடிசைப் பகுதிகளில் மட்டும் சுமார் 14 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்தப்பகுதிகளில் உள்ள கழிவறைகளின் எண்ணிக்கை 714. இங்கிருக்கும் ஒரு கழிவறையை கிட்டத்தட்ட 1,190 பேர் பயன்படுத்துகின்றனர் என்பது தூய்மை பாரதத்தின் ஆகப்பெரிய துயரச்செய்தி. ஒரு கழிவறையை 1,190 பேர் பயன்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் நிலையை யாராலும் கற்பனை செய்யவே முடியாது. நிஜத்தில் பார்த்தால் நிலைகுலைந்துபோக வேண்டியிருக்கிறது. சென்னையின் எந்தவொரு குடிசைப்பகுதியிலும் குப்பைகளும் ஒழுங்காக அள்ளப்படுவதில்லை, கழிவறைகளும் சுத்தப்படுத்தப்படுவதேயில்லை.

சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் கீழ் உள்ள திடீர் நகர்ப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஏழெட்டு வீடுகளில்தான் கழிவறைகள் இருக்கின்றன. மற்றவர்களின் வீடுகளோ, கழிவறை அளவுக்குத்தான் இருக்கின்றன. இவர்கள் எல்லோருமே பொதுக்கழிப்பிடத்தையே நம்பியுள்ளனர். ஆனால், அந்தக் கழிவறையை நாம் நேரில் பார்த்ததும், நம்மால் வெகுநேரத்துக்கு இயல்பு நிலைக்கே வர இயலவில்லை.
அங்கு வசிக்கும் வசந்தி என்பவர், ``எங்களோட மொத்த வீடே, ஒரு ரூம் அளவுதான். தனியா கக்கூஸ் கட்டுறதுக்கெல்லாம் இடமில்லை. இந்த ஏரியாவில இருக்குற பப்ளிக் டாய்லெட், பெரும்பாலும் மூடித்தான் இருக்கும். நாங்க அவசரத்துக்குப் போகணும்னாலும் ரொம்ப தூரம் போகணும். இல்லேன்னா ஆத்தோரமாப் போகணும். எத்தனையோ தடவை கம்ப்ளைன்ட் பண்ணியாச்சு, எதுவுமே நடக்கலை. எங்க தலையெழுத்து இவ்வளவுதான்" என்றார் நம்மிடம்.
புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலை குடிசைப்பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ரீனா, ``எங்க வீட்டுல டாய்லெட் இல்லை, இங்க இருக்க நிறைய பேர் வீட்டுல டாய்லெட் கிடையாது. எங்க எல்லார் குடும்பத்துக்கும் அந்த ஒரு பப்ளிக் டாய்லெட் மட்டும்தான். ஆனா அது யூஸ் பண்ற நிலைமையிலேயே கிடையாது. ஹவுஸிங் போர்டு டாய்லெட்டுக்குப் போயிட்டு இருந்தோம். தண்ணீர்ப் பிரச்னையாகி அங்கேயும் போகமுடியலை. வேற வழியில்லாம இந்த ஒரு டாய்லெட்டைத்தான் யூஸ் பண்றோம். இல்லைன்னா நைட் நேரத்துல ஆத்தோரத்துக்குப் போறோம். எங்களுக்கு இந்த டாய்லெட்டை சுத்தம்பண்ணிக் கொடுத்தா பெரிய புண்ணியமா போகும்" என்றார்.
மேற்கு சைதாப்பேட்டை, கங்கை அம்மன் கோயில் தெருவிலுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி என்ற பெண் நம்மிடம் இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசும்போதே வெடித்து அழ ஆரம்பித்து விட்டார்... ‘‘இங்க கிட்டத்தட்ட 150 குடும்பங்கள் இருக்கோம், எங்க எல்லாருக்குமே அந்த ஒரு டாய்லெட்தான். அதையும் சரிபண்ணி அஞ்சு வருஷமாச்சு. பக்கத்துல நாலஞ்சு இடத்துல டாய்லெட் இருக்கு, எல்லாமே பூட்டிக்கிடக்குது. ஆத்திரம் அவசரம்னா அடையாறு ஆத்தோரமா போயிப்போம். குளிக்கிறதெல்லாம் இங்க அப்படியே தெருவுலதான். ரொம்பக்கஷ்டமா இருக்கு. ஓட்டு கேட்டு மட்டும் எல்லாரும் வர்றாங்க. ஆனா இந்தப் பிரச்னையைத் தீர்க்கவே மாட்டேங்கிறாங்க. உங்களைக் கையெடுத்துக்கும்பிடுறேன், எப்படியாச்சும் இங்கயிருக்குற டாய்லெட்டை சரிபண்ணிக்கொடுங்க. இந்த உதவிய ஜென்மத்துக்கும் மறக்கமாட்டோம்" என்று கண்ணீர் விட்டார்.
சென்னையின் பல பிரதான இடங்களிலேயே இந்த நிலைமையென்றால், சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழகத்தின் பிற நகரங்களிலும் வசிக்கும் மக்களின் நிலை எப்படியிருக்குமென்பதை உணரமுடிகிறது.
தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை திறந்து மதுபான வியாபாரம் செய்யும் அரசு, ஏழை எளிய மக்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் கழிவறையைக் கூட தேவையான அளவுக்குக் கட்டிக்கொடுக்காமல் இருப்பது பேரதிர்ச்சியே!
தூய்மை பாரதம் திட்டத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியை வாரி வழங்கியிருக்கிறது. அந்த நிதியும், மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் பொதுக்கழிவறைகள் கட்டவும், பராமரிக்கவும் ஒதுக்கப்படும் நிதியும் எந்தெந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பாக்கெட்டுகளுக்குப் போகின்றன என்பது ஆள்வோருக்கே வெளிச்சம். பொதுக்கழிவறை விஷயத்திலும் உதாசீனம் காட்டுவதும் ஊழல் செய்வதும் அரசின் அவலமான நிர்வாகத்துக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.
அவசரமாக, அவசியமாக அரசு ஏதாவது செய்ய வேண்டும்...அது செய்யும் வரையிலும் நாம் ஒன்று செய்யலாம். உங்கள் தெருக்களில் உள்ள கழிவறைகள் எப்படி உள்ளது என்பதை மொபைலிலேயே புகைப்படங்களாக எடுத்து #ThisisMyToilet என்ற ஹேஷ்டேக் உடன் உங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். கற்பனைக் கதாபாத்திரமான நேசமணிக்காகக் குரல் கொடுத்த தமிழினம், கழிவறைக்காகக் கண்ணீர் விடும் ஏழை-எளிய மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும் கண்டிப்பாகக் குரல் கொடுக்கும்.