Published:Updated:

காம்பவுண்ட் சுவரில் நெல் ஜெயராமன் ஓவியம்! மரியாதை செலுத்தும் திருவாரூர் அரசுப் பள்ளி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காம்பவுண்ட் சுவரில் நெல் ஜெயராமன் ஓவியம்! மரியாதை செலுத்தும் திருவாரூர் அரசுப் பள்ளி!
காம்பவுண்ட் சுவரில் நெல் ஜெயராமன் ஓவியம்! மரியாதை செலுத்தும் திருவாரூர் அரசுப் பள்ளி!

"நெல் ஜெயராமன் ஐயா எங்கள் பள்ளிக்கு வரவும் விரும்பினார். ஆனால், அதற்குள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவரின் இழப்பு எல்லோருக்குமே பேரிழப்புதான்."

மிழகத்தின் பாரம்பர்ய நெல் விதைகள் பாதுகாக்கவும், அவற்றை மீண்டும் விவசாயம் செய்ய வைக்கவும் தொடர்ந்து பாடுபட்டவர் நெல் ஜெயராமன். ஒவ்வோர் ஆண்டும் அவர் நடத்திய நெல் திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் கலந்துகொண்டு அதுவரை கேள்விக்கூடபட்டிராத நெல் வகைகளைப் பார்த்தும் தொட்டும் வாங்கியும் சென்றார்கள். அவரைப் பார்த்து பலரும் நஞ்சில்லா இயற்கை விவசாயம் நோக்கி தங்களின் வேளாண்முறையை மாற்றிக்கொண்டார்கள். அந்த வகையில் தனிமனிதராக இருந்த நெல் ஜெயராமன், ஓர் இயக்கம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தார் என்றார் மிகையில்லை. தமிழகம் எங்கும் இயற்கை விவசாயம் குறித்த பரப்புரை மேற்கொள்வதில் ஒருநாளும் அவர் சுணக்கம் காட்டியதில்லை. ஆனால், பெரும்துயரம் என்னவென்றால், அவரைப் புற்றுநோய் தாக்க, கடுமையான தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்துபோனார். அவர் எப்போதும் குழந்தைகளுடன் பேசுவதற்கு விரும்பினார். ஏனெனில், இயற்கையைப் பாதுகாக்கப் போகும் அடுத்த தலைமுறை அவர்கள்தாம் என்பதால். அவரின் எண்ணத்தை ஓர் அரசுப் பள்ளி நிறைவேற்றி வைத்துள்ளது. 

காம்பவுண்ட் சுவரில் நெல் ஜெயராமன் ஓவியம்! மரியாதை செலுத்தும் திருவாரூர் அரசுப் பள்ளி!
காம்பவுண்ட் சுவரில் நெல் ஜெயராமன் ஓவியம்! மரியாதை செலுத்தும் திருவாரூர் அரசுப் பள்ளி!

 திருவாரூர் மாவட்டம், மேலராதாநல்லூரில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இது பல வகைகளில் மற்ற பள்ளிகளைவிட சிறப்பாகத் திகழ்கிறது. மாணவர்களை, பாடத் திட்டம் தாண்டிய புத்தகங்களை வாசிக்க வைப்பது, மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புகழ்பெற்ற மனிதர்களைப் பள்ளிக்கு வரவழைப்பது என மாணவர்களின் திறனை வளர்த்தெடுக்கிறது. ஆனால், பள்ளியின் கட்டடங்கள் சேதமான நிலையில் இருந்ததை இப்போது மாற்றி அமைத்திருக்கிறார்கள். அது குறித்து அப்பள்ளியின் ஆசிரியர் மணிமாறனிடம் பேசினோம். 

"எங்கள் பள்ளியில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள் அதிகம் படிக்கும் பகுதி. கல்வி மட்டுமே பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால், மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதிலும் தொடர்ச்சியாக அனுப்புவதிலும் சுணக்கம் காட்டுவதில்லை. அதனால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் பள்ளி ஆசிரியர்கள் எங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்துவருகிறோம். மூன்று வகுப்பறைகள் மற்றும் இரண்டு வகுப்பறைகள் உள்ள கட்டடங்கள் ரொம்பவே சேதமாகிவிட்டது. அதுவும் சென்ற ஆண்டு வீசிய கஜா புயலில் அந்தச் சேதம் இன்னும் அதிகமாகிவிட்டது. அதைச் சரி செய்வதற்கான ஸ்பான்ஸர் யாரேனும் கிடைத்தால் நல்லது என எதிர்பார்த்திருந்தோம். கோவையிலுள்ள பி.எஸ்.ஜி கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 1,40,000 ரூபாய் அளிக்க முன் வந்தார்கள். அமெரிக்காவில் உள்ள டீம் இந்தியா எனும் அமைப்பு 2,10,000 ரூபாயும், சென்னை வருமான வரி அலுவலகப் பணியாளர்கள். 55,000 ரூபாயும் தருவதாகக் கூறினார்கள். இது எங்களுக்கு உற்சாகத்தைத் தந்தது. எனவே, உடனே வேலைகளைத் தொடங்கினோம். அதற்கு முன்னதாக, கல்வித் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை முறையாகப் பெற்றுக்கொண்டோம். 

காம்பவுண்ட் சுவரில் நெல் ஜெயராமன் ஓவியம்! மரியாதை செலுத்தும் திருவாரூர் அரசுப் பள்ளி!

மூன்று வகுப்பறைகளின் உள்பக்க தரைதளம், சுவர்கள், கரும்பலகை, வெளிச்சுவர், மேல்தளம் உள்ளிட்ட பணிகளைச் செய்தோம். மேலும், பள்ளியின் காம்பவுண்டு, முகப்பு உள்ளிட்டவற்றில் இருந்த சேதங்களைச் சரிசெய்தோம். 120 அடி நீளத்துக்குப் புதிதாகச் சுற்றுச்சுவரும் அமைத்தோம். இவையெல்லாம் பள்ளிக் கட்டடத்தை வலுப்படுத்தும் விஷயங்கள். ஆனால், மாணவர்கள் விரும்பும் விஷயங்களாக அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் ஓவியங்களை வரைந்தோம். அதைப் பார்த்து மகிழ்ச்சியோடு சிரித்துக்கொண்டு, விளையாடுவதுமாக மாணவர்கள் ஓய்வுநேரத்தைக் கழிக்கிறார்கள்" என்கிறார் மணிமாறன்.

ஸ்பான்ஸரிஷிப்பாகக் கிடைத்த பணத்தை விடவும் கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. அதை ஆசிரியர் மணிமாறனே தன் சொந்த செலவாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். 

காம்பவுண்ட் சுவரில் நெல் ஜெயராமன் ஓவியம்! மரியாதை செலுத்தும் திருவாரூர் அரசுப் பள்ளி!

"நெல் ஜெயராமனின் ஓவியத்தைச் சுவரில் வரைவதற்கு என்ன காரணம்?" என்று அவரிடம் கேட்டதற்கு, "நெல் ஜெயராமன் ஐயா நடத்திய நெல் திருவிழாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் எங்கள் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லத் தவறியதில்லை. அங்கு அவரோடு மாணவர்கள் பேசி பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் செய்வார்கள். நெல் ஜெயராமன் ஐயா எங்கள் பள்ளிக்கு வரவும் விரும்பினார். ஆனால், அதற்குள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவரின் இழப்பு எல்லோருக்குமே பேரிழப்புதான். அதற்காகப் பள்ளியில் அஞ்சலியும் செலுத்தினோம். அவரையும் அவர் செய்த பணிகளையும் அடுத்தடுத்து வரும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில்தான் அவரின் ஓவியத்தை வரைந்திருக்கிறோம். இதன்மூலம், இயற்கையை நேசிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்குள் விதைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் மட்டுமில்லாமல், நம்மாழ்வார், சலீம் அலி உள்ளிட்டோரின் ஓவியங்களை வரைந்திருக்கிறோம். தேசத்தலைவர்களைப் போலவே இவர்களைப் பற்றியும் நம் குழந்தைகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம்" என்கிறார் மணிமாறன். 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு