Published:Updated:

சந்துகளான சாலைகள்... ப்ளாட்டுகளான கூரைகள்!

சந்துகளான சாலைகள்... ப்ளாட்டுகளான கூரைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சந்துகளான சாலைகள்... ப்ளாட்டுகளான கூரைகள்!

''எட்டு வெச்சு நான் நடக்கத் தொடங்குனதும், என் வயசுப்  பசங்களோட சேர்ந்து சைக்கிள் ஓட்டிப் பழகுனதும் சாலிகிராமத்தின் தசரதபுரத்துலதான். கிரிக்கெட் பேட்டும் பந்துமா தெருவுல வலம் வந்ததும், குறும்புகள் செஞ்சு குதூகலிச்சதும் இதே சாலிகிராமத்தின் சந்துபொந்துகளில்தான். அப்ப நாங்க இருந்த வீட்டை அஞ்சு வருஷத் துக்கு முன்னாடி 12 லட்சம் ரூபாய்க்கு விற்கிற சூழல் வந்துச்சு. இன்னைக்கு அதோட சந்தை மதிப்பு ஒரு  கோடிக்கும் மேல போயிருச்சு. சாலிகிராமத்தின் அதிவேக வளர்ச்சியை இந்தப் புள்ளிவிவரம் ஒண்ணே புரியவைக்குமே!'' - தான் பிறந்து வளர்ந்த சாலிகிராமம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் மைமிங் கலைஞரும் நடிகருமான கோகுல்நாத்.

சந்துகளான சாலைகள்... ப்ளாட்டுகளான கூரைகள்!
##~##

''எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே இருந்த மில்டன் நர்சரி ஸ்கூல்லதான் அஞ்சாவது வரைக்கும் படிச்சேன். எங்க வீடு மாதிரியே அந்த ஸ்கூலுக்கும் ஓலைக் கூரைதான்.  இப்போ அந்த ஸ்கூல் பெரிய கட்டடமா மாறிடுச்சு. அப்ப எல்லாம் ஒவ்வொரு தெருவுலயும் ஏகப்பட்ட காலி இடங்களைப் பார்க்கலாம். இப்ப சாலிகிராமம் முழுசும் அபார்ட்மென்ட்டுகளா மாறிப்போச்சு.  

அதேமாதிரி முன்ன எல்லாம் ரோடுகள் பெருசாவும் ஊர் சிறுசாவும் இருந்துச்சு. ஆனா இப்போ, சரசரனு வளர்ந்துட்டு வர்ற சாலிகிராமத்துல ரோடுகள், சந்துகள் மாதிரி மாறிடுச்சு. வீட்டுக்குத் தெரியாம விளையாடப் போகுற பையன்ல இருந்து நெருங்கின சொந்தக்காரங்க செத்ததாப் பொய் சொல்லி ஆபீஸுக்கு லீவு போடறவங்க வரைக்கும் எல்லாரையும் ரோட்டோரமா இருக்கிற சின்னக் கோயில்ல உட்கார்ந்து கவனிச்சிக்கிட்டு இருந்த நாகாத்தம்மன், இப்ப பெரிய கோயிலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்குறா.  

அந்த வயசுல  சினிமானாலே எங்களுக்கு ஏவி.எம்.ராஜேஸ்வரி, எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டர்கள்தான் ஞாபகத்துக்கு வரும். ஸ்கூல் முடிஞ்சு வந்ததும், அடிச்சுப் புடிச்சு ஓடிப்போய்ப் பார்த்த 'பூவே உனக்காக’, 'லவ் டுடே’ படங்கள் இன்னும் அப்படியே இளமையா மனசுல ஓடிக்கிட்டிருக்கு. இன்னும்கூட கூடுதலா சில ஞாபகங்களையும் சந்தோஷங்களையும் கொடுத்த நேஷனல் தியேட்டர் இப்போ, ஹைடெக்கா மாறி அஞ்சு ஸ்க்ரீன்ல சென்னையவே அசத்திட்டு இருக்கு. சாலிகிராமத்துல இருந்த மத்த குழந்தைகளுக்கு இருக்கிறதைப் போலவே, பல நடிகர்களை நேரில்

சந்துகளான சாலைகள்... ப்ளாட்டுகளான கூரைகள்!

பார்த்து வளரும் சூழல் எனக்கும் கிடைச்சுது. சாலிகிராமத்தின்  தெருக்களில் விஜய் சாரை பல தடவை பார்த்து இருக்கேன். அன்னைக்கு இந்த ரோடுகள்ல சாதாரணமா பைக்குல போய்க்கிட்டு இருந்த அவர், இன்னைக்கு ரசிகர்கள் மனசுல இளைய தளபதியா உசந்து இருக்கார். சாலிகிராமமும் அவர் மாதிரிதான்; ஒவ்வொரு நாளும் வளர்ந்துகிட்டே இருக்கு.

இருந்தாலும், இங்க கட்டடங்கள் வளர்ந்த அளவுக்கு உள்கட்டமைப்புகள் வளரலைனு ஒரு வருத்தம் உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கு. அன்னைக்கு சில நூறு அடிகளுக்கு ஒரு சிமென்ட் குப்பைத்தொட்டிவெச்சு இருப்பாங்க. பழைய ஆளுங்ககிட்ட இருந்த பாசம் மாதிரி அந்தக் குப்பைத் தொட்டிகளும் ஸ்ட்ராங்கானது. இப்போ, அங்கே மாநகராட்சி வைக்கிற பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகள் என்னடான்னா, பத்து நாளுக்குள்ள உடைஞ்சு போகுது; பல பேர் மேல நாமவைக்கிற நம்பிக்கை மாதிரி.

ஸ்கூல் டேஸ்ல 25 பைசாவைக் காணிக்கை போட்டா பரீட்சையில பாஸ் ஆகலாம்கற நம்பிக்கையோட ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரர் கோயிலுக்குப் போவேன். ஆனால், உழைச்சாத்தான் உயர முடியும்கிற உண்மை இப்போதான் எனக்குப் புரியுது.

நான் இப்போ ஒரு மைமிங் கலைஞரா டி.வி-யில் அறிமுகமாகி, 'மானாட மயிலாட’, அப்புறம் சினிமா ஹீரோனு வளர்ந்துட்டு வர்றதுக்கு லேட்டாப் புரிஞ்ச அந்த உண்மையும் ஆரம்பத்துல நான் வாழ்ந்த சாலிகிராம வாழ்க்கையும்தான் அஸ்திவாரம்!''

சந்துகளான சாலைகள்... ப்ளாட்டுகளான கூரைகள்!

- செந்தில் ராஜாமணி
படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு