''இந்த 15 பேரின் உழைப்புதான் எங்க முதலீடு!'' - தன் அருகே பசை வாளிகளுடன் நின்று இருந்த இளைஞர்களைக் கைகொள்ளாமல் கட்டி அணைத்துச் சிரிக்கிறார் நந்தகுமார். சென்னையில் கலை, இலக்கியம், அரசியல், நாளிதழ், வார இதழ் எனப் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் தங்கள் சுவரொட்டிகளை ஒட்ட நாடும் ஒரே நபர்!

”போஸ்டர்ல நாங்க மாஸ்டர்!”
##~##

'இன்னைக்கு சென்னையில போஸ்டர்னா அது நாங்க ஒட்டினதாத்தான் இருக்கும். நாங்க மட்டுமேதான் ஒட்டுறோம்னே எழுதிக்கங்க. அதுக்குக் காரணம், எங்க அப்பா ஆறுமுகம். அவர் 1951-ல் இந்த போஸ்டர் தொழில்ல இறங்கினார். அப்ப இந்தத் தொழில்ல இங்க நிறையப் பேர் இருந்தாங்க. 'நான் தாம்பரம்... நீ ராயப்பேட்டை’னு ஏரியா வாரியா அவங்களுக்குள்ள பிரிச்சுக்கிட்டுத் தொழில் பண்ணினாங்க. அப்ப எங்க அப்பா வசம் மவுன்ட் ரோடு ஏரியா இருந்தது. காலப்போக்கில் மத்தவங்க இந்தத் தொழில்ல இருந்து வெவ்வேற தொழிலுக்குப் போயிட்டாங்க. இப்ப சென்னையில நாங்க மட்டும்தான் இந்தத் தொழில்ல இருக்கோம். எங்க அப்பாவுக்குப் பிறகு நான் தனியா வந்து ஒட்டின முதல் போஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'சிவாஜி’ பட ஆடியோ ரிலீஸ்.

அரசியல் பொதுக்கூட்டம், சினிமா பூஜை, ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ், புது டி.வி. நிகழ்ச்சினு விதம்விதமான போஸ்டர்கள் தினமும் சாயங்காலம் 6 மணிக்கு எங்க கைக்கு வரும். நைட் 9 மணிக்கு மேல்தான் எங்க வேலையே தொடங்கும். விடியவிடிய ஓட்டினா பளபளனு பொழுது விடியறப்ப சென்னை முழுக்கவும் போஸ்டர் ஒட்டி முடிச்சிருப்போம். என் சர்வீஸ்ல ஒரு முறைகூட 'இந்தப் போஸ்டரை லேட்டா ஒட்டிட்டீங்க’னு எந்தப் புகாரும் வந்தது இல்லை. சமயங்கள்ல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்னு சம்பந்தப்பட்ட பட டீமும்  எங்களோட வரும். தாணு, எஸ்.ஜே.சூர்யானு பலர் தங்களோட பட ரிலீஸ் சமயத்துல கூடவே வந்து உற்சாகப்படுத்துவாங்க. அவங்களும் பசை தடவி

”போஸ்டர்ல நாங்க மாஸ்டர்!”

எங்களோட சேர்ந்து போஸ்டர் ஒட்டுறதெல்லாம்கூட நடக்கும். விஜய் நடிச்ச 'குருவி’ பட 100-வது நாள் விழாவில் 'பட வெற்றிக்கு இவங்களும் ஒரு காரணம்’னு மேடையில் கூப்பிட்டு ஷீல்டு கொடுத்தார் தயாரிப்பாளர் உதயநிதி. இது எங்க உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்.

சமயங்கள்ல, 'என்ன நந்து சார், ராயப்பேட்டை பக்கம் நம்ம பட போஸ்டரை நேத்து பாத்தேன். அதுக்குள்ள நம்ம போஸ்டர் மேல வேறொரு போஸ்டரை ஒட்டிட்டீங்களே?’னு சில சினிமாப் பிரபலங்கள் குறைபட்டுக்கொள்வதும் நடக்கும். போஸ்டர் எக்கச்சக்கமா குவியும்போது இந்த மாதிரி நடப்பதும் உண்டு. அதேபோல், 'எங்க போஸ்டர்மேல உங்க பசங்க போஸ்டர் ஒட்டிட்டாங்க’னு அப்பப்ப அரசியல்வாதிகள் சண்டைக்கு வருவாங்க. பேசி சமாதானம் செய்வோம். போலீஸ் கெடுபிடியும் அதிகமா இருக்கும். இதெல்லாம் இந்தத் தொழில்ல சகஜம் சார்'' என்று சிரிப்பவர், ''இவங்க எங்க மாமா. அப்பாகூட ஆரம்பகாலத்துல இருந்து இந்தத் தொழில்ல இருந்தவங்க'' என்று தன் தாய் மாமன் ராஜசேகரை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

”போஸ்டர்ல நாங்க மாஸ்டர்!”

'எனக்கு இப்ப 80 வயசு. 50 வருஷத்துக்கும் மேல் இந்தத் தொழில்ல இருந்தேன். இந்த வயசுலயும் நான் உங்களைப்போல யூத்தா இருக்குறதுக்கு, இந்தப் போஸ்டர் வேலையும் ஒரு காரணம். இப்ப எல்லாம் வண்டியில போஸ்டரை வெச்சுக் கட்டிக்கிட்டுப் போறாங்க. அப்ப எல்லாம் சைக்கிள்தான். ராயப்பேட்டையில் கிளம்பினா பெரியமேடு, தாம்பரம்னு சைக்கிள் சவாரிதான். இப்போ நினைச்சுப் பார்த்தாச் சிரிப்பும், அழுகையும் வர்ற அளவுக்கு ஏகப்பட்ட அனுபவங்கள். ஒருதடவை பிரதமர் நேரு, தி.மு.க-வை விமர்சனம் பண்ணிப் பேசி இருந்தார். அந்தச் சமயத்தில் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இங்க உள்ள காங்கிரஸ்காரங்க நேருவை வரவேற்று போஸ்டர் அடிச்சுக் கொடுத்து ஒட்டச் சொன்னாங்க. தி.மு.க. ஆட்களோ, நேருவை எதிர்த்துக் கண்டன போஸ்டர் அடிச்சுக் கொண்டுவந்து ஒட்டச் சொன்னாங்க; தர்மசங்கடமாப் போச்சு. வேற வழி இல்லாம ரெண்டு போஸ்டர்களையும் வளைச்சு வளைச்சு ஒட்டினோம். போலீஸ் எங்களைத் துரத்தினதும் சந்துபொந்துனு ஓடி ஒளிஞ்சதையும் நினைச்சா இப்பவும் சிரிப்புதான் வருது. எந்தத் தொழிலையும் ரசிச்சு செஞ்சா கண்டிப்பா ஜெயிக்கலாம்கிறதுக்கு நாங்கதான் தம்பி உதாரணம்!'' என்ற ராஜசேகரின் முகத்தில் உழைப்பின் பெருமிதம்.

”போஸ்டர்ல நாங்க மாஸ்டர்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: வி.செந்தில்குமார், ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு