Published:Updated:

தமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? #DoubtOfCommonMan

"தமிழ்ராக்கர்ஸ் அட்மின்கள் காவல்துறையிடம் சிக்கினால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியும். இதேபோல தமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் ராக்கர்ஸ்

பேருந்துகளில் புதுத் திரைப்பட சி.டி-க்களைப் போட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறதே, அதேபோல இந்த விஷயத்தில் என் மீது நடவடிக்கை சட்டத்தில் இடமிருக்கிறதா?" என #DoubtOfCommonman பக்கத்தில் தன் கேள்வியைப் பதிவு செய்திருக்கிறார் திருச்சி வாசகர் ஒருவர். அவருக்கான பதில் இதோ. டந்த சில ஆண்டுகளாகத் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருகிறது. முன்பெல்லாம் குடும்பத்தோடு, முதலாம் ஆட்டம், இரண்டாம் ஆட்டம் பார்த்த தமிழ்க் குடும்பங்கள் இன்று பெரும்பாலும் தியேட்டருக்குப் போய் படம் பார்க்கவே விரும்புவதில்லை. நேரமின்மையும் அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதுமே அதற்குப் பிரதான காரணங்களாக இருக்கின்றன. அதேவேளை, திரைப்படத்தின் மீதான மையல் மட்டும் இன்னும் குறையவில்லை. 'தமிழ் ராக்கர்ஸ்' போன்ற இணையதளங்களில் படத்தை டவுன்லோடு செய்து பார்க்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. படம் வெளியான ஓரிரு நாள்களிலேயே பெரும்பாலான படங்கள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களில் பதிவேற்றப்பட்டுவிடுகின்றன. இதனால் பிடித்த திரையரங்குகளில், பிடித்த திரைப்படத்துக்காகக் காத்திருந்து டிக்கெட் வாங்கியவர்கள்கூட தற்போது இதுபோன்ற பைரஸி தளங்களை நாடுகின்றனர். 

இன்று இந்த பைரஸி மிக சகஜமாக மாறிவிட்டநிலையில் இப்படிப் பார்ப்பது சட்டப்படி தவறு என்ற எண்ணமே பலருக்கும் இருப்பதில்லை. இத்தனைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடவும் இன்று முறையான ஸ்ட்ரீமிங் தளங்களே எக்கச்சக்கமாக வந்துவிட்டன. அப்படியிருந்தும் இந்த ஆன்லைன் பைரஸி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படி ஒருவர் முறைகேடாக இணையத்திலிருந்து படம் டவுன்லோடு செய்து பார்த்தாலோ, சட்டவிரோதமான தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்து பார்த்தாலோ சட்டப்படி என்ன நடவடிக்கை பாயும்? 

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம் கேட்டோம். ''1957-ம் ஆண்டு இயற்றப்பட்ட காப்பிரைட் சட்டப்படி, செக்‌ஷன் 63, 63-ஏ, 65, 65-ஏ ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல் இணையதளங்களின் படங்களை வெளியிடுவது குற்றம். அப்படி வெளியிடுபவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சமாக மூன்றாண்டு தண்டனையும் மூன்று லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். சரியாக எத்தனை நாள்கள் சிறை, எவ்வளவு அபராதத் தொகை என்பது, வழக்கின் தன்மைக்கேற்ப முடிவு செய்யும் உரிமை நீதிமன்றத்துக்கு உண்டு. பதிப்புரிமை பெறாமல் இணையத்தில் பகிரப்படும் திரைப்படங்களை, இணையத்தில் நேரடியாகப் பார்ப்பது சட்டப்படி தவறல்ல. அதேவேளை அதனை டவுன்லோடு செய்து பார்ப்பது, பொதுவெளியில் பகிர்வது, அதை சி.டி, டி.வி.டி-யாக காப்பிசெய்து விற்பனை செய்வது போன்றவை சட்டப்படி தவறு. அவர்களுக்கும் மேற்கண்ட பிரிவுகளில்தான் வழக்குகள் பதிவு செய்யப்படும்'' என்றார் அவர். 

கைது
கைது

ஆன்லைன் பைரஸி குறித்துத் தொடர்ந்து பேசிவரும், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலியிடம் இதுகுறித்துப் பேசினோம், ''தற்போதைய சூழலில் டவுன்லோடு செய்து ஒருவர் படம்பார்ப்பது கண்டறியப்பட்டாலும் பெரிய அளவில் அவர்மீது நடவடிக்கைகள் எடுக்க முடியாது. அது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், இணையத்தில் அதற்கான வாய்ப்பு இருக்கும்வரை மக்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. இணையத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இதுதான் யதார்த்தமான உண்மை. இப்போதுள்ள பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் அனைவராலும் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க முடிவதில்லை. அதேவேளை மக்களின் கைகளில் இன்று சர்வசாதாரணமாக ஆண்ட்ராய்டு போன்கள் தவழ்ந்துகொண்டிருக்கின்றன. இலவசமாகவே பார்ப்பதற்குரிய வாய்ப்பும் இருக்கிறது. அதனால் திரைத்துரையினர்தான் மக்களுக்கு ஏற்றவாறு சிறிது மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். படங்கள் தியேட்டரில் வெளியாகும் அன்றே இணையத்திலும் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். நாம் நல்ல தரமான பிரின்டை குறைவான கட்டணத்தில் வழங்கினால், யாரும் தமிழ் ராக்கர்ஸை தேடிச்செல்ல மாட்டார்கள்.

காப்புரிமைச் சட்டம்
காப்புரிமைச் சட்டம்

அதையும் மீறி இலவசமாக பார்ப்பவர்களைக் கண்டறிந்தால் அவர்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கலாம். அதுவே சரியான வழிமுறையாக இருக்கும்.  '' என்கிறார் இயக்குநர் கஸாலி.

தமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? #DoubtOfCommonMan
கேமராவில் சிக்கிய ராட்சத கனவா... பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஞாபகம் இருக்கா மக்களே?!